திங்கள், 22 ஜூன், 2020

மரண ரயில் பாதையில் இறந்த மலேயா தமிழர்கள்... வீடியோ


noelnadesan.com : இரண்டாம் உலகப்போர்க்காலத்தில் 70000- 80000 தமிழ்மக்கள் பட்டினி மற்றும் தொற்றுநோயால் அன்னிய நிலத்தில் கூட்டமாக இறந்தார்கள் என்ற தகவல் எனக்கு புதுச்செய்தியாக இருந்தது. எமது தமிழர்களது வரலாற்றுக் குறிப்புகளில் பொய்களும் புளுகுகளும் இடம்பெறும் போது உண்மைச்சம்பவங்கள் புறக்கணிக்கப்படுகிறது. இதனால் வரலாற்றில் இவர்களது மரணங்கள் கிழிந்த பக்கங்களாகிவிட்டன.
இரண்டாவது உலகப்போரில் மலேயா, சிங்கப்பூரை வேகமாகக் கைப்பற்றியது யப்பானிய இராணுவம். அங்கிருந்த பிரித்தானிய அவுஸ்திரேலியப் படைகளும் மற்றைய சிவில் பதவி வகித்த ஆங்கிலேயரும் சரணடைந்தார்கள். மலேயாவில் பிரித்தானிய முதலாளிகள் சரணாகதி அடைந்ததால் இரப்பர் தோட்டத்தில் பிரித்தானிய காலனி முகாமைத்துவத்தில் வேலை செய்த தமிழ்த்தொழிலாளிகள் நிர்க்கதியாகத் தவித்தார்கள். இவர்களை இரயில்வே வேலைத்திட்டத்திற்குக் கூலிகளாக இரயில்வே பெட்டிகளில் அடைத்து குடும்பங்களாக தாய்லாந்திற்கு யப்பானிய இராணுவ நிர்வாகம் அனுப்பியது.
பர்மா எல்லையை நோக்கி இந்த இரயில் பயணம் தண்ணீர், உணவு என்பன குறைந்த நிலையில் பலநாள் பயணமாக நீடித்தது. இவர்களுடன் சிங்கப்பூர், மலேயாவில் சரணடைந்த அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் பிரித்தானிய போர்கைதிகளும் இருந்தார்கள்.


பிற்காலத்தில் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட ஒல்லாந்து போர்க்கைதிகளையும் சேர்த்து யப்பானிய இராணுவம் தாய்லாந்தின் எல்லையில் இருந்து பர்மாவுக்கு இரயில்வேப்பாதையை அமைத்தது. இந்த வேலையில் ஏராளமானவர்கள் மரணமடைந்ததால் அந்த இரயிலை மரண இரயில் என அழைத்தார்கள்.
இந்த இந்த வேலைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஏராளமான அவுஸ்திரேலியர்கள் மரணமானார்கள் என்பதை அறிந்தபோது முப்பது வருடகாலமாக இந்நாட்டில் வசித்ததாலும் இந்நாட்டில் வரலாற்றின் ஓர் பகுதியான பர்மாஇரயிலைப் பார்க்கும் நோக்கத்தில் மூன்று இரவுகள் தங்கி பார்த்துவர பாங்கொக்கில் இருந்து கிட்டதட்ட 50 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ள காஞ்சனபுரிக்கு வாடகைக் காரில் சென்றேன்.
காஞ்சனபுரி, ஆற்றோரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம். இங்கு மிகவும் குறைந்த விலையில் தங்க ஹோட்டேலும் உண்பதற்கு உணவும் கிடைத்தது. அத்துடன் இலங்கை போகும் வழியில் பாங்கொக்கில் இறங்கியதால் அதிக பணச்செலவில்லை.
எனது ஹோட்டலில் காலை எழுந்து உணவிற்கு வரும் போது ரெஸ்ரோரண்டில் ஒரு ஜப்பானியர் இருந்தார். அவர் பெயர் தனகா. அவருடன் பேசியபோது பர்மாவில் பயணப் பத்திரிகையின் நிருபராகக் கடந்த 8 வருடங்களாக கடமையாற்றுவதாகவும் தற்பொழுது டோக்கியோ போகும் வழியில் விடுமுறைக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.
இருவரும் பர்மா பற்றிய விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, “உங்களது வேலை என்ன?” எனக்கேட்டார்.
‘நான் மிருகவைத்தியர்’ என்றேன். ‘நல்லவேலை” என்றார் அப்பொழுது நான் ‘இருவரும் எமது வேலைகளை மற்றிக்கொள்ளுவோமா? ‘ என்றபோது சிரித்தார்.
நான் இருந்த ஹோட்டல் கவாய் நதி அருகே உள்ளது. அங்கிருந்து நடைதூரத்தில் The Bridge on the River Kwai என்ற பிரபலமான திரைப்படத்தில் வந்த பாலமிருக்கிறது.
இது திரைப்படத்திற்காக புதிதாக உருவாக்கியது. தற்போது பாலமிருக்கும் இடம் உண்மையான கவாய் நதியல்ல. இது மீகொங் நதியின் கிளை நதி. ஆனால் , இதுவே கவாய்நதியென தற்போதைய உல்லாசப்பிரயாணிகள் நம்புகிறார்கள்.
இந்தப்பாலம் படத்திற்கு ஏற்ப நகரத்தின் முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டது. தற்போது இந்தநதியை கவாய் நதி எனத் தாய்லாந்து அரசும் அங்கீகரித்துள்ளது. ஆனால், பெரிய கவாய் காஞ்சனபுரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. தற்பொழுது இதையும் சிறிய கவாய் நதி எனக்கூறுகிறார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின் முன்பு பிரித்தானியாவோடு நட்பு ஒப்பந்தத்தில் இருந்த யப்பான் ஏன் எதிராகப் போரில் ஈடுபட்டது?
இதற்கு முதல் காரணம் அமெரிக்கா. அமெரிக்கா கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பலம்பொருந்திய நாடாகியதும் பிரித்தானியக்கடற்படையை அமெரிக்க கடற்படைக்கு சமமாகக் குறைக்கும்படி நிர்பந்தித்ததுடன், யப்பானுடனான பிரித்தானியாவின் நட்பில் இருந்து விலகவைத்தது.
தனிமைப்படுத்தப்பட்ட யப்பான் ரஷ்சியாவோடு போர் புரிந்து பெருவெற்றியடைந்ததுடன் ஜேர்மனி இத்தாலியுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டு சீனாவை ஆக்கிரமித்தது.
யப்பான், சீனாவுடன் போரில் ஈடுபட்டதற்காக அமெரிக்கா பொருளாதாரத்தடையை விதித்தது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு யப்பானில் ஏற்பட்டு யப்பானியப் பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்பட்டது.
பொருளாதார சிக்கல் மற்றும் தனிமைப்படுத்தலால் ஐரோப்பிய நாடுகளின் ஆசியக் காலனி நாடுகளைத் தன்வசப்படுத்துதலுக்கான ஆரம்பமாக ஹவாயில் உள்ள பேள் துறைமுகத்தில் உள்ள அமெரிக்கப் போர்க் கப்பல்களை யப்பானிய விமானங்கள் தாக்கியழித்தன
யப்பான், மலேயா- சிங்கப்பூரைக் கைப்பற்றியது. அக்காலத்தில் சுதந்திரநாடான தாய்லாந்து யப்பானுக்கு நட்புறவாகியது.
தாய்லாந்தில் இருந்து பர்மாவுக்குச் சென்று இந்தியாவைக் கைப்பற்றும் யப்பானிய இராணுவத்தின் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த இரயில்பாதை.
மலைப்பகுதியான தாய்லாந்து – பர்மிய எல்லைப்பிரதேசத்தில் இரயில் பாதைபோடுவதற்கு யப்பானிய இராணுவம் முடிவெடுத்தது. ஆரம்பத்தில் தொழிலாளர்களையும் பின்பு கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களை வைத்து இந்த இரயில் போடப்பட்டபோது உணவு சுகாதாரம் எதுவும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள்.
எனது பயணத்தில் முதலாவதாக நான் சென்ற இடம் நகரத்தின் அருகில் உள்ள இரண்டு மயானங்கள். அவை அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியர்களால் மிகவும் அழகாகப்பராமரிக்கப்படுகிறது.
இந்த இரயில்வே பணியில் இறந்தபோது வேறு இடங்களில் புதைக்கப்பட்டவர்களை மீண்டும் எடுத்து, இந்த மயானத்தில் அவர்களின் விபரங்களுடன் புதைத்திருக்கிறார்கள். அவர்களது உறவினர்கள் பிரித்தானியா அவுஸ்திரேலியாவில் இருந்து வந்து அஞ்சலி செலுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.
கைதிகளது அக்காலத்து தங்குமிடத்தின் மாதிரியை ஆற்றோரத்தில் வடிவமைத்திருக்கிறார்கள். கைதிகள் ஒருவருக்கொருவர் நெருக்கியபடி படுக்கும் மூங்கில் தட்டுகள் அக்கால நிலைமையை நமக்கு காட்டும்.
கைதிகளாக இருந்தவர்கள் பாவித்த வைத்திய உபகரணங்களுடன் அன்றாடப் பொருட்களையும் காணமுடியும்.

அங்கு கைதிகள் வரைந்த ஓவியங்கள், எனது நெஞ்சில் தைத்தது. மிகவும் பரிதாபமானவை. சிறைக்கைதிகளின் உருவங்கள் கேலிச்சித்திரங்களாக தோன்றின. ஓவியமாக வரையப்பட்ட தோல் போர்த்த எலும்புக்கூடுகள், தண்டனைக்கு உள்ளாக்கப்படுபவர்கள், காயங்கள் மற்றும் பெரிபெரி நோய் கொண்ட மனிதர்கள் கொண்ட சித்திரங்கள் எவரது உள்ளத்தையும் கலங்க வைக்கும்.
கண்காட்சிசாலையொன்றில் முழு யுத்தத்தின் காரணங்கள் சம்பவங்களை ஒளி, ஒலியாக வைத்திருக்கிறார்கள். அத்துடன்அக்கால நிலவமைப்பையும் மாடலாக செய்து வைத்திருக்கிறார்கள். அங்குதான் ஆசிய தொழிலாளிகள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சீனர், மலேயர், இந்தோனேசியர் எனக் கலந்து இருந்தாலும் 80வீதமானவர்கள் மலேயத்தமிழர்கள். இவர்கள் எல்லோரையும் ரோமுசா (Rumusha) எனப் பெயரிட்டிருந்தார்கள். அவர்களில் எவருக்கும் நினைவுச்சின்னமோ, குறிப்போ காஞ்சனபுரியில் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து பிரித்தானியரால் அழைத்துச் செல்லப்பட்டு மலேயாவில் வாழ்ந்து , தாய்லாந்தில் அவர்கள்இறந்தார்கள்.
கிட்டத்தட்ட 20,000 பேர்வரையில் உயிர்தப்பினார்கள் எனச்சொல்லப்படுகிறது. மற்றவர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்ட மனிதர்களாகிவிட்டார்கள்
கண்காட்சியையும் மயானத்தையும் பார்த்த கண்களுக்கும் இதயத்திற்குப் புத்தரது வடிவம் மருந்தாக இருந்தது. காபுன்குகைக்கோயில் ( Khaopoon Cave Temple) காஞ்சனபுரிக்கு அருகே நதியோரத்தில் அமைந்துள்ளது.

இங்கே அழகானஉறங்கும் புத்தரது சிலையுள்ளது. அங்கிருந்து தொடர்ந்து கீழ் இறங்கினால் கீழே செல்லும குகையுள் 9 அறைகள் உள்ளன. இருளில் கல்லில் செதுக்கிய படிகளால் இறங்கவேண்டும். பல நிலைகளில் புத்தர் இருந்தார் ஆனால் எனது மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டதாலும் அந்தக்குகையில் நான் மட்டுமே இருந்தபடியாலும் புத்தரை மட்டும் நம்பி இறங்காது 4 அறைகளுடன் திரும்பி மேலே வந்துவிட்டேன்

அடுத்தநாள் காஞ்சனபரியில் இருந்து வாடகைக்காரில் சென்றபோது 40 கிலோமீட்டரில் ஒரு புராதன பூங்கா இருந்தது. அதில்இரண்டு 800 வருடத்திற்கு முன்பான கோவில்கள் இருந்தன. அது கம்போடியாவில் உள்ள கோவில் வகையை சேர்ந்ததுஎன்றபோதும் அது எனக்குப்பல இந்துக்கோவில்களை நினைவுபடுத்தியது. மகாயான பிரிவைச்சேர்ந்த எட்டு கைகளை உடைய அவலேஸ்வரருக்கான(Avalokiteshvar கோவில். தேரவாத பௌத்தபிரிவு உள்ள தாய்லாந்தில் அவலேகேஸ்வரருக்கு மட்டும் இடமுண்டு..
அங்கிருந்து சிறிது தூரத்தில்அழகான அருவியிருப்பதாக (Huai Mae Khamin Waterfall) அறிந்து அங்கு சென்று பார்த்தபோது அது அப்பொழுது வரண்டு போயிருந்தது.

ஹேல்பயர் பிளேஸ்(Hellfire place) என்ற இடம் தற்பொழுது அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அழகாக பாதுகாக்கப்படுகிறது. இதுவே மலைகளைக் குடைந்து இரயில் பாதை அமைத்த இடம். அக்காலத்தில் பாறைகளைஅலவாங்குபோன்றவைகளைப் பாவித்து குடைந்து அங்கு வெடிமருந்தை வைத்து இரவு பகலாக உடைக்கும்போது ஏற்படும் நெருப்பிற்காக ஆங்கிலத்தில் இந்தப்பெயர் வந்தது.
தற்போது இந்த இடம் இளம் அவுஸ்திரேலியர்களுக்கு தங்களது மூதாதையர் நினைவாக ஒரு யாத்திரைத்தலமாக மாறியிருக்கிறது. தற்பொழுது அது இயற்கையான வனம் அழகாகவும்அமைதியாகவும் தோற்றமளிக்கிறது. ஒரு சில தண்டவாளங்கள் மட்டும் தற்பொழுது இருக்கின்றன . பல்லாயிரக்கணக்கானவர்கள் சித்திரவதைப்பட்டு இறந்தவர்கள் என்பதை நினைத்தபோது மனத்தைக்குடையும். இந்த இடத்தை எந்தவிதமான கட்டணமற்று பார்க்கமுடியும்
உண்மையாக மரண இரயிலைப்போட்டவர்கள் இருந்த இடம் Tham Kra Sae. இந்த இடத்திலே அக்காலத்தில் கைதிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்ததன. ஆற்றுக்கு மேலாக பாலம் கட்டிய இடம் இதுவே. தற்பொழுது அந்தப்பாலத்தில் உல்லாசப்பிரயாணிகளுக்கான இரயில் காஞ்சனபுரியில் இருந்து செல்கிறது.

வாடகைக்காரில் போனபோது பல வாகனங்களில் உள்ளுர் மக்கள் வெளிநாட்டவர் வந்து போனபடியிருந்தார்கள். காஞ்சனபுரியில் இருந்து பலர் இரயிலில் வந்தார்கள். அங்கு சென்ற நான் அந்தத் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர்வரையில் நடந்தேன். அப்போதுஅந்த இரயில் என்னெதிரே வந்தது. அப்பொழுது அங்குள்ள ஒரு குகைக்கோயிலில் ஒதுங்கினேன். அங்கும் புத்தர் சிரித்தபடியிருந்தார். தாய்லாந்தில் எங்கும் புத்தரைத்தவிர்க்க முடியாது.
இந்தப் பிரயாணத்தில் யப்பானிய வீரனது சுயசரிதைப் புத்தகத்தை வாங்கியிருந்தேன். அந்தப்புத்தகத்தில் யப்பானியர்கள் பர்மாவுக்குள் சென்று இந்தியாவின் மணிப்பூர் சென்றதும் அவர்கள் தோல்வி தொடங்குகிறது. யப்பானிய இராணுவம் தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்ததுடன் பிற்காலத்தில் ஏராளமான இராணுவவீரர்களையும் நோய்க்கு பலிகொடுத்தார்கள்.
ஆரம்பத்தில் எவ்வளவு வேகமான வெற்றியை அடைந்த போதும் இறுதியில் அவர்களது முடிவு மிகவும் அலங்கோலமாகவே அமைந்தது. இறுதியில் யப்பானிய உயர் இராணுவ அதிகாரிகள் பலர் விசாரணைக்குட்பட்டார்கள். அதேநேரத்தில் சாதாரண வீரர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.
யப்பான், எப்படி தோல்வியைக் கடந்து தற்பொழுது செல்வந்த நாடாக மாறியதென்பது மற்ற இனத்தவர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியது என்பதை அங்கு சந்தித்த தனகாவுடன் பேசியபோது புரிந்துகொண்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக