சனி, 27 ஜூன், 2020

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரட்டை கொலை .. அதிர்ச்சி ஆடியோ...வீடியோ லீக்


/tamil.news18.com/ : சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளன. உடல் நலக்குறைவுடன் இருந்த தந்தையும், மகனும் சிறையில் அடைக்க தகுதிச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் யார்? சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்திற்கு காரணமான அதே போலீசார் மீது குவியும் புகார்கள்.. அடுத்தது என்ன?< அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர், விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரி கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தில் மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார். உலகையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்திற்கு நிகராக, அதிகாரம் படைத்த கரங்களால், அப்பாவிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த சாத்தான்குளம் சம்பவம் இந்தியாவையே புரட்டிப் போட்டுள்ளது.
டீக்கடை தொடங்கி, டிக்டாக் வரை ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்பதே விவாதப்பொருளாக மாறியுள்ளது.

 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, தமிழகத்தையே உற்று நோக்க வைத்துள்ள இந்த கொடூரமான சம்பவம் குறித்து பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்தின் முதல் தள அறையில் பூட்டிவைத்து கண்மூடித்தனமாக தாக்கியது குறித்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர், அமுதுண்ணாகுடியைச் சேர்ந்த இசக்கியும் அவரது நண்பரும் பேசிக்கொண்ட ஆடியோ கசிந்துள்ளது.

இந்த ஆடியோவை வைத்து பார்க்கும்போது, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்கள் கொடூரமாக தாக்கப்படுவது வழக்கமான ஒன்று என்பதை அறிய முடிகிறது.ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் தாக்கிய போலீசார் எப்படி உயிர் போக காரணமாக இருந்தார்களோ, அதற்கு நிகராக இருவரையும் காப்பாற்ற தவறியதாக, சாத்தாங்குளம் பெண் மருத்துவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

19 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்ட இருவரும், 20 ஆம் தேதி மாலை 2.30 மணியளவில் தான் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு சாத்தான்குளம் அரசு மருத்துவர் வினிலா இருவரையும் பரிசோதனை செய்து, உடல்தகுதி சான்றிதழ் கொடுத்துள்ளார்.

சிறையில் அடைக்கலாம் என கோவில்பட்டி அரசு மருத்துவர் வினிலா உடல்தகுதி சான்றிதழ் கொடுத்த நிலையில், உடல்நலமின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தது ஏன்?

சாத்தான்குளத்தையடுத்த பேய்க்குளத்தைச் சேர்ந்த மகேந்திரனின் சகோதரர் துரையை கொலை வழக்கில் தேடிவந்த போலீசார், அவர் கிடைக்காததால், மகேந்திரனை அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் தாக்கப்பட்டதால், இரண்டு நாட்களில் மகேந்திரன் மரணம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெயராஜ், பென்னிக்ஸை தாக்கிய அதே எஸ்.ஐக்கள் அடித்த அடி தான் தன்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம் என தென்காசியை சேர்ந்த அவரது மனைவி ஜமுனாபாய் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். டி.எஸ்.பி தலைமையிலான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜாசிங் என்பவர் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடலிலும் காயங்கள் இருப்பதால், தனி விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக