சனி, 27 ஜூன், 2020

ஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து?

ஊழல் டெண்டர் ரத்து: உதயகுமார் பதவிக்கு ஆபத்து? மின்னம்பலம  :  தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக பாரத் நெட் என்ற திட்டத்தின் கீழ் கிராமப் புறங்களை இணைய வழி இணைக்கும் திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது. 1950 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டுமென்றும் முதன் முதலில் அறப்போர் இயக்கம் வெளிக் கொணர்ந்தது. இந்த அறப்போரின் முடிவாக ஒன்றிய வர்த்தக, தொழில் துறை அமைச்சகம் தமிழ்நாடு அரசின் 1950 கோடி ரூபாய் டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது.
பைபர் ஆப்டிக் கேபிள் பாரத்நெட் டெண்டர் நிபந்தனைகள் பாரபட்சமானதாகவும் போட்டியை குறைக்கும் வண்ணம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது.
சந்தோஷ்பாபு வகுத்த டெண்டர்
ஒன்றிய அரசின் நிதியுதவியோடு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ஃபைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைய இணைப்பைக் கொண்டு சேர்க்கும் திட்டம்தான் பாரத் நெட். கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்.தான் இந்தத் திட்டத்துக்கான டெண்டர் நிபந்தனைகளை பல மாதங்கள் உழைத்து உருவாக்கினார்.
இதன் பிறகு இந்த டெண்டருக்கான ஒப்புதல் முதல்வர் அலுவலகத்தால் பெறப்பட்டது. 2019 டிசம்பர் 5, 6 தேதிகளில் பேக்கேஜ் ஏ, பேக்கேஜ் பி, பேக்கேஜ் சி, பேக்கேஜ் டி என 1950 கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு டெண்டர்களாக வெளியிடப்பட்டன.
நிபந்தனைகளை மாற்ற அழுத்தம்
சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். வடிவமைத்த நிபந்தனைகள் தகுதியுள்ள பல நிறுவனங்கள் போட்டியிடும் அளவுக்கு அமைக்கப்பட்டன. ஆனால் அதன் பின் ஜனவரி மாதம் இந்த டெண்டர் விதிமுறைகளில் சில மாற்றங்களை செய்யச் சொல்லி சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்.சுக்கு அழுத்தம் தரப்பட்டது. அதாவது ஒரு சில தகுதியற்ற நிறுவனங்கள் கூட இந்த டெண்டரில் பங்கேற்று டெண்டர் பெற்றுவிடும் அளவுக்கு நிபந்தனைகளை நீர்த்துப் போகச் செய்ய அரசுக்குள் இருந்தே ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் சந்தோஷ்பாபு இதைச் செய்ய மறுத்தார். நிபந்தனைகளை தளர்த்தினால் டெண்டருக்கே அர்த்தமில்லாமல் போய்விடும் என்று வாதாடினார். முதல்வரை கூட இது விஷயமாக அவர் சந்தித்தார் என்று அப்போது கோட்டை வட்டாரத்தில் கூறினார்கள்.
மறுத்ததால் மாற்றப்பட்ட சந்தோஷ்பாபு
ஆனாலும் செருப்புகேற்ப காலை வெட்ட மறுத்த சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு கைத்தொழில் துறைக்கு அனுப்பப்பட்டார். சந்தோஷ்பாபுவுக்கு பதிலாக ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. மேலும் டெண்டரை வெளியிட்ட தகவல் தொழில் நுட்பத் துறைக்கு உட்பட்ட TANFINET இயக்குனராக இருந்த சண்முகம் மாற்றப்பட்டு ரவிச்சந்திரன் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். இந்த மாற்றத்தை எதிர்த்து அறப்போர் இயக்கம் தலைமைச் செயலாளருக்கு 2020 ஜனவரி 28 ஆம் தேதி மனு அனுப்பியது. கண்காணிப்பு இயக்கங்களும், ஊடகங்களும் கண்கொத்திப் பாம்பாக கூர்மையாக கவனம் செலுத்தியதால், அப்படியே இதை ஆறப்போட்டனர்.
கொரோனா ஊரடங்கில் மாறிய நிபந்தனைகள்
இந்நிலையில்தான் கொரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சந்தோஷ்பாபு ஐ. ஏ.எஸ். செய்ய மறுத்த மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய டெண்டர் நிபந்தனைகளை வெளியிட்டது தகவல் தொழில் நுட்பத்துறை. டெண்டரின் முக்கிய நிபந்தனைகள் பெரிய அளவில் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. நிறுவனங்களுக்கான டேர்ன் ஓவர், அனுபவம் என பல பிரிவுகள் மாற்றப்பட்டு அதன் மூலம் தகுதி வாய்ந்த நிறுவனங்களை வெளியே தள்ளி, வேண்டப்பட்ட நிறுவனங்களுடன் வெற்றிலை பாக்கு மாற்றத்தான் இந்த மாற்றங்கள் கொரோனா காலத்தில் கொண்டு வரப்பட்டன.
அறப்போர் புகாரில் உண்மை
இதை எதிர்த்து அறப்போர் இயக்கம் மத்திய அரசின் விஜிலென்ஸ் கமிஷன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் என பலருக்கும் புகார் அனுப்பியது. உதயகுமார் இதற்கு பதிலளிக்கையில், ‘பாரத் நெட் திட்டமானது ஒன்பது மாத காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். அந்த அவசரத்தால் டெண்டர் நிபந்தனைகளில் மாற்றம் செய்திருக்கிறோம்.” என்று கூறினார். இந்த நிலையில்தான அறப்போர் இயக்கத்தின் புகாரை ஏற்று மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சகம் இந்த 1950 கோடி ரூபாய் டெண்டர் பாரபட்சமான நிபந்தனைகளைக் கொண்டிருக்கிறது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறை (The Department for Promotion of Industry and Internal Trade) ஜூன் 23 ஆம் தேதி நடத்திய அவசர காணொலி ஆலோசனைக்குப் பின் இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக தலைமைச் செயலாளருக்கு ஜூன் 26 அன்று அனுப்பப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு அரசின் ஏல நிபந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமானவை என்று சுட்டிக்காட்டியதுடன், புதிய டெண்டர்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்வது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்குமாறு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் கண்காணித்து வழி நடத்த வேண்டும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அவசர அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று ஒன்றிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புது டெண்டர்- உதயகுமார்
இது தொடர்பாக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் தி இந்து ஆங்கில நாளேட்டின் சார்பில் தொடர்புகொண்டு கேட்கப்பட்டபோது, “இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க புதிய டெண்டரை மாநில அரசு விரைவில் வெளியிடும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், “பாரத் நெட் டெண்டர் என்பது மத்திய அரசு நிதியளிக்கும் திட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 12,542 கிராமங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை எடுத்துச் செல்வதற்கான தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் லட்சிய திட்டம்.
திட்டத்தில் 100 சதவீத வெளிப்படைத்தன்மை உள்ளது. இதில் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை. சிலர் அரசாங்கத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தை நகர்த்தியபோது, ​​இரு தரப்பினரையும் ஆராய்ந்த பின்னர், அத்தகைய குற்றச்சாட்டை உறுதிப்படுத்த எந்தவொரு பொருளும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் ஒன்றிய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மறு டெண்டருக்கு அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் ஒரு கூட்டத்தை கூட்டி மறு டெண்டர் வழங்குவோம்” என சொல்லியிருக்கிறார் அமைச்சர் உதயகுமார்.
உதயகுமார் பதவி விலக வேண்டும்
ஆனால் அறப்போர் இயக்கமோ “இதன் மூலம் அறப்போர் இயக்கத்தின் புகார் உண்மை என்பதும் அமைச்சர் உதயகுமார் மீண்டும் மீண்டும் இதை மூடி மறைக்க முயன்றார் என்பதும் ஊர்ஜிதமாகிறது. துறை அமைச்சர் உதயகுமார் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையேல் முதலமைச்சர் உடனடியாக அமைச்சர் உதயகுமாரை பதவி விலக்க வேண்டும். துறைச் செயலாளரான ஹன்ஸ் ராஜ் வர்மா, TANFINET இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். புதிய டெண்டர் போடும் பட்சத்தில் பாரபட்சமின்றி போட்டியை குறைக்கா வண்ணம் சந்தோஷ்பாபு ஐ.ஏ,.எஸ். வடிவமைத்தபடி டிசம்பர் 2019 வெளியிட்ட விதிகளுடன் வேண்டும்.
காலையில் இருந்து அமைச்சர் உதயகுமார் அனைத்து பேட்டிகளிலும் டெண்டர்களை ரத்து செய்யவில்லை என்று சொல்லி வருகிறார். மேலும் நீதிமன்றம் உங்கள் செட்டிங் டெண்டருக்கு ஆதரவாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. பொய் சொல்லி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கி கொள்ளவேண்டாம்” என்கிறார்கள் அறப்போர் இயக்க நிர்வாகிகள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக