ஞாயிறு, 21 ஜூன், 2020

கொரோனா கொடுமையில் மக்களை சூறையாடும் அரசு .. பெட்ரோல் டீசல் விலை உயர்வு...

தினகரன் : ஊரடங்கு - ஊரடங்கில் தளர்வு-  இல்லையில்லை மீண்டும் முழு  ஊரடங்கு என்று கொரோனா பீதியில் அடுத்த நாள் எப்படி விடியும், என்ன செய்யப் போகிறோம்  என்பதே தெரியாமல் தவிக்கிறார்கள் இந்திய மக்கள். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து எதிர்காலம் பற்றிய கவலையில் மூழ்கிப்போய் உள்ள மக்கள் தலையில் இப்படி ஒரு சுமையை எப்படித்தான் ஏற்றி வைக்க ஆட்சியாளர்களுக்கு மனம் வந்தது என்று தெரியவில்லை.
அதாங்க, தினமும் நம் தலையில் இடியாய் இறங்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயிக்கின்றன.

ஆனால், கொரோனா பீதி காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரியத்துவங்க, கடந்த மார்ச் 16ம் தேதிக்கு பிறகு விலையை மாற்றி அமைக்கவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் கீழ் சென்றது. இருப்பினும், அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக, ஊரடங்கால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு பெட்ரோலுக்கு லிட்டருக்கு ₹10, டீசலுக்கு ₹13 என கலால் வரியை உயர்த்தியது. போதாக்குறைக்கு, மாநிலங்களும் வாட் வரியை உயர்த்தின. அதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்களும் லாபம் பார்த்தன.


கொரோனா பீதி இன்னமும் முழுவதாக ஓய்ந்து போகாத நிலையில், ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அத்தோடு 82 நாட்கள் கழித்து, கடந்த ஜூன் 7ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அன்று தொடங்கிய இந்த விலையேற்றம் 14வது நாளாக நேற்று வரை தொடர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹82.27, அதாவது கடந்த 14 நாளில் ₹6.73 எகிறியுள்ளது. டீசல் விலை ₹7.07 அதிகரித்து லிட்டர் ₹75.29க்கு விற்பனையானது.

இந்த கொரோனாவால் விழுந்த மரண அடியில் இருந்து எழும்ப முயற்சிக்கும் பொருளாதாரத்தை சவக்குழியில் தள்ளி புதைத்துவிடும். தட்டுத்தடு மாறும் பொருளாதாரத்தை கைதூக்கிவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்திருந்தால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்க மாட்டார்கள். கடந்த 6 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான கலால் வரி 258 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 820 சதவீதமும் மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ₹18 லட்சம் கோடி  வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

இப்படி கொள்ளை லாபம் பார்த்துவிட்டு, கொரோனா காலத்திலும் விலையை உயர்த்துவது நியாயமா? அண்மையில் உயர்த்தப்பட்ட கலால் வரியை வாபஸ் பெற்றாலே, பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை தவிர்த்திருக்கலாம். மக்கள் படும்பாட்டையும், பொருளாதாரத்தின் நிலைமையையும் கருத்தில் கொண்டு இனியாவது எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக