செவ்வாய், 23 ஜூன், 2020

அடிக்காதீங்க... அடிக்காதீங்க... கதறி துடிக்கும் தாய்!!! .. கோயம்புத்தூரில் அதிர்ச்சி சம்பவம்!!

நக்கீரன் :shops - police -
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னாளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது இப்படியிருக்க, கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்று போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவானது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவ சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது


இந்நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு (22/06/2020) மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். தந்தை, மகன் இருவரும் அடுத்ததடுத்து உயிரிழந்ததற்குக் காரணம் போலீசாரின் கடுமையான தாக்குதலே என்கின்றனர் உள்ளூர் பொதுமக்கள். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் மனதை விட்டு நீங்காத நிலையில், கோயம்பத்தூர் ரத்தினபுரியில்  நடந்த ஒரு சம்பவம், தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 'அறிவிக்கப்பட்ட 8 மணி ஆகிவிட்டது கடையை சாத்த வேண்டும்' என்று இரவு நேர டிபன் கடை ஒன்றில் கூறுகிறார் போலீஸ்காரர். 'கடைக்கு மூன்று மாதமாக வாடகை கொடுக்கவில்லை சற்று பொறுத்துக்கொள்ளுங்கள்' என கடைக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.

அப்போது வாக்குவாதம் ஆகிறது. இதில் கடைக்காரரின் மகனை போலீஸ்காரர் கடுமையாக தாக்குகிறார்கள். 'அடிக்காதீங்க, அடிக்காதீங்க' என தாயார் கதறுகிறார். 'படிக்கிற பையன் சார்' என கெஞ்சுகிறார்.
'ஸ்டேஷனுக்கு வா' என அந்த பையனை அழைக்கின்றனர் போலீசார். 'எந்த ஸ்டேஷனுக்கு வேணாலும் நான் வர்றேன் சார், அவனை விட்டுடுங்க' என கெஞ்சுகிறார். போலீசார் நைசாக பேசி ஜீப்பை வரவழைத்து அந்த கடைக்காரர்களின் மகனை ஜீப்பில் ஏற்றிச் செல்கின்றனர். மகனை என்ன செய்யப்போகிறார்களோ என கதறி துடிக்கிறார் அவரது தாய். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக