செவ்வாய், 26 மே, 2020

முதல்நாளிலேயே 630 விமானங்கள் திடீர் ரத்து: சென்னையில் 25 விமானம் ரத்து


தினகரன் : புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி  வைக்கப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து 2 மாதத்துக்கு பின் நேற்று இயங்கத்  தொடங்கிய நிலையில் 630க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.  கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 முதல் உள்நாட்டு மற்றும்  சர்வதேச விமானங்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மே 25ம் தேதி  முதல் உள்நாட்டு விமானங்கள் சேவை தொடங்கப்படும் என கடந்த 21ம் தேதி மத்திய  அரசு அறிவித்தது. அதே நேரத்தில் சர்வதேச விமான போக்குவரத்து இயக்கப்படுவது  குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து  நாடு முழுவதும் நேற்று முதல் மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து  தொடங்கியது.


டெல்லி விமான  நிலையத்தில் இருந்து நேற்று காலை அதிகாலை 4.45 மணிக்கு மகாராஷ்டிராவின்  புனே நகருக்கு இண்டிகோ விமானம் முதலில் புறப்பட்டு சென்றது. அதேபோல் நேற்று  காலை 6.45 மணிக்கு மும்பையில் இருந்து பீகாரின் பாட்னாவுக்கு முதல்  விமானம் புறப்பட்டு சென்றது. அதே நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம்  அகமதாபாத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தது. டெல்லி இந்திரா காந்தி  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட  விமானங்களில்  சிறப்பு ரயில்களில் டிக்கெட் கிடைக்காத துணை ராணுவப்படையினர், ராணுவ  வீரர்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது  சொந்த ஊருக்கு சென்றனர். இதையொட்டி விமான பயணிகள் முகக்கவசங்கள் அணிந்தும்,  தங்களது மொபைல் போன்களில் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோடு செய்தும்  வந்திருந்தனர்.

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் யாரும் விமானத்தில்  பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இது தவிர விமானப்பணி பெண்கள் மற்றும்  பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் முகக்கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட  பாதுகாப்பு கருவிகளை அணிந்திருந்தனர். விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில்  நின்றிருந்தபோது பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றினர். இந்நிலையில் முதல் நாளிலே டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய மற்றும் வரவேண்டிய 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இங்குள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லவேண்டிய விமானங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அதிர்ச்சிடைந்தனர். இதற்கு காரணம், ஒவ்வொரு விமானத்திலும் போதுமான அளவுக்கு பயணிகள் இல்லாததுதான் காரணம்.

விமானங்களில் பயணிப்பவர்கள் தங்கள் சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றவுடன் தனிமைப்படுத்தப்படுதல், அதற்கான செலவுகளை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றால் பலர் விமானத்தில் பயணிக்க ஆர்வம் காட்டவில்லை.  டெல்லி விமானம் நிலையத்தில் இருந்து நேற்று 125 விமானங்கள் புறப்பட்டு சென்றன. 118 விமானங்கள் டெல்லிக்கு வந்தன. இதேபோல் நாட்டின் 2வது நெரிசலான விமான நிலையமான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பல பயணிகள் விமான நிலையத்துக்கு ெவளியே காத்திருந்தனர். நேற்று மும்பையில் 50 விமானங்கள் இயக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்திலும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  விமானம் ரத்து செய்யப்பட்டதால் மும்பை செல்லவேண்டிய பயணிகள் உள்பட பலர் அதிர்ச்சியடைந்தனர்.

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து விமானம் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அகர்தலா, திப்ருகர், சில்சார், ஐஸாவால், திமாபூர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பெங்களூரூ கெம்பகவுடா விமான சர்வதேச விமான நிலையத்திலும் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் நேற்று ஒரே நாளில் 630க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் வராததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நடு இருக்கைகளில் பயணிகள் 10 நாட்களுக்கு அனுமதி
வெளிநாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை தாயகத்துக்கு விமானத்தில் அழைத்து வந்தபோது சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று தேவன் கனானி என்ற ஏர் இந்தியா விமானி குற்றம்சாட்டியிருந்தார். இதை விசாரித்த பாம்பே உயர்நீதிமன்றம்,  `நடு இருக்கைகளில் யாரும்  பயணம் செய்ய அனுமதிக்க கூடாது’ என்று விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு  உத்தரவிட்டிருந்தது. உத்தரவை எதிர்த்து மத்திய  அரசு மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று  விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, போபன்னா,  ஹிர்சிகேஸ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு `10 நாளுக்கு (ஜூன் 6 வரை) முன்பதிவு  செய்யப்பட்ட விமானங்களில் நடு இருக்கைகளில் பயணம் செய்ய அனுமதிக்கலாம். மத்திய அரசு குடிமக்களின் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே ஒழிய வர்த்தக விமான சேவையின் மீதல்ல’ என்று மத்திய அரசின் சொலிசிட்டர்  ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அறிவுறுத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக