புதன், 24 ஜூன், 2020

சாத்தான் குளம் . தந்தையையும் மகனையும் போலீசார் சித்திரவதை செய்து கொன்றனர்

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்:  கொரோனா தொற்று இருந்ததா?மின்னம்பலம் : சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்: கொரோனா தொற்று இருந்ததா?
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் பென்னிகஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் (56) ஆகியோர் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கோவில்பட்டி கிளைச் சிறையில் பூட்டப்பட்ட நிலையில் ஜூன் 22 ஆம் தேதி இரவு மகன் பென்னிகஸும், ஜூன் 23ஆம் தேதி காலை அவரது தந்தை ஜெயராஜும் இறந்துவிட்ட கொடூரம் தமிழகம் முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இவர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு இன்று வணிகர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். சாத்தான்குளத்தில் இது மக்கள் போராட்டமாக மாறி தூத்துக்குடி, திருநெல்வேலி என தென்மாவட்டம் முழுவதும் பெரும் வேகத்தோடு இந்தப் போர்க்குரல் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை விடுத்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு முக்கியமான விஷயத்தைத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.“சாத்தான்குளத்தில் செல்போன் கடையை அடைக்கக் கோரி காவல் துறையினருக்கும், கடை உரிமையாளரான பென்னிகஸுக்கும் ஜூன் 19ஆம் தேதி மாலையில் வாக்குவாதம் எழுந்து இருக்கிறது. அதை ஒட்டி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்களும் சேர்ந்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, காவலர்கள் சிலர் துணையோடு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதோடு, காவல் துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிந்து, கைது செய்து, ஜூன் 20 அன்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். குற்றவியல் சட்டம் 176(1)(ஏ) பிரிவின்படி குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு எழுகிறது. தாக்கப்பட்டவர்களை நேரில் பார்க்காமலேயே நீதிபதி ரிமாண்ட் செய்திருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார் வைகோ.
மேலும் அவர், “கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ் அவர்களின் ஆசனவாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளரும், காவல் துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம்சாட்டுகிறேன். சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல் துறையினரின் குற்றச்செயல் உறுதி ஆகிறது” என்று தெரிவித்துள்ளார் வைகோ.
கொல்லப்பட்ட ஜெயராஜின் மனைவியும், பென்னிக்ஸின் தாயாருமான ஜெயராணி சாத்தான்குளம் குற்றவியல் நடுவருக்கு அனுப்பிய மனுவில், தன் கணவரையும் மகனையும் போலீஸார் சித்ரவதை செய்து கொன்றுவிட்டனர் என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இறந்த தந்தை, மகன் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கண்ணீரோடு சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் ஜெயராணி தனது கணவர், மகன் ஆகியோரின் உடலைப் பிரேதப் பரிசோதனை நடத்தும்போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். உடனடியாக நீதிமன்றம், “கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அதை வீடியோவாகப் பதிவு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மருத்துவ வட்டாரத்தில் இதுகுறித்து விசாரிக்கையில், “இறந்துபோன தந்தை, மகன் இருவருக்குமே இதய ரீதியான பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. தாக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக இறந்துவிட்டனர். இதில் பையனுக்கு கொரோனா தொற்று தாக்கியிருக்க வாய்ப்புள்ளதாக என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள். முழு முடிவு வந்த பிறகே தெரியவரும்” என்கிறார்கள்.
வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக