ஞாயிறு, 21 ஜூன், 2020

இந்தியா - சீனா எல்லை...: இந்திய ராணுவம் ஆயுதங்களை ஏன்....? BBC ..

சுபம் கிஷோர் - பிபிசி நிருபர் : ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதல்களின் போது பதில் தாக்குதல் நடத்தவில்லை என்கிறது இந்தியா.
ஆணிகள் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகளால் சீன ராணுவத்தினர் தாக்கியதில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர் என இந்திய ராணுவம் கூறுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "இந்திய வீரர்களை அடித்தே கொன்றிருக்கிறார்கள்," என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுபோன்ற சூழ்நிலையில், சீனாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்த இந்திய வீரர்கள் ஏன் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக வினா எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீன வீரர்கள் இருக்கும் இடத்தில் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய ராணுவத்தை அனுப்பியது யார் என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறினார்.
எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள் அனைவரிடமும் ஆயுதங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக அவர்கள் தங்கள் சாவடிகளில் இருந்து வெளியே வரும்போது, ஆயுதங்கள் இல்லாமல் வெளியே வரமாட்டார்கள்," என ராகுல் காந்திக்கு ட்விட்டரில் பதிலளித்தார் அவர்.
"ஜூன் 15ஆம் தேதியன்று, கல்வானுக்கு அனுப்பப்பட்ட வீரர்களிடமும் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் 1996 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இந்திய -சீன ஒப்பந்தங்களின் காரணமாக, இரு தரப்பு வீரர்களும் நேருக்கு நேர் சந்திக்கும்போது துப்பாக்கிகளை பயன்படுத்துவதில்லை. இந்த செயல்முறை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது," என்று குறிப்பிட்டிருந்தார்.

வெளியுறவு அமைச்சர் குறிப்பிடும் ஒப்பந்தங்கள் யாவை?

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கையெழுத்திட்ட குறிப்பிட்ட ஒப்பந்தமானது, 1996 நவம்பர் 29ஆம் நாளன்று இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, "இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எந்தவொரு சக்தியையும் பயன்படுத்த மாட்டார்கள். ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதாகவோ ராணுவத்தின் வல்லமையைக் காட்டுவதாகவோ அச்சுறுத்த மாட்டார்கள்."

ஒப்பந்தத்தின் முதல் பிரிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: "இந்திய -சீன எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு வழிவகுக்கும் வகையிலும், ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும் இரு தரப்பினரும் செயல்படவேண்டும். அதற்காக, பரஸ்பரம் ஒரு நாட்டுக்கு எதிராக மற்றொரு நாடு தனது ராணுவத் திறனைப் பயன்படுத்தாது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள இரு நாட்டு ராணுவங்களும், தனது ராணுவத் திறமையைக் கொண்டு எதிர் தரப்பைத் தாக்கவோ அல்லது அத்தகைய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவோ அச்சுறுத்தக்கூடாது."
ஜெய்சங்கர் குறிப்பிடும் ஷரத்தானது, ஒப்பந்தத்தின் 6வது பிரிவில் உள்ளது. அதன்படி, "கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவது, தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்து குண்டு வீசி தாக்குவது அல்லது துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களைக் கொண்டு தாக்குவது போன்ற எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது." முன்னதாக, 1993ஆம் ஆண்டிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனை அமைதியான மற்றும் சுமூகமான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்படும் என்று இரு தரப்பினரும் நம்புகிறார்கள். எந்தவொரு தரப்பும் தனது பலத்தைப் பயன்படுத்தக்கூடாது, அல்லது ராணுவ வல்லமையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தக்கூடாது.
"இதன் பின்னர், 2005ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, 1993 மற்றும் 1996 ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பல விஷயங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஒப்பந்தம் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடைசெய்கிறதா?>எந்தவொரு நாடும் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்களிலிருந்து தெளிவாகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் விளக்கம் கொடுப்பது போல, ஒரு தரப்பினர் தாக்குதலை தொடங்கிய பிறகு, மற்றொரு தரப்பினருக்கு இந்த விதிகள் பொருந்துமா என்பதே தலையாய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக் கே மேத்தாவுடன் இது தொடர்பாக பிபிசி பேசியது.
"நீங்கள் தாக்கப்படும்போதும், யாராவது பதுங்கியிருந்து கற்களால் தாக்கும்போதும் உங்கள் பாதுகாப்புக்காக கற்களை வீசுவீர்களா? அல்லது வேறு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்பதை யார் முடிவு செய்வது? அந்த சந்தர்ப்பத்தில் அங்கு இருக்கும் தளபதிதான் தற்காப்புக்காக விதிகளை மீற வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில் தளபதி அங்கு இல்லாவிட்டால், அவருக்கு அடுத்த நிலையில் பொறுப்பு வகிக்கும் அதிகாரி முடிவெடுக்கலாம். தற்காப்புக்காக ஆயுதத்தைப் பயன்படுத்தலாம்," என அவர் தெரிவித்தார்.


 ஜெய்சங்கர் மேற்கோளிட்டு காட்டும் ஒப்பந்தத்தை ஏற்கனவே சீனா முறித்துவிட்டது என்பதை மேத்தா சுட்டிக் காட்டுகிறார். "வழக்கமாக எல்லைப் பகுதிகளில் தகராறு ஏற்படும்போது அங்கிருக்கும் பதாகைகள் அகற்றப்படும். இந்த விவகாரத்தில் எந்தவொரு பதாகையும் அகற்றப்பட்டிருப்பதாக காட்டப்படவில்லை. அதோடு, சம்பவம் நடைபெற்ற நேரம் மாலை நேரம் என்பதும், அவர்கள் பதுங்கியிருந்தார்கள் என்பதும் சீன தரப்பினரே எல்லை ஒப்பந்தத்தை முதலில் முறித்தார்கள் என்பதை காட்டுகிறது," என்று கூறுகிறார்.
இது தொடர்பாக மேலும் சில விஷயங்களை மேத்தா பகிர்ந்து கொள்கிறார்: "ஆனால் அங்கு எதுபோன்ற சூழ்நிலைகள் நிலவின என்பதோ, யார் எந்த அளவு அத்துமீறினார்கள் என்பதோ நமக்குத் தெரியாது. ஆனால், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆயுதங்களை ஏந்துவதில் தவறில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையின்போது ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று சர்வதேக நெறிமுறை கூறுகிறது," என்று ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் அசோக் கே மேத்தா கூறுகிறார்.சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற எஸ்.டி.முனியின் கருத்துப்படி, "தடிகள் மற்றும் கம்புகளைப் பயன்படுத்துவதும் ஒப்பந்தத்தை மீறும் செயல்தான். இரு தரப்பிலும் எந்த வகையிலான பலப்பிரயோகம் நடத்தப்பட்டது என்ற முழு விவரங்களும் கிடைக்கும் வரை எதையும் உறுதியாக சொல்வதும், யார் ஒப்பந்தத்தை அதிகமாக மீறியது என்று சொல்வதும் கடினம். ஆனால் பல வீரர்கள் இறப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. உயிர்களைக் காப்பாற்ற ஆயுதங்களை கையில் எடுக்கலாம் என்பது உண்மைதான். தற்காப்புக்காக ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று சர்வதேச நெறிமுறை கூறுகிறது".
இந்த ஒப்பந்தங்களின் எதிர்காலம் என்ன?

இந்த ஒப்பந்தங்களின் எதிர்காலம் பற்றி பேசும் முனி, "இந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக இந்திய அரசு நம்பினால், இந்த ஒப்பந்தங்களைப் பற்றி மீண்டும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்களா என்று சீனாவிடம் இந்திய அரசு கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறுகிறார்.
"இது தவிர, சீனா தொடர்பான பிற பிரச்சனைகளையும் பல்வேறு சர்வதேச மன்றங்களில் இந்தியா எழுப்ப வேண்டும் என்றும் சர்வதேச விவகாரங்களில் நிபுணரான எஸ்.டி முனி கருதுகிறார்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக