புதன், 13 மே, 2020

மனோ கணேசன் : "புலி-லேகியம்" சர்வரோக நிவாரணி கிடையாது!

.ilankainet.com :தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் மீது அவரது கட்சியினரே தாக்குதல்
நடாத்திவரும் நிலையில், நியாயத்தை உணர்த்தியுள்ளார் முன்னாள் பாராளுமன்றி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திரு.மனோகணேசன். 
இது தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்திட்டுள்ள அவர் சித்தவைத்தியர்களின் லேகியம்போல் தமிழ் மக்களில் சகல பிரச்சினைகளுக்கும் புலி தீர்வாகாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது முகநூலில் கீழ்கண்டவாறு பதிவிதிட்டுள்ளார்.
திரும்பி பார்த்து பாடம் படிக்க வரலாற்றை பயன்படுத்தலாம். ஆனால் வரலாற்றை அப்படியே "கார்பன் கொப்பி" செய்யக்கூடாது. அதாவது, இன்றைய கேள்விகளுக்கு, வரலாற்றுக்குள் நுழைந்து, முழுமையான பதில்களை தேட கூடாது. எடுகோள்களை, உதாரணங்களை தேடலாம்.
இன்னமும் தெளிவாக சொல்லப்போனால், ஒரு பதிலை எழுதி வைத்துக் கொண்டு எல்லாவற்றுக்கும் அதையே ஒரே பதிலாக கூறிக்கொண்டிருக்க கூடாது.
சில நாட்டு வைத்தியர்கள் ஒரு லேகியம் வைத்திருப்பார்கள். எந்த நோய், விடாய், வலி என்று அவர்களை நீங்கள் அணுகினாலும், அந்த ஒரே லேகியத்தையே சர்வரோக நிவாரணி என தருவார்கள். இது சிலவேளை தற்செயலாக சரிவரும்.


ஆனால், இன்று உலகம் வளர, காலம் போக, புதுசு புதிசாய் நோய்களும் அதிகரித்து விட்டன. ஆகவே சர்வரோக நிவாரணி என்று எதுவும் இன்று கிடையாது.

புதிய சூரியன் உதித்து, புதிய பூமி பிறக்க, புதிய காலம் பிறக்க, புதிதாய் சிந்திப்போம். புதிய மருந்துகளையும் தேடுவோம். புதிய பதில்களையும் தேடுவோம்.
இதைதான் நண்பர் சுமந்திரன் செய்கிறார் என நினைக்கிறேன். அவர் அறிந்த சிங்களத்தில் அவர் பேசும் போது ஒருசில சொற்கள் முன்னே, பின்னே விழுந்து இருக்கலாம்.

அவரது புதிய பார்வையை, அலசி ஆராயாமல், இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்ததை போல, பலர் கூட்டு சேர்த்து ஒருவரை போட்டு தாக்குவதை காணும் போது, இந்த விஷயத்துக்கு அப்பால் இவர்மீது பலருக்கு பகைமை முரண்பாடு இருப்பது துள்ளியமாக தெரிகிறது.

எனக்கும், சுமந்திரனுக்கும் கூட பல முரண்பாடுகள் பல காரணங்களுக்காக ஏற்பட்டன. உள்ளன. அவற்றை நான் மறைத்ததும் இல்லை. பகிரங்கமாக கூறி இருக்கிறேன். சுமந்திரனின் பக்தர்கள் சிலர் என்னை தாக்கியும் உள்ளனர். அவற்றை நான் கணக்கில் எடுக்கவில்லை.

ஏனெனில் எமது முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள். அவை ஒருபோதும் பகைமை முரண்பாடுகள் கிடையாது. முரண்பாடுகளை விட அதிகமாக ஒருமைபாடுகளும் உள்ளன.
இப்படி முரண்பாடுகளை, நட்பு முரண்பாடுகளாக வரையறை செய்து கொள்ளாமல், பகைமை முரண்பாடுகளாக மாற்றிக்கொண்டதால்தான், அநேகமான சக போராளிகளையும், சக அரசியல்வாதிகளையும், எல்லா ஆயுத இயக்கங்களும் வரலாறு முழுக்க “போட்டு” தள்ளினார்கள்.

அவர்கள் எல்லோரும் உயிரோடு இருந்திருந்தால், இன்று நிலைமை இதைவிட சந்தோஷமாக இருந்திருக்கும்.

ஏனெனில் அவர்களை அகாலமாக போட்டு தள்ளியதால், ஒன்றும் பெரிதாக ஆகி, இரவில் சூரியன் எரியவில்லை. பகலில் பாலும், தேனும் ஓடவில்லை. இரவிலும், பகலிலும் இரத்தம்தான் ஓடியது.

நல்லவேளை இப்போது ஆயுதம் இல்லை. இருந்திருந்தால் இப்போதும் போட்டு தள்ளி இருப்பார்கள். இப்படி போட்டு தள்ளி, போட்டு தள்ளி, போட்டு தள்ளியே நாம் உலக வரைபடத்தில் காணாமல் போயிருப்போம்.
என்னை பொறுத்தவரையில் எனக்கு, ராஜபக்சர்கள், விமல் வீரவன்ச, கம்மன்பில, ஞானசாரர் மற்றும் என்னை கைது செய்ய சொல்லும் தேரர் உட்பட எல்லோரிடமும்கூட இருப்பது நட்பு முரண்பாடுகள்தான்.
இதனால்தான், இன்று எனக்கு பாடலி சம்பிக்க ரணவக்கவுடன் கூட ஒரே கூட்டணியில் அரசியல் செய்ய முடிகிறது. இதைவிட என்ன சொல்ல?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக