வியாழன், 18 ஜூன், 2020

சாலை டெண்டர்கள் கைவிடப்பட்டது .. ஆர் எஸ் பாரதி வழக்கை வாபஸ் பெற்றார்

  மாலைமலர் : சென்னை: கிராமப்புற இணையதள சேவைக்கான பைபர் நெட் டெண்டர்
மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘டெண்டரில் யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாக, அரசியல் காரணங்களுக்காக வழக்குத் தொடரபட்டுள்ளது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
‘ஆர்.எஸ். பாரதி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்துவிட்டது.


அது தொடர்பான புகாரை முடித்துவைத்தது குறித்து ஆர்.எஸ்.பாரதிக்கும் தகவல் அனுப்பியுள்ளது’ என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெண்டர் நடைமுறை இன்னும் முடியவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதி, டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டை சுமத்த முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அத்துடன் வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என ஆர்.எஸ்.பாரதி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி வழக்கை ஒத்தி வைத்தார். அதன்படி இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிராக தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் ஆர்.எஸ்.பாரதி வாபஸ் பெற்றார். இதனையடுத்து வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக