செவ்வாய், 23 ஜூன், 2020

இந்தியா சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வீடியோ ...


news 18  : லடாக் பகுதியில் இந்திய - சீன படைகள் இடையே மோதல் நடந்து சில நாட்களில், சிக்கிமில் மீண்டும் இரு தரப்பு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், சீன அதிகாரியை இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். இருதரப்பினரும் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தபடி இருக்கின்றனர்.
பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் கூச்சலிடுகின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது.
இப்படி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டிருந்த நிலையில், இந்திய வீரர்களால் தாக்கப்பட்ட ஒரு சீன வீரருக்கு எதுவும் ஆகவில்லையே என இந்திய அதிகாரி கேட்கிறார். எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்றும், எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பதும் உறுதி செய்யப்படவில்லை.


இதற்கிடையே, இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கல்வான் எல்லையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மத்தியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக