சனி, 13 ஜூன், 2020

இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 1 .. (செல்வா ஈட்டிய செல்வம்)

இலங்கை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  அமரர் திரு.  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் :
இலங்கை - இந்திய  ஒப்பந்தம் வந்த வரலாறு 1
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987 ஆக 29-ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவசரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்று இந்தியாவிலும், இலங்கையிலும் அரசாங்கங்கள் மீது குற்றங்காண விரும்பும் பலர் கூறுகின்றனர். இலங்கைத் தமிழ் மக்களைப் பாதிக்கும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் கலந்து
ஆலோசிக்கப்படவில்லை. என்று சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். இவற்றில் உண்மையுண்டா என்று புரிந்து கொள்வதற்கு ஒப்பந்தம் வந்த வரலாற்றை அறிவது அவசியமாகும்.
இந்தியாவும், இலங்கையும் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின் இலங்கை அரசு தனது நாட்டுக் குடியுரிமையை வரையறுக்கும் சட்டங்களை ஆக்கமுற்பட்டது. 1948 ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டமே இரு நாடுகளுக்குமிடையில் பிணக்கை
ஏற்படுத்துவதாக அமைந்தது. அச்சட்டத்தினால் இந்திய வம்சாவழியினரான மலைநாட்டுத் தமிழ்த்தொழிலாளர் பத்து லட்சம் பேரும் நாடற்றவர் ஆக்கப்பட்டனர். இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் சந்தேகப் பிரஜைகளாக்கப்பட்டனர். குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி இரு நாட்டு அரசுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி கண்டது. பாரதப்பிரதமர் பண்டித நேருவின் சம்மதத்தைப் பெறாமலே இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் 1948 டிசம்பரில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.



இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் இணக்கம் காணப்படாது நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டங்கள் சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையிலும் விரிசல் ஏற்படுவதற்கு வழிவகுத்தன. இலங்கை இந்தியர் காங்கிரஸ் இச்சட்டங்களை எதிர்த்துச் சத்தியாகிரகம் மேற்கொண்டது. இலங்கை தமிழ் காங்கிரஸ் பிளவுபட்டது. திரு எஸ். ஜே. வி. செல்வநாயகம், திரு கு. வன்னியசிங்கம், டாக்டர் ஈ. எம். வி. நாகநாதன் முதலியோர் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்தில் அங்கமாயிருந்த தமிழ் காங்கிர சிலிருந்து வெளியேறித் தமிழ் மாநிலத்தில் சுயாட்சி பெற்ற தமிழ் மக்கள், ஓர் இணைப்பாட்சியில், சிங்கள மக்களோடு இணைந்து வாமும் இலட்சியத்தைக் கொண்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தனர். சிங்களத் தமிழ் இனங்களுக்கிடையில் பிளவு ஏற்படக்காரணமாயிருந்த குடியுரிமைச் சட்டங்களே இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலும் வேற்றுமையைத் தோற்றுவித்தன.

இந்தியாவின் கருத்தைப் புறக்கணித்தது மாத்திரமின்றி இந்தியத் துவேஷத்தையும் அன்றே ஆளும்கட்சியினர் கக்கினர். அவர்களுடைய அரசியல் அகராதியில் தமிழ் எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் ஒரே கருத்தையே கொண்டிருந்தன. எனினும் பெருந்தன்மையும் உலகளாவிய கண்ணோட்டமும் கொண்டிருந்த பிரதமர் நேருவின் அரசாங்கம் இலங்கையை அரவணைத்துச் செல்லும் கொள்கையையே கைக்கொண்டது. மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கச் செய்வதற்கு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாது பெருமளவு விட்டுக் கொடுத்துப் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 1954-ல் நேரு கொத்தலாவல ஒப்பந்தம், 1964-ல் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயக்கா ஒப்பந்தம், 1974-ல் கச்சத்தீவு பற்றிய ஒப்பந்தம் இவை எல்லாம் இந்திய அரசு தாராள மனப்பான்மையோடு இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் போதிய அக்கறையின்றிச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களேயாகும்.

இந்தியா காட்டிய தாராளப்போக்கு, இலங்கை அரசுக்குத் தமிழ் மக்களை நசுக்குவதற்கும், இந்தியாவிற்கு விரோதமான கொள்கைகளைக் கைக்கொள்வதற்கும் மேலும் ஊக்கம் அளித்ததே அன்றிப் பதிலுக்கு நட்புணர்வை ஏற்படுத்தவில்லை. 1962-ஆம் ஆண்டு சீனா இந்தியா எல்லை யுத்தத்தின்போது இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா இந்தியாவுக்குச் சாதகமான கொள்கையைக் கொண்டிருக்கவில்லை என்பது உலகறிந்த உண்மை. அதேபோல 1971-ல் கிழக்கு வங்கம் பற்றிப் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பகை மூண்ட போது பாகிஸ்தான் துருப்புக்களை ஏற்றிச் சென்ற விமானங்களை கட்டுநாயகா விமானத்தளத்தில் இறங்கி எரி பொருள் நிரப்பிச் செல்ல விட்டதன் மூலம் இலங்கை அரசு இந்தியாவிற்குப் பாரிய தீமையை விளைத்தது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கைத் தமிழ் மக்களே இந்தியாவிற்குச் சார்பாகத் தீவிரமாகச் செயல்பட்டனர். சீன - இந்தியா யுத்தத்தின் போது இந்தியப் படையில் சேர்ந்து பணி செய்யவும் இலங்கைத் தமிழர் முன் வந்தனர்.

குடியுரிமைப் பறிப்பில் ஆரம்பித்த தமிழ் இன விரோதச் செயல்கள் மொழி உரிமை, நில உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, கலாச்சார உரிமை ஆகிய எல்லா உரிமைகளையும் பறித்து மொத்த இன ஒதுக்கல் கொள்கையாக இலங்கையில் விரிவடைந்தன. இவற்றை எதிர்த்து 1956-ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை மேற்கொண்டனர். கத்தியின்றி, இரத்தமின்றி தமிழ் மக்கள் போராட அதற்கு எதிராகச் சிங்கள இன வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
1956, 1958, 1961 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களக் குண்டர்களும், போலீஸ்படையும். இறுதியில் ராணுவமும் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து அகதிகள் ஆக்கப்பட்டு கப்பல்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்பப்பட்டும், கொடுமைக்கும் சிறுமைக்கும் ஆளாக்கப்பட்டனர்.

1958-ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் இலங்கைத் தமிழருக்கு அனுதாபமாக ஓர் பேரணி சென்னையில் நடத்தப்பட்டது. மூதறிஞர் ராஜாஜி இணைப்பாட்சியே இலங்கைத் தமிழர் இன்னல் தீர வழி என்று 'சுவதந்திரா' பத்திரிக்கையில் எழுதினார். தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் தமிழ் நாட்டில் சிறு அனுதாப அலைகளை எழுப்பினவே அன்றி இந்திய அரசின் கவனத்தைக் கவரத் தவறிவிட்டன. அவை இலங்கையின் உள்நாட்டு விஷயங்களாகவே கருதப்பட்டன.  (தொடரும்)


 ஒப்பந்த வரலாறு 2  
 ஒப்பந்த வரலாறு 3
 ஒப்பந்த வரலாறு 4 

ஒப்பந்த வரலாறு 5

ஒப்பந்த வரலாறு 6
ஒப்பந்த வரலாறு 7
ஒப்பந்த வரலாறு 8

ஒப்பந்த வரலாறு 9
ஒப்பந்த வரலாறு 10

பத்மநாபா கொலை.. புலிகளை தண்டித்திருந்தால் ராஜீவ் காந்தி கொலை தவிர்க்கப்பட்டிருக்கும்?

ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது;.. சுமந்திரன் எம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக