வியாழன், 25 ஜூன், 2020

சிக்கலில் கருணா .. ஆனையிறவுத் தாக்குதலில் 2000-3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக ....

ஆனையிறவுத் தாக்குதலின் போது 2000-3000 இராணுவத்தினரை  ஒரே இரவில் கொன்றொழித்ததாக புலிகளின் தளபதி  கருணா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவரிடம் இன்று 7 மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. 

எம்.எஸ்.எம். ஐயூப் :;  தேசப்பற்று என்பது ஒரு வகையில் ஆச்சரியமானது. சிலவேளைகளில், அது மனிதனை இயங்கச் செய்கிறது. சிலவேளைகளில், அது அவ்வாறு செய்வதில்லை. சிலவேளைகளில், கிள்ளுவதுகூட ஒருவரை ஆவேசம் கொள்ளச் செய்யும். சிலவேளைகளில், அணுகுண்டு வெடித்தாலும் ஒருவரைத் தட்டி எழுப்பாது.
 கடந்த காலங்களில், தமிழ் அரசியல் கட்சிகள் சமஷ்டி முறை ஆட்சி வேண்டும் என்று கூறிய போதெல்லாம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலர், நாட்டைப் பிரிக்கப் போகிறார்கள் எனக் கூறி, துள்ளிக் குதித்தனர். ஆனால், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தாம்
ஆ​ைனயிறவு இராணுவ முகாமில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன்றதாகக் கடந்த வாரம் கூறியபோது, அதை நியாயப்படுத்த பொதுஜன பெரமுனவினர் படும் பாட்டையும் கேட்காததைப் போல இருக்க எடுக்கும் முயற்சியையும் பார்க்கும் போது தான், இவ்வாறு தேசப்பற்று விந்தையானது என்று தோன்றுகிறது.

புலிகள் அமைப்பில் செயற்படும் போது அவ்வமைப்பின் முன்னாள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சிறப்புத் தளபதியாக இருந்த கருணா அம்மான் என்று அழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அவ்வாறு கூறியதற்காக, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றோ, வேறு குழப்பங்களை நடத்த வேண்டும் என்றோ நாம் இங்கு கூற வரவில்லை. தேசப்பற்று என்ற பெயரில் பலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முரண்பாட்டை எடுத்துக் காட்டவே இதனைக் கூறுகின்றோம்.
அண்மையில், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர், கருணா அம்மானைப் பற்றித் தெரிவித்த ஒரு கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
“கருணா, கொரோனாவை விடப் பயங்கரமானவர்” என்று, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கூறியதை அடுத்து, கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் உரையாற்றிய கருணா அம்மான், “உண்மையிலேயே நான் பயங்கரமானவன் தான்; நான் ஆனையிறவில் 2,000 படையினரையும் கிளிநொச்சியில் 3,000 படையினரையும் கொன்​றுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது இது, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கூற்றைப் பற்றி விசாரணை நடத்துமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன இரகசியப் பொலிஸாரைப் பணித்துள்ளார். பொலிஸாரும் வாக்குமூலம் அளிக்க அவரை அழைத்துள்ளனர். சில பௌத்த பிக்குகளின் அமைப்புகள், கருணாவைக் கைது செய்யுமாறு, பொலிஸாரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்குப் பதிலளித்துள்ள கருணா அம்மான், உலகமே அறிந்த ஒரு விடயத்தையே தாம் கூறியுள்ளதாகவும் அதற்காகத் தம்மைக் கைது செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். கைது செய்ய முடியுமா, இல்லையா என்பது சற்றுச் சிக்கலான விடயம் தான்.
சாதாரண நிலைமையின் கீழ் ஒருவர், தாம் மற்றொருவரைக் கொலை செய்ததாகக் கூறினால், அவரைக் கைது செய்யலாம். புலிகள் இயக்கத்தை, அரசாங்கம் மற்றொரு படையாக அங்கிகரிக்காத நிலையில், புலி உறுப்பினர் ஒருவர், தாம் படை வீரர்களைக் கொலை செய்ததாக ஒப்புக் கொள்வதாக இருந்தால், அவரையும் கைது செய்ய முடியும்.
ஆனால், கருணா கூறும் மற்ற விடயம், இங்கு மிகவும் முக்கியமானதாகும். சகலரும் அறிந்துள்ள ஓர் உண்மையையே தாம் கூறியதாக, அவர் கூறுகிறார். அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
அரச படைகளுக்கு எதிரான பல சமர்களின் போது, புலிகளின் படையணிக்கு கருணா தலைமை தாங்கியமை, போரைப் பற்றி அறிந்த சகலரும் அறிந்திருக்கும் விடயம். பல சமர்களில், அரச படைகள் தோல்வியடைந்தன. ஆயிரக் கணக்கான படை வீரர்கள், சில சமர்களின் போது கொல்லப்பட்டனர். இது கால வரை, அதை அரச தலைவர்கள் அறியாதிருந்தால், அவர்கள் அரசாட்சிக்குத் தகுதியற்றவர்களே!
அந்த வரலாற்றை அறிந்தே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முரளிதரனை அக்கட்சியின் உப தவிசாளர்களில் ஒருவராக நியமித்திருந்தது.
அதேபோல், மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில், அவர் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பிரதி அமைச்சராக இருந்தார். எனவே, இப்போது அவர், தாம் ஆயிரக் கணக்கில் படை வீரர்களைக் கொன்றதாகக் கூறும் போது, ஏதோ புதிய விடயமொன்றைக் கேட்பதைப் போல் ஆத்திரமடைவது, அர்த்தமற்ற விடயம்.
1980களின் நடுப்பகுதியிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை, புலிகள் பலமானதொரு சக்தியாகவே இருந்தனர். எனவே, அக்காலத்தில் பல முக்கிய சமர்களில், புலிகள் அரச படையினரின் முக்கியத் தளங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அச்சமர்களின் போது, சில முகாம்களில் நூற்றுக் கணக்கான படை வீரர்களும் சில முகாம்களில் ஆயிரக் கணக்கான படை வீரர்களும் புலிகளால் கொல்லப்பட்டனர். அச்சமர்களில் 1997, 1998ஆம் ஆண்டுகளில் 18 மாதங்களாக நீடித்ததும் 30,000 அரச படை வீரர்கள் பங்குபற்றியதாகவும் கூறப்படும் ‘ஜயசிக்குறு’ நடவடிக்கையை முறியடித்ததில் கருணாவின் ‘ஜெயந்தன் படையணி’ முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்பட்டது.
1995ஆம் ஆண்டு, ‘ரிவிரெஸ’ நடவடிக்கை மூலம், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்ட அரச படைகள், 1996ஆம் ஆண்டு ‘சத்ஜய’ என்ற நடவடிக்கை மூலம், தெற்கு நோக்கி முன்னேறி, கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கொண்டன.
ஆனால், ‘ஜயசிக்குறு’ நடவடிக்கையில் ஈடுபட்ட அரச படைகள், தெற்கிலிருந்து சென்று மாங்குளத்தைக் கைப்பற்றிய போது, புலிகள் மீண்டும் கிளிநொச்சியைக் கைப்பற்றி, வடக்கிலிருந்து வந்த அரச படைகளைப் பெரும் சேதங்களுடன் மீண்டும் யாழ். குடாநாட்டுக்குப் பின்வாங்கச் செய்தனர். தாம் கிளிநொச்சியில் 3,000 படையினரைக் கொன்றதாக, கருணா இந்தச் சமரைத் தான் குறிப்பிடுகிறார் போலும்.
1991ஆம் ஆண்டு, ஆனையிறவு படை முகாமைக் கைப்பற்ற புலிகள் மேற்கொண் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், புலிகள் 11,000 படை வீரர்களைக் கொண்டதாகக் கூறப்படும் அம்முகாமைத் தாக்கி அழித்தனர். கருணாவே அத் தாக்குதலுக்குத் தலைமைத் தாங்கியதாக அக்காலத்தில் கூறப்பட்டது. முகாமில் இருந்த படையினரில் எத்தனை பேர் தப்பி வந்தனர் என்பதை, அரச தரப்பினர் தெரிவிக்கவில்லை. ஆனால், அரச படைகளுக்குப் பெருஞ்சேதம் ஏற்பட்டது என்பது உண்மை. தாம் ஆனையிறவில் 2,000 அரச படை வீரர்களைக் கொன்றதாகக் கருணா கூறியிருப்பது, இந்தச் சமரைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி, இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமான போது, புலிகள் கிழக்கு மாகாணத்தில் 600க்கு மேற்பட்ட பொலிஸ் வீரர்களைச் சிறைப் பிடித்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் கொல்லப்பட்டனர். கருணாவே அப்போது கிழக்கில், புலிகளுக்குப் பொறுப்பாக இருந்தார். எனவே, அவரே அவர்களைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், கருணா அரசாங்கத்தில் இணைந்த போது, புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள், அதற்குக் கருணாவே பொறுப்பு எனக் கூறியிருந்தன. ஆனால் கருணா, தாம் அதற்குப் பொறுப்பல்ல எனக் கூறியிருந்தார்.
2002ஆம் ஆண்டு, புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையே நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.
தாய்லாந்து, நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கருணாவும் புலிகளின் சார்பில் கலந்து கொண்டார். இதன் காரணமாக, அவருக்குள் ஏதோ ஒரு மாற்றத்தைப் புலிகள் அவதானித்தார்கள் போலும்.
2004ஆம் ஆண்டு, கருணாவின் நெருங்கிய சகாவான திருகோணமலைக்குப் பொறுப்பான பதுமன், புலிகளின் தலைமையால் வன்னிக்கு அழைக்கப்பட்டார். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. அதையடுத்து கருணா அழைக்கப்பட்டார். ஆனால், கருணா போகவில்லை. மாறாக அவர், கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு, புலிகளின் தலைமை வேற்றுமை காட்டுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
பின்னர், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் திகதி, தாம் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆறாம் திகதி புலிகள் அமைப்பு, தாம் கருணாவை இயக்கத்திலிருந்து வெளியேற்றியதாக அறிவித்தது. அத்தோடு, தனக்குக் கீழ் இயங்கிய படையணிகளைக் கலைத்துவிட்டு, தமது பாடசாலைக் கால சகாவான முன்னாள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் உதவியுடன், கொழும்புக்கு வந்த கருணா, ஐ.தே.க அரசாங்கத்தின் உதவியுடன் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார்.
புலிகளின் தோல்விக்கு, கருணாவினது வெளியேற்றமும் அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அவ்வியக்கத்துக்கு ஏற்பட்ட பின்னடைவும் முக்கிய காரணமாகியது.
ஆனால், கருணாவைப் புலிகளிலிருந்து பிரிப்பதற்காகத் தமது சமாதானத் திட்டமும் தமது அரசாங்கமும் அளித்த பங்களிப்பை, அரசியலில் மூலதனமாக்கிக் கொள்ள, ஐக்கிய தேசிய கட்சி தவறிவிட்டது; அதற்கு விரும்பவில்லை அல்லது, அஞ்சியது.
பின்னர் கருணா, மஹிந்தவின் காலத்தில் புலிகளுக்கு எதிரான போரின் போது, அரச படைகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டது. அரச படைகளின் போர் வெற்றிக்குத் தாம் பெரும் பங்காற்றியதாக, அவரே ஒரு முறை ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.
போர் முடிவடைந்த போது, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக, அரச படையினர் அவரையும் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரையும் தான் அழைத்துச் சென்றனர். அவரது இந்தப் பங்களிப்பின் காரணமாக, அவர் சிங்கள மக்கள் மத்தியில் வீரனாகி, தமிழர்கள் மத்தியில் துரோகியாகி விட்டார். அக் கால ஊடகங்களைப் பார்த்தால் இது விளங்கும். அவ்வாறு தான் அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளராகினார் பிரதி அமைச்சரானார்.
போரை முடித்து வைத்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இதுவே நடந்தது. போர்க் காலத்தில் அவரை “உலகில் மிகச் சிறந்த இராணுவத் தளபதி” எனக் கோட்டாபய கூறினார். பின்னர் சரத் பொன்சேகா, மஹிந்தவை எதிர்த்த போது துரோகியானார்.
தமிழ் மக்கள் இன்னமும் புலிகளைப் போற்றுகின்றனர்; மதிக்கின்றனர். எனவே தான் தேர்தல் காலத்தில் தமிழ் தலைவர்கள் அனைவரும் புலிகளின் புகழ் பாடுகின்றனர். ஆனால், கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால், புலிகளைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைய முடியாது. டக்ளஸ், அதற்கு ஒருபோதும் முயன்றதும் இல்லை. கருணாவுக்கு சந்தைப்படுத்துவதற்காக, புலிகளுடனான ஒரு கடந்த காலம் இருக்கிறது. அதைச் சந்தைப்படுத்த அவர் எடுத்த முயற்சியாகவே, அவரது சர்ச்சைக்குரிய கடந்த வார உரையைக் கருத வேண்டியிருக்கிறது.
கடந்த வருடம் நவம்பர் 24 ஆம் திகதி, மட்டக்களப்பு திக்கேடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும் போதும் அவர், “தமிழ்த் தேசிய தலைவர் என்ற தகுதி, தலைவர் பிரபாகரனுக்கு மட்டுமே உள்ளது” எனவும் “பிரபாகரன் ஒருபோதும் என்னைத் துரோகி எனக் கூறியதில்லை” எனவும் கூறியிருந்தார்.
இதில் விந்தை என்னவென்றால், தாம் ஒரு புலி வீரனாக இருந்து படையினரைக் கொன்றதாகக் கூறி, கருணா கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கும் போது, போர்க் காலத்தில் தாம் புலிகளை அழித்ததாகக் கூறி, பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், தெற்கில் சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். ஆனால் இரு சாராரும், ஓரணியில் தான் இருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்‌ஷ, தமக்கு இம் முறையும் தேசியப் பட்டியல் ஆசனமொன்றை வழங்கவிருந்தார் என்றும் முரளிதரன் மேற்படி சர்ச்சைக்குரிய உரையில் கூறியிருந்தார்.
கருணாவை விட, பொதுஜன பெரமுனவே இந்த விடயத்தில் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளது. கருணா 600 பொலிஸ்காரர்களைக் கொன்றதாக அவர் பொதுஜன பெரமுனவில் இருந்தபோது பலர் குற்றஞ்சாட்டிய போது, கருணா இப்போது புனர்வாழ்வு பெற்றுள்ளார் என பொதுஜன பெரமுனவினர் கூறினர். இப்போது அவர், தாம் ஆயிரக் கணக்கில் படையினரைக் கொன்றதாகப் பெருமைப்படுகிறார்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியாமல் சில பொதுஜன பெரமுனவினர் ஐ.தே.க 60,000 இளைஞர்களைக் கொன்றதாகவும் அந்த ஐ.தே.கவுடன் ஜே.வி.பி கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் கூறி மழுப்புகின்றனர்.
வேறு சிலர், கருணா போர்க் கால நடவடிக்கைகளைப் பற்றியே கூறுகிறார். அதன் பின்னர் அவர் புலிகளை அழிக்க, அரச படைகளுக்கு உதவினார் எனக் கூறி சமாளிக்கின்றனர்.
கருணாவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என எஸ்.பி. திஸாநாயக்க கூறுகிறார். இறந்த படையினர் மீண்டும் வருவதில்லை; எனவே ,கருணா கூறியதை மறந்து விடுங்கள் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியிருக்கிறார்.
இறுதியில், கருணா தமது கட்சியின் கீழ் போட்டியிடவில்லை என்றும், அவர் தமது கட்சிக்கு எதிராகப் போட்டியிடுகிறார் என்றும் கூறி, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், திங்கட்கிழமை (22) கட்சியைப் பாதுகாத்துக் கொள்ள முயன்றார்.
கருணா, தம்மைப் புலிகளிடமிருந்து பாதுகாத்த ஐ.தே.கவுடன் சேர்ந்திருந்து, இந்தச் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு இருந்தால், இதே பொதுஜன பெரமுனவினர் என்ன செய்திருப்பார்கள்?
இப்போது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் எங்கே? பொதுஜன பெரமுனவினரை ஆதரிக்கும் ஊடகங்களே நாட்டில் அதிகம். எனவே, அவ் ஊடகங்களும் 2011ஆம் ஆண்டு, உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டிக்கு, இப்போது வழங்கியிருக்கும் முக்கியத்துவத்தை, இந்தச் சர்ச்சைக்கு வழங்குவதில்லை.
அரசியல்வாதிகளின் தேசப்பற்றை, தோலுரித்துக் காட்டிய கருணாவை பாராட்ட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக