புதன், 13 மே, 2020

பழக்கடைகளை தள்ளிவிட்ட நகராட்சி ஆணையரிடம் விசாரணை வீடியோ


நக்கீரன் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊரடங்கு விதிகளை பின்பற்றி கடைகள் செயல்படுகிறதா என்பதை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் மற்றும் வட்டாட்சியர் சிவபிரகாசம் ஆகியோர் தலைமையில், வருவாய் துறையினர் மே 12 ந்தேதி ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளில் பழங்களை கீழே தூக்கிப்போட்டார், பழ வண்டிகளை அப்படியே கீழே தள்ளிவிட்டார், பழ தட்டுக்களை உதைத்து தள்ளினார் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்.இதனை வியாபாரிகளால் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால் அவரின் செயல்கள் வீடியோ செய்தியாக வெளியாக அவரின் செயல்கள் கண்டனத்துக்கு உள்ளாகின.
உயர் அதிகாரிகள் இதுக்குறித்து நகராட்சி ஆணையரிடம் கடுமையாக கேள்விகளை எழுப்பினர். அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் செய்தியாளரை சந்தித்தார்.


இரண்டு நாட்களாக சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரித்தும், அரசு விதிகளை பின்பற்றாமல் அதே இடத்தில் கடைகள் வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த கடைகளை அப்புறப்படுத்த இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காததால் கரோனா பரவியது. அது போன்று இங்கும் நடந்துவிடக்கூடாது என்பதாலே அப்படி செய்தேன். வாணியம்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் சென்னையில் இருந்து வந்தவர்களால் கரோனா நோய் பரவி வருகிறது. சென்னை போல் வாணியம்பாடியில் கரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும், மக்களின் நலன் கருதியும் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை மக்கள் தவறாக எடுக்கும்பட்சத்தில் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பல அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்நிலையில் மே 13 ந்தேதி காலை நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் சிவபிரகாசம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட வியாபாரிகளிடம் நேரில் சென்று நேற்று நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தும், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காக நிவாரண தொகையையும் வழங்கினர்.

பின்னர் ஆணையாளர் சுசில் தாமஸ்க்கு, நகராட்சி நிர்வாக செயலாளர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு நேரடி விசாரணைக்காக உடனடியாக வரவேண்டும் என அழைத்தனர், அவரும் சென்றுள்ளார். அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக