திங்கள், 8 ஜூன், 2020

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கார்த்தியும் திருநாவுக்கரசும் கபடி

ksa
நக்கீரன் : கரோனா நெருக்கடிகளால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளைச்
செய்து வருகின்றன அரசியல் கட்சிகள்! காங்கிரஸ் கட்சியிலும் இத்தகைய நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, தனது சொந்த மாவட்டமான கடலூரைத் தவிர்த்து வேறு எங்குமே செல்லவில்லை. அவரவர் மாவட்டங்களில் நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதோடு வீட்டிலேயே இருக்கிறார் கே.எஸ்.அழகிரி. இந்தச் சூழலில், ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ள தொகுதிகளில் அதிரடி விசிட் அடித்து மக்களுக்கான நிவாரண உதவிகளை செய்தார்.

இதனைப் படம் பிடித்து ராகுல்காந்திக்கு அனுப்பியும் வைத்தபடி இருக்கின்றனர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ். அழகிரியே, இத்தகையை நிவாரண உதவிகள் வழங்குவதில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்யாத சூழலில், சிவகங்கை மட்டுமல்லாமல் அனைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதியிலும் கார்த்தி சிதம்பரம் வலுக்கட்டாயமாகச் சுற்றுப்பயணம் செய்து நிவாரண உதவிகள் வழங்குவது எதற்கு? கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்றத்தான் என்று காங்கிரசில் பரவலாக எதிரொலிக்கிறது.

இந்தச் சூழலில், திருச்சி காங்கிரஸ் எம்.பி.யான திருநாவுக்கரசும், தனது தொகுதி மட்டுமல்லாமல் காங்கிரஸின் மற்ற தொகுதிகளுக்கும் கடந்த வாரம் விசிட் அடித்து நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார். காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசை மாற்றிவிட்டுத்தான் கே.எஸ்.அழகிரியை தலைவராக நியமித்தார் சோனியாகாந்தி.

கரோனா காலத்தில் அழகிரி வெளியே வராத சூழலைப் பயன்படுத்தி, கட்சியின் தலைவர் போல தமிழகம் முழுவதும் கார்த்தி சிதம்பரம் வலம் வருவதை அறிந்து, அவர் போடும் திட்டத்தை உடைத்து, தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட தமிழக தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றிட, நிவாரண உதவிகள் வழங்குவதன் மூலம் காங்கிரசில் தாக்கத்தை ஏற்படுத்த கோதாவில் குதித்துள்ளார் திருநாவுக்கரசு.
இவரது நிவாரண உதவிகளும் படம் பிடிக்கப்பட்டு ராகுல்காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து கே.எஸ்.அழகிரி விரைவில் மாற்றப்படவிருக்கிறார் என, சத்தியமூர்த்திபவன் வட்டாரங்களில் பலமாக எதிரொலிக்கும் சூழலில், பதவியைக் கைப்பற்ற கார்த்தி சிதம்பரமும் திருநாவுக்கரசும் கரோனா காலத்தைப் பயன்படுத்தி களத்தில் குதித்திருப்பதுதான் காங்கிரசில் விவாதிக்கப்படுகிற ஹாட் டாபிக்! என்கிறார்கள் கதர் சட்டையினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக