செவ்வாய், 16 ஜூன், 2020

1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி! .. இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 4

அமரர் .திரு .அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்:
1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி: திருமதி இந்திரா காந்தி 1980-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்தார். அவரைச் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணித்தியாலம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
எம்.சிவசிதம்பரம் MP
அவர் தமது அனுதாபத்தை வெளிப்படையாகவே கூறினார். ஆக்க பூர்வமான பல ஆலோசனைகளையும் தந்தார். 1981 82-ஆம் ஆண்டுகளிலும் அவரையும் அவருடைய அரசின் வெளியுறவு அமைச்சராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினேன். இதற்கிடையில் இலங்கை அரசின் அடக்கு முறையினால் இலங்கையை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் வாழத் தொடங்கிய தீவிரவாத தமிழ் இளைஞர்களின் பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் துன்பங்களை ஒட்டி ஆழ்ந்த அனுதாபத்தையும் உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்தின.
1981-ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், தமிழ் நாட்டிலிருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற சம்பவங்களும் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தத் தொடங்கின. 1972-ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் பெற விரும்பிய தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவும், மத்திய அரசின் அனுதாபமும் 1982-ஆம் ஆண்டில் பூரணமாக எமக்குக் கிடைக்கத் துவங்கின.


இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது. திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற எண்ணெய்க் கொள்கலங்களை ஓர் அமெரிக்க நிறுவனத்திற்குக் குத்தகைக்குவிட இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியைப் பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் அம்பலப் படுத்தினர். இதன் விபரங்களை இந்திய அரசுக்குத் தெரியப் படுத்தினோம். இந்துமாக்கடல் அமைதிப் பிராந்தியக் கொள்கைக்கு எ திராக இலங்கை அரசு செயல்படுகிறது என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்தது.

அவசரக்கால சட்ட விதிக்கு இந்திய அரசின் கண்டனம்.
 1983-ம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கை அரசு அவசர காலச்சட்டத்தின் கீழ் சில விதிகளை ஆக்கியது. இவை தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு என்று ஆக்கப்பட்டவை. போலீஸ் இரணுவ நடவடிக்கையினால் மரணமடைந்தவரின் பிரேதங்களை வைத்திய பரிசோதனையோ, மரண விசாரணையோ இன்றி அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் சட்டவிதிகளே இவை.

தங்குதடையின்றி தமிழ் இளைஞர்களைக் கொன்று குவிக்கத் திறந்த அனுமதிப் பத்திரமே இச்சட்டம் - மனித உரிமை சாசனத்தையே முற்றாகப் புறக்கணிக்கும். இவ் அவசர கால சட்டவிதியை ஒட்டி இந்திய அரசு தனது கவலையை, டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து தெரிவித்தது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா முதன் முறையாக குரல் எழுப்பியது.

இந்த நேரத்தில் தான் இலங்கையின் உள்நாட்டு விஷயத்தில் இந்தியா அத்துமீறித் தலையிடுகின்றது என்ற ஆவேசக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்தது. அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர் அதற்கு ஆணித்தரமான பதில் அளித்தனர். வியட்நாமில் பௌத்தமதத்தவர் கொல்லப்பட்ட போது அதைக் கண்டிப்பதற்கு இலங்கை அரசுக்கு உரிமை உண்டாயின் இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதை எதிர்த்து இந்தியா குரல் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்டோம். இதுவரை தட்டிக்கேட்க யாரும் அற்ற நிலையில் இனக் கொலைக்கு ஆளாக்கப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தலையிட இந்தியா தயாராகி விட்டது, என்ற நம்பிக்கை தமிழ் மக்களின் உள்ளங்களில் துளிர்க்கத் தொடங்கியது.

1983-ஜூலை தமிழ் இன சம்காரமும் நரசிம்மராவ் வருகையும் 1956 - முதல் தமிழ் மக்கள் பல தடவை சிங்கள இன வெறியாட்டத்திற்குப் பலியாகி வந்திருக்கின்றனர். 1956, 1958, 1961, 1977, 1979, 1981 இப்படி நூற்றக் கணக்கான தமிழ் மக்களையும் பலிகொண்ட கலவரங்கள் பல நடந்தேறின. 1958-லும், 1977-ம், 1981-ம் ஆண்டுகளிலும் தமிழ் நாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கண்டனஊர்வலங்கள் நடைபெற்றன.

ஆனால் மத்திய அரசு மவுனம்சாதித்தது. முன்பு நடந்த படுகொலைகளை எல்லாம் மிஞ்சிய வகையில் ஏறத்தாழ மூவாயிரம் (3000) தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டுப் பல்லாயிரம் பேர் படுகாயப்பட்டு, இலட்சக்கணக்கான பேர் வீடு இழந்து அகதிகளாக முகாம்களில் தஞ்சம் புகுந்து, தமிழ் மக்களின் சொத்துப் பல கோடி கொள்ளையடித்தும், தீயிட்டு எரித்தும் நாசமாக்கப்பட்ட இனக் கொலை 1983 ஜூன், ஜூலை, ஆகஸ்டில் நடை பெற்றது. அரசாங்கத்திலிருந்த அமைச்சர்கள் சிலரே திட்டமிட்டு நடத்திய இந்த தமிழின சம்காரத்தைத் தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. போலீசும், ராணுவமும் தாமே தமிழ் மக்களைத் தாக்குவதில் ஈடுபட்டனர், அல்லது சிங்களக் குண்டர்கள் தாக்கப்பார்த்து நின்றனர். இந்தியத் துணைத்தூதரின் மோட்டார் வண்டி நொறுக்கப்பட்டது. இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கி கிளை எரிக்கப்பட்டது.  -- தொடரும்

ஒப்பந்த வரலாறு .. 1
 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3


ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக