செவ்வாய், 26 மே, 2020

கவுண்டமணி பிறந்தநாள் .. அசலான திராவிட நகைச்சுவை நடிகர் ( May 25, 1939),

Karthikeyan Fastura : நகைச்சுவையில் முற்போக்கு கருத்துக்கள் என்றால்
கலைவாணர் காலத்தில் இருந்து ஆரம்பிக்கணும். எம்.ஆர்.ராதா இந்த விஷயத்தில் கிங். எல்லா பிம்பங்களையும் கேலிக்கு ஆளாக்கியவர். ஆனாலும் பகட்டான வேடம் கொண்டு இதெல்லாம் பேசுவார். பிச்சைக்காரராக இருந்தாலும் பகட்டை விடாத பிச்சைக்காரராக இருப்பார். ஒடுக்கப்பட்ட மக்களை சேர்ந்த ஏழையாக எந்த படத்திலும் நான் பார்த்த ஞாபகம் இல்லை
இந்த விஷயத்தில் தான் கவுண்டமணி எம்.ஆர்.ராதாவை சற்று முந்துகிறார். எல்லாவிதமான ஒடுக்கப்பட்ட இனத்தினரையும் தன் கதாபாத்திரத்தில் கொண்டுவந்திருக்கிறார். நாவிதராக, சலவை தொழிலாளியாக, வெட்டியானாக, பறை அடிப்பவராக, அருந்ததியராக என்று அவர் அளவிற்கு ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிபலித்தவர் தமிழ் சினிமாவில் இருவர் தான் வடிவேலு மற்றும் சார்லி. இதில் இவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கவுண்டமணி.
அந்த பாத்திரத்தில் நடிக்கும் போது சாதி திமிர் கொண்ட மேல்சாதியை இவர் டீல் பண்ணும் விதமே வேறு. அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு காட்சிகள் ஞாபகம் வருகிறது.
அய்யர் ss.சந்திரன் : பிள்ளையை கூட்டிண்டு எங்க போற ?
கவுண்டமணி : பிள்ளையை பள்ளிக்கூடத்துல படிக்க வைக்க போறேன்
அய்யர்: உன் பிள்ளை படிக்க போய்ட்டா இங்க வெட்டியான் வேலை யாரு பார்க்கிறது ?

கவுண்டமணி : ஏன் ? கொஞ்ச நாளைக்கு நீயும் உன் பிள்ளையும் பாருங்க.
நாவிதர் கவுண்டமணி : அது ஏன் உங்களுக்கு மட்டும் டம்ளர். எங்களுக்கு மட்டும் கொட்டாங்குச்சில காபி தண்ணி கொடுக்கிறீங்க
நாயகர் விஜயகுமார் : கொடுக்கலாண்டா.. அப்புறம் உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்
நாவிதர் கவுண்டமணி : கோவில் பூசாரி தலைக்கு நாங்க கட்டிங் பன்றோம். ஆனால் கோவிலுக்கு போனா வெளியில நிக்க விடறாங்க. இங்க நீங்க நாய்க்கு ஊத்துறமாதிரி கொட்டாங்குச்சியில காபி கொடுக்கிறீங்க
செந்தில் : ஒண்ணும் பண்ண முடியாது.. கடைசிவரை இதே கதி தான்.
கவுண்டமணி : உனக்கு வேணா அந்த கதி இருக்கும்டா.. எனக்கு ஏன்டா வருது..? தொலைஞ்சு போன எங்க அண்ணன் மட்டும் கையெழுத்து போட்டார்னா என் ரேஞ்சே வேற என்று கற்பனையில் இறங்குவார். அந்த கற்பனையில் கார், பங்களா என்று செல்வசெழிப்பை கற்பனை செய்ய மாட்டார் மாறாக நாவிதரான தன்னை
உட்காரவைத்து விஜயகுமார் சிரைத்து விடுவது போல கற்பனைசெய்வார்.
பின்னொரு காட்சியில் இவருக்கு 15லட்சம் லாட்டரி விழுந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் அதுவரை 5000 ரூபாய்க்காக கெஞ்ச வைத்த நாயக்கர் விஜயகுமாரை " ஏய் பொம்மு எழுந்திரு.. என்ன உட்கார்ந்திருக்க.. இப்போ நான் யார் தெரியுமா.. உனக்கு வேணா 1,2 லட்சம் அதுக்கு மேல அஞ்சு பத்து தூக்கி போடறேன் பொறுக்கிட்டு போறியா.. என்று சலம்பல் விடுவார். செல்வம் வந்தாலும் ஆண்டைகளுக்கு அடங்கி போகும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இது ஒரு பாடம்.
---------
இப்படி நிறைய காட்சிகள் சொல்லலாம். ஆனால் அவரேவும் சில படங்களில் ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளை கிண்டல் செய்வார் . பல படங்களில் உருவ கேலி செய்திருக்கிறார். திருநங்கைகளை அவமதித்தாற் போன்ற காட்சிகளில் வந்திருக்கிறார். அதில் நகைச்சுவையை தவிர பெரிய Intention இருக்காது. ஆனால் மேற்சொன்ன காட்சியில் நகைச்சுவையை தாண்டி தெளிவான Intention இருக்கும். அது தான் சிறப்பு.
எம்.ஆர்.ராதா , கவுண்டமணி போன்று ஹீரோக்களை மிஞ்சிய காமெடியன்கள் அதிலும் முற்போக்கான சிந்தனையும் ஆக்கமும் கொண்டவர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும்.
இவரது சாதிக்கெதிரான முற்போக்கு கலையுணர்வுக்கு திராவிடர் கழகமும், விடுதலை சிறுத்தைகளும், த.மு.எ.க.ச அமைப்பும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
நம் காலத்தில் வாழும் அசலான திராவிட நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களுக்கு
நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக