ஞாயிறு, 14 ஜூன், 2020

குளித்தலையில் ஆணவ கொலை .. போலீசும் உடந்தை ...?


savithiri - viveck s.p office
nakkheeran.in --பகத்சிங் : புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தோப்புக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் விவேக்.
பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அருகே உள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் மகள் சாவித்திரி. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இளங்களை மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களின் காதல் விவகாரம் சாவித்திரியின் உறவினர்களுக்குத் தெரிந்தபோது எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், சாவித்திரியை வேறு ஒரு மாப்பிளைக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளது. அதனால் சாவித்திரி – விவேக் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் உதவியுடன் ஒரு காரில் கோயம்புத்தூர் சென்றுள்ளனர்.
குளித்தலை என்ற இடத்தில் காரை மறித்து போலீசார் சோதனை செய்தபோது இளம்பெண் காரில் இருப்பதைப் பார்த்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் விவேக்குக்கு திருமண வயதை அடைவதற்கு நான்கு மாதங்கள் உள்ளது என்பதை அறிந்த போலீசார் இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருவரங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம், ஒன்றியக் கவுன்சிலர் கருப்பையா மன்றும் பெண்வீட்டார் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பெற்றோருடன் தன்னை அனுப்ப வேண்டாம் என்றும் மீறி அனுப்பினால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும், ஏற்கனவே தன்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளதையும் விளக்கி தன்னை காப்பகத்திற்கு அனுப்புங்கள் எனவும் போலீசாரிடம் சாவித்திரி கூறியுள்ளார். 

ஆனால், போலீசார் “காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். நான்கு மாதங்கள் கழித்து விவேக்குடன் திருமணம் செய்து வைக்கப்படும்”; எனத் தெரிவித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று இரவு சாவித்திரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி சடலத்தை அன்று இரவே உறவினர்கள் எரித்துவிட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த விவேக் புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி. பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, துணைச் செயலா
கே.நாடியம்மை, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

அந்த மனுவில் கடந்த புதன்கிழமையன்று காலை 9 மணியளவில் சாவித்திரியின் உறவினர்கள் தன்னை கடத்திச் சென்று கொலைசெய்யும் நோக்கத்தில் கடுமையாகத் தாக்கியதாகவும், பகல் நேரமானதால் அங்கிருந்து தப்பித்து விவேக் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது காதலி சாவித்திரி தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டார் எனவும் நிச்சயமாக அவர் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி கூறுகையில், எங்கள் சங்கம் சார்பிலும்  காவல்  கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. நடந்துள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயமாக இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. அப்படியே தற்கொலையாக இருந்தாலும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது ஏன்?

எனவே, இது திட்டமிடப்பட்ட சாதி ஆணவப்படுகொலையே! எனவே, நடந்துள்ள சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும். தன்னை பெற்றோருடன் அனுப்ப வேண்டாம் எனக்கூறிய பெண்ணிடம் உரிய பாதுகாப்புத் தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பாதுகாப்பு கொடுக்கத் தவறிய போலீசார் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசம், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக