வியாழன், 11 ஜூன், 2020

இலங்கை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி .. தேர்தல் ஆணைய குழு அறிவிப்பு

இலங்கை தேர்தல்: நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்றாவது முறை தேதி அறிவிப்பு
BBC :   இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக ரத்ததான தேர்தல்
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது.
வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதம் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் ஊரடங்கு தொடர்ந்தமை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் தொடர்ந்த நிலையில் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு பின்னர் தெரிவித்திருந்தது.
இலங்கையின் நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பிய பின்னணியில் ஜுன் மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழு எட்டியது.
எனினும், இலங்கையில் கொரோனா நிலைமை தொடர்ந்தமையினால் இரண்டாவது முறையாகவும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணைக்குழு பிற்போட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70 (1) சரத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னரே ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த முதலாம் தேதியுடன் 8ஆவது நாடாளுமன்றத்தின் நான்கரை வருடம் பூர்த்தியாகிய பின்னணியில், அடுத்த நாளே ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை ஆகியவற்றை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு கடந்த சில வாரமாக அந்த மனுக்கள் ஆராயப்பட்டு வந்தன.
சுமார் 10 நாட்கள் மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், குறித்த மனுக்களை விசாரணையின்றி தள்ளுப்படி செய்ய கடந்த 2ஆம் தேதி தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில், வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட நிலையில், இன்று தேர்தல் தேதிக்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் தேதி மூன்றாவது முறையாகவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தப்படும் விதம் தொடர்பில் சுகாதார வழிகாட்டிகள் அடங்கிய பரிந்துரைகள் அனைத்தும் சுகாதார அமைச்சினால் கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக