ஞாயிறு, 14 ஜூன், 2020

சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது: நிபுணர்கள்

சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது: நிபுணர்கள்
மின்னம்பலம் : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என சர்வே வெளியிட்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த சர்வே தற்போதைய சூழலைப் பிரதிபலிக்கவில்லை என்றும், உண்மையை ஏற்றுக்கொள்வதில் அரசு பிடிவாதம் காண்பிப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் சமூகப் பரவல் நடைபெறுவது உண்மை என மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா கடந்த 11ஆம் தேதியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கொரோனா குறித்த சர்வே முடிவுகளை வெளியிட்டு, “கொரோனா பரவலின் சமூக பரிமாற்றக் கட்டத்தில் இந்தியா நிச்சயமாக இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தொற்று நோயியல், பொது மருத்துவம், மருந்தகத் துறை நிபுணர்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் எம்.சி.மிஸ்ரா, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிட்டார். அவர் கூறுகையில், “ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும், பொதுமக்கள் அதிக அளவு வெளியே சென்று வந்ததாலும் தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று இல்லாத பகுதிகளிலும்கூட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமூகப் பரவல் ஏற்பட்டதை அரசு தாமாக முன்வந்து ஒப்புக்கொள்வதற்கான தகுந்த நேரம் இது. அப்போதுதான் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், அதே நேரம் தங்களுக்கு வராது என்ற மனநிறைவுடனும் இருக்க மாட்டார்கள்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் போக்கைக் கண்காணிக்க முதல் செரோ ஆய்வில், சுமார் 65 மாவட்டங்களில் இருந்து கணக்கெடுக்கப்பட்டது. அதன் முடிவில் 26,400 பேரில் 0.73 சதவிகிதம் பேர் கொரோனா வைரஸுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், கொரோனா பரவல் தன்மையை இந்த எண்ணிக்கையிலான சோதனையை வைத்து மட்டும் நிர்ணயிக்க முடியாது என்று மிஸ்ரா கூறினார்.
முன்னணி தொற்று நோயியல் நிபுணர் ஷாகித் ஜமீல், இந்தியாவில் சமூகப் பரவல் நிலை வெகு காலத்துக்கு முன்பே வந்துவிட்டதாகக் கூறுகிறார். “எனினும் அதை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒப்புக்கொள்ளவில்லை. ஐசிஎம்ஆர் கொடுத்த தரவுகள்கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 சதவிகிதம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களோ, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களோ இல்லை என்று கூறுகிறது. இது சமூகப் பரவல் இல்லாமல் வேறு என்ன?” என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.
பிரபல நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த்குமார், ஐசிஎம்ஆர் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், டெல்லி, அகமதாபாத், மும்பை போன்ற இடங்களில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டது என்பதை மறுக்க இயலாது என்று கூறுகிறார். “இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வகையில் வைரஸின் தாக்கத்தை அனுபவித்து வருகிறது. கொரோனா பரவல் உச்சமும் வேறுபடுகிறது. ஐசிஎம்ஆரின் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதத்தைப் பிரதிபலிக்கிறது. அப்போது நாம் சிறந்த நிலையில் இருந்தோம். ஏப்ரல் நிலைமையைக் குறிக்கும் ஆய்வின் அடிப்படையில் தற்போது சமூகப் பரவல் இல்லை என்று கூறுவது தவறானது” என்ற கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.
போர்டீஸ் எஸ்கார்ட்ஸ் ஃபரிதாபாத்தின் நுரையீரல் துறைத் தலைவர் டாக்டர் ரவி சேகர் ஜா, இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறிவிட்டதை உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார். “கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் தொடர்பு தடமறிதலை அரசு நிறுத்திவிட்டது. முன்பு இதை அரசு கடுமையாக செய்து கொண்டிருந்தது. ஆனால், கடந்த 7-10 நாட்களில் டெல்லியில் அல்லது வேறு எங்கும் எந்த அரசாங்கமும் அதைச் செய்யவில்லை. சமூகப் பரவல் நடக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால், அதை ஏற்கவில்லை” என்று அவர் குறிப்பிடுகிறார். அரசின் சர்வே நிச்சயமாக தற்போதைய நிலைமையைப் பிரதிபலிப்பதாக இல்லை. ஏப்ரல் இறுதியில் இந்தியா நல்ல நிலையில் இருந்தது என்ற அரவிந்த் குமார் வாதத்தையும் வழிமொழிந்தார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக சுகாதார மையத்தின் உதவி பேராசிரியர் டாக்டர் விகாஸ் பாஜ்பாய், “கொரோனா வைரஸ் பாதிப்பை இந்தியாவில் கையாளுவதற்கு உண்மையை ஏற்றுக்கொள்ளாத பிடிவாதம்தான் முக்கியம் என்று அவர்கள் எண்ணி விட்டார்கள் என்றால் அவர்களுக்குக் காரணங்களைக் காட்டுவதில் அர்த்தமில்லை. ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாத நிலையில் தற்போதைய சூழல் உள்ளது” என்று கூறியுள்ளார்.
போர்டீஸ் எஸ்கார்ட்ஸ் ஃபரிதாபாத்தின் நுரையீரல் மற்றும் மயக்கவியல் துறையின் இயக்குநர் டாக்டர் மனோஜ் கோயல், “தேசிய அளவில் சமூகப் பரவல் இருப்பதாக நம்புவது சரியல்ல, ஆனால் அது நிச்சயமாக டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் போன்ற சில நகரங்களில் நடைபெறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறை நிபுணர்களின் இந்தியா சமூகப் பரவலை அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ள கருத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக