ஞாயிறு, 14 ஜூன், 2020

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா .. தீவிர சிகிச்சை

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா சென்னை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைதினத்தந்தி : ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
;சென்னை, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கட்டுப்பட மறுக்கிறது தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், கொரோனா பரவல் கட்டுப்பட மறுக்கிறது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 1,487 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 பேருக்கும்,
திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேருக்கும்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 22 பேருக்கும் நேற்று தொற்று உறுதி
செய்யப்பட்டது. 42 ஆயிரத்தை தாண்டியது தமிழ்நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 687 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 444 ஆகவும் உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 30 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று பலியானவர்களில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியும் (வயது 61) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

பழனி, சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலம் 156-வது வட்டத்துக்கு உட்பட்ட முகலிவாக்கம் மதனந்தபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு இவர் கடந்த சில தினங்களாக நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். கடைசியாக கடந்த 10-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த செரப்பனஞ்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார்.

எம்.எல்.ஏ. பழனிக்கு நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் எம்.எல்.ஏ. பழனிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பழனியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்றும், விரைவில் அவர் குணம் அடைவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

பரபரப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி கடந்த புதன்கிழமை மரணம் அடைந்தார்.

இந்தநிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக