திங்கள், 18 மே, 2020

உம்பன் புயலுக்கும் கஜா புயலை போல சேதம்! நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

Farmers
nakkheeran.in -பகத்சிங் : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை உம்பன் புயலாக மாறி வங்தேசம் நோக்கி பயணிக்கிறது. 21, 22 ந் தேதிகளில் அங்கே மணிக்கு 185 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். வங்க தேசம் செல்லும் உம்பன் புயலால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை இருக்கும் என்றும் கூறினார்கள். ஞாயிற்றுக் கிழமையன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழை பெய்தது. பல கிராமங்களில் காற்று மட்டுமே. இந்தக் காற்றில் ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகாக்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாதியில் முறிந்தும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.


Farmers


கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் மோகன்தாஸ் என்பவரின் வீட்டின் அருகில் நின்ற தென்னை மரத்தில் இடி விழுந்து வீட்டில் இருந்த தொலைக்காட்சி, மின்விசிறி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் என அனைத்து மின்சாதனப் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு உடைந்திருந்தது. மின் இணைப்புகள் அத்தனையும் எரி்ந்து நாசமானது. வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அதேபோல அருகில் உள்ள பல வீடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அங்கே சேதமடைந்திருந்தது.

வாழை மற்றும் பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக