சனி, 13 ஜூன், 2020

தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.. இலங்க- இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 2

ராசரத்தினம் -அமிர்தலிங்கம் - கலைஞர் - மங்கையர்கரசி அமிர்தலிங்கம்
அமரர் . அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்:
தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.  தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சிகரமாக ஒரு புதிய அரசியல் அமைப்பை யாத்து, முந்திய அரசியல் அமைப்பில் ஆங்கில ஆட்சி சிறுபான்மையோருக்கு வழங்கிய பாதுகாப்புக்களையும் பறிக்க இலங்கை அரசு முற்பட்டது. வங்க மக்களுக்குப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி போரில் இறங்கி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் கொடுத்த சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் புது நம்பிக்கையைக் கொடுத்தது.
கிழக்கு வங்காளத்திற்குச் சார்பாக இந்தியா செயல் படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மேற்கு வங்கம் பொங்கி எழுந்து இந்தியா அரசுக்கு ஏற்படுத்திய நிர்பந்தமே. அதே போல் இலங்கைத் தமிழ் மக்களுக்காக இந்தியா குரல் கொடுக்கச் செய்வதற்குத் தமிழ் நாடு பொங்கி எழ வேண்டும் என்று கண்டோம்.
1972 பிப்ரவரியில் என்னையும் அழைத்துக் கொண்டு தமிழ் நாடு வந்தார்தந்தை செல்வநாயகம். டாக்டர் இரா. ஜனார்த்தனம், மறைந்த திரு ஆ. இராசரத்தினம், திரு மணவைதம்பி ஆகியோர் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் முதல் எல்லா அமைச்சர்களையும் தந்தைப் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சிலம்புச் செல்வர் ம. பொ. சி, காயிதே மில்லத், அன்று தி.மு.க . பொருளாளராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முதலிய எல்லோரையும் பார்த்து இலங்கையில்தமிழ் மக்களின் வரலாறு, இன்று எழுந்துள்ள பிரச்சனைகள், அவை தீர எமது கோரிக்கைகள் ஆகியவற்றை விளக்கவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். "புதுடெல்லி செல்ல வேண்டும், பாரதப் பிரதமரைப் பார்த்து வங்க தேச மக்களின் உரிமைக்கு உதவியது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் உதவிடக் 'கோர வேண்டும்", என்று தந்தை செல்வா விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்போ, வசதியோ அவருக்கு ஏற்படவில்லை.

இந்திரா காந்தி அம்மையார் இலங்கை வந்த போதும் அவரை, திரு. செல்வநாயகம் சந்திப்பதற்குச் செய்யப்பட்ட ஒழுங்கு, இலங்கை அரசின் தலையீட்டினால் இரத்துச் செய்யப்பட்டது. 1972-ஆம் ஆண்டு தமிழ் நாடு சென்று திரும்பிய பின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த யாருக்கும் இந்தியா செல்வதற்கு வெளிச் செல்லும் அனுமதி (EXIT PERMIT) வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. அதன் பின் 1978-ல் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் எவரும் வெளிநாடு செல்ல முடிந்தது. எனினும் எம் 1972-ம் ஆண்டுத் தமிழகப் பயணம் ஈழத் தமிழர் பிரச்சனைப் பற்றிய பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரைகள், வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட வழி வகுத்தது. ஆனால் மத்திய ஆட்சியில் இலங்கை அரசை திருப்தி செய்யும் கொள்கையே பின்பற்றப்பட்டு வந்தது.
1975-ம் ஆண்டு திரு. கருணாநிதி அவர்களின் தி.மு.க . அரசு அவசர காலச்சட்டத்தின் கீழ் கலைக்கப்பட்டபோது, அந்த அரசின் மீது சுமத்தப்பட்ட குற் றச்சாட்டுக்களில் ஒன்று, ''இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தமிழ் மக்களுக்குச் சார்பாகத் தலையிட்டனர்" என்பதாகும். இதே காலக்கட்டத்தில் கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. 9 பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை.

1977-ம் ஆண்டு இலங்கையில் ஜயவர்த்தனா அரசும் டெல்லியில் மொரார்ஜி தேசாய் அரசும் ஆட்சிக்கு வந்தன. இரண்டும் வலதுசாரி அரசுகள். இரு பிரதமர்களுக்குமிடையில் கருத்தொற்றுமையும் நட்புறவும் நிலவியது. 1978-இல் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மொரார்ஜி தேசாயை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பார்த்து இலங்கைத் தமிழரின் நிலை, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கு எதிரான தாக்குதல்கள், நாம் தமிழ் ஈழம் கோருவதற்கான காரணங்கள் ஆகியவற்றை விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இதனால் 1979-ல் நானும் என் மனைவியும் தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் சென்ற போது அரச விருந்தினராக வரவேற்கப்பட்டோம். தமிழ் நாடு முழுவதும் எல்லா கட்சியினராலும் வரவேற்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் எம் நிலையை எடுத்து விளக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றோம். புதுடெல்லி சென்று பிரதமர் மொரார்ஜி தேசாயையும் மற்றும் அமைச்சர்களையும் பார்த்துப் பேசினேன். அவர் அப்போது ஆச்சரியமான ஓர் யோசனையை வெளியிட்டார்.இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனையில் தான் மத்தியஸ்தம் செய்யத் தயாராய் இருப்பதாகக் கூறினார். இந்தியாவின் தலையீட்டை வேண்டிநின்ற நாம் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனால் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த டெல்லி விஜயத்தை பயன்படுத்தி அப்போது பதவி இழந்து, மகன் சஞ்சய் காந்திக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, மிகுந்த துன்பத்தோடு இருந்த இந்திரா காந்தியை என் மனைவியும் நானும் சென்று பார்த்தோம். இச்சந்திப்புக்கு அப்போது இந்திரா காங்கிரஸ் உறுப்பினராக இருந்த திரு. நெடுமாறன் ஏற்பாடு செய்தார். ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த இச்சந்திப்பின் பலனாக இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மாத்திரமல்ல ஜெயவர்த்தனா அரசாங்கத்தின் ஏகாதிபத்திய சார்புப் போக்குப் பற்றியும் திருமதி காந்தி சரியான விளக்கம் பெற்றார் என்று நம்புகிறேன்.
அன்று அவர் காட்டிய அனுதாபம் அவர் படுகொலை செய்யப்படும் வரை நிலைத்திருந்தது. ஜெயவர்த்தனா அரசின் இந்திய விரோதக் கொள்கையை மாத்திரம் அல்ல இந்திரா விரோதப்போக்கையும் நன்கு புரிந்து கொண்டார். இப்பிரயாணத்தின் பின் இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சராயிருந்த சிறில் மத்தியூ கொண்டு வந்த ஒத்திவைப்பும் பிரேரணையும் என் மனைவியையும், என்னையும் உச்சரிக்க முடியாத வார்த்தைகளால் திட்டியதும் இலங்கை அரசின் ஆத்திரத்தை வெளிப்படுத்தின. 12 1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி:

திருமதி இந்திரா காந்தி 1980-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்தார். அவரைச் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணித்தியாலம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் தமது அனுதாபத்தை வெளிப்படையாகவே கூறினார். ஆக்க பூர்வமான பல ஆலோசனைகளையும் தந்தார். 1981 82-ஆம் ஆண்டுகளிலும் அவரையும் அவருடைய அரசின் வெளியுறவு அமைச்சராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினேன். இதற்கிடையில் இலங்கை அரசின் அடக்குமுறையினால் இலங்கையை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் வாழத் தொடங்கிய தீவிரவாததமிழ் இளைஞர்களின் பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் துன்பங்களை ஒட்டி ஆழ்ந்த அனுதாபத்தையும் உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்தின.
1981-ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், தமிழ் நாட்டிலிருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற சம்பவங்களும் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தத் தொடங்கின. 1972-ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் பெற விரும்பிய தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவும், மத்திய அரசின் அனுதாபமும் 1982-ஆம் ஆண்டில் பூரணமாக எமக்குக் கிடைக்கத் துவங்கின.

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது. திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற எண்ணெய்க் கொள்கலங்களை ஓர் அமெரிக்க நிறுவனத்திற்குக் குத்தகைக்குவிட இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியைப் பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் அம்பலப் படுத்தினர். இதன் விபரங்களை இந்திய அரசுக்குத் தெரியப் படுத்தினோம். இந்துமாக்கடல் அமைதிப் பிராந்தியக் கொள்கைக்கு எ திராக இலங்கை அரசு செயல்படுகிறது என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்தது. ... ….

ஒப்பந்த வரலாறு .. 1
 

 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக