ஞாயிறு, 14 ஜூன், 2020

தோனி 'பயோபிக்' நாயகன்: சுஷாந்த் சிங் தற்கொலை!

தோனி 'பயோபிக்' நாயகன்: சுஷாந்த் சிங் தற்கொலை!மின்னம்பலம் : மும்பையில் உள்ள தனது வீட்டில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பையில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த இவரது மரணம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 சுஷாந்த் சிங் ராஜ்புட் சின்னத் திரையின் மூலம் அறிமுகமாகி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர். பவித்ரா ரிஷ்டா என்ற சீரியலின் மூலம் புகழ்பெற்ற இவர் சினிமாவில்  நுழைந்தார். சேத்தன் பகத்தின் அதிகம் விற்பனையான புத்தகமாக கருதப்படும் 'தி த்ரீ மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட அபிஷேக் கபூரின் 'கை போ சே' படத்தின் மூலம் சுஷாந்த் சிங்  அறிமுகமாகி ஒரே இரவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர


2013 ஆம் ஆண்டு வெளியான 'கை போ சே'வுக்குப் பிறகு, சுஷாந்த் பரினிதி சோப்ராவுடன் 'ஷுத் தேசி ரொமான்ஸ்' படத்தில் பணியாற்றினார். பின்னர் பல படங்களில் நடித்த இவர், அமீர் கானுடன் 'பிகே', 'கேதார்நாத்' போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களை வழங்கினார். இன்றுவரை அவரது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுவது 'எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' ஆகும். திரையில் தோனியை கண்முன் கொண்டு வந்த இவர் இந்தியா முழுவதும் இப்படத்தின் மூலம் அறியப்பட்டார். திபாகர் பானர்ஜியின் 'டிடெக்டிவ் பியோம்கேஷ் பக்ஷி' என்ற படத்தில் தோன்றி தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார் சுஷாந்த். அவர் கடைசியாக 'சிச்சோரி' என்ற படத்தில் ஷ்ரத்தா கபூருக்கு ஜோடியாக நடித்தார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று காலை சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தற்போதைய நிலையில் தெரியவில்லை.
கடந்த ஜூன் 3ஆம் தேதி, சுஷாந்த் இன்ஸ்டாகிராமில் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சோகமான கீழ்கண்ட கவிதை வரிகளை எழுதியிருந்தார்: "கண்ணீர் துளிகளிலிருந்து மங்கலான கடந்த காலம் மறைவுறுகிறது/ முடிவில்லாத கனவுகள் புன்னகையின் வளைவைச் செதுக்குகின்றன/ அதிவேகமான ஒரு வாழ்க்கை/இருவருக்கும் இடையிலான உரையாடல்" என பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த பதிவுக்கு பின் அவர் மனதுக்குள் உள்ள அழுத்தமும், அவர் எடுக்கவிருந்த இந்த விபரீத முடிவும் யாரும் எதிர்பாராதது. முன்னணி பாலிவுட் நடிகர்கள், கலைஞர்கள் அவரது அதிர்ச்சிகரமான மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோரை தொடர்ந்து தற்போது சுஷாந்தின் மறைவு பாலிவுட்டை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
-முகேஷ் சுப்ரமணியம்


மின்னம்பலம் : பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய திரை உலகில் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
‘இன்னும் பயணிக்க நீண்ட தூரம் இருக்கும் நிலையில், ஏன் இந்த இளம் வயதிலேயே தன் உயிரை அவர் மாய்த்துக் கொண்டார்?’ என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர். அவரது மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்இறப்பதற்கு முன்பு கடைசியாக சுஷாந்த், தனது நண்பர் ஒருவரிடம் ஃபோனில் பேசியதாகத் தெரியவந்துள்ளது. அந்த நண்பர் ஒரு திரையுலக பிரபலம் என்றும், அவர் யார் என்பதை போலீசார் இதுவரை வெளிப்படுத்தவில்லை எனவும் டைம்ஸ் நவ் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. மேலும் சுஷாந்தின் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள மெடிக்கல் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் சுஷாந்த் இறப்பதற்கு முந்தைய தினம் அவரது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இரவு தாமதமாக உறங்கச் சென்றதால் காலையில் எழுவதற்கு நேரம் ஆன போதும் வீட்டில் உள்ள வேலையாட்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்தத் தகவல்களை சுஷாந்தின் நெருங்கிய நண்பர்கள் யாரும் உறுதிபடுத்தவில்லை.
சுஷாந்த் ஆறு மாத காலமாக மன அழுத்தத்திற்கான சிகிச்சையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. சுஷாந்தின் உடல் பந்ராவில் உள்ள அவரது வசிப்பிடத்தில் இருந்து டாக்டர்.ஆர்.என்.கூப்பர் முனிசிபல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவரது மரணசெய்தி தங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சுஷாந்தின் பிரிவால் வருந்தித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக