திங்கள், 18 மே, 2020

கிராமப் பகுதிகளில் சலூன்களை திறக்கலாம்: முதல்வர்

கிராமப் பகுதிகளில் சலூன்களை திறக்கலாம்: முதல்வர் மின்னம்பலம் : ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மார்ச் 24ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக சலூன் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டதால் பலரும் 50 நாட்களுக்கும் மேலாக முடி வெட்ட முடியாமலும், முகச்சவரம் செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர். சிலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக்கொண்டனர்.

மே 3ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. சலூன் கடைகளை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தபோது, கொரோனா பரவல் அபாயம் காரணமாக சலூன் கடைகளை திறக்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் மூலம் பரவாத கொரோனாவா சலூன் கடைகள் மூலம் பரவப்போகிறது என இதற்கு எதிர்ப்பு எழுந்தது.
இதனிடையே சலூன் கடைகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே18) வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முகக் கவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், “கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக