திங்கள், 25 மே, 2020

புலம்பெயர் தொழிலாளிகள் விவகாரத்தில் சூழ்ச்சி அரங்கேறிவருகிறது.



சாவித்திரி கண்ணன் : எதற்கிந்த சூழ்ச்சி.. அவர்களை தடுத்தும், தண்டித்தும் எதை சாதிக்கத் துடிக்கிறீர்கள்...? படுபாதகமான சூழ்ச்சி ஒன்று புலம்பெயர் தொழிலாளி கள் விவகாரத்தில் அரங்கேறிவருகிறது.
’’அண்ணே, இந்த ஒரிசா தொழிலாளிகிட்ட பேசுங்க..’’ என்று போன் போட்டு கொடுத்தார்,டைம்ஸ் ஆப் இந்தியா போட்டோகிராபர் சங்கர்.
நான் பேசினேன்.அவர் பெயர் ஆனந்த் ஹரிபால்! புலம்பெயர் தொழிலாளியான அவரும் அவரது நண்பர்களுமாக கடந்த ஏப்ரல் 29ல் மத்திய அரசு அனுமதி அளித்ததில் இருந்து ஊர் செல்ல தவியாய் தவிக்கிறார்கள்!
சென்ட்ரல் ஸ்டேசன் அவர்களை ஏற்கவில்லை! பொறுத்துப் பார்த்து நம்பிக்கை இழந்த அவர்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் திரட்டி,ஆளுக்கொரு சைக்கிள் வாங்கினார்கள்.கொஞ்சம் அரிசி,மளிகை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சைக்கிளில் புறப்பட்டனர்.
காலை தொடங்கி நாள் முழுக்க சைக்கிள் ஓட்டிவிட்டு,மாலை நான்கு மணியளவில் ஏதாவது ஓரிடத்தில் நிறுத்திக் கொண்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு,படுத்துறங்கிவிட்டு,அடுத்த நாள் அதிகாலை பயணத்தை தொடங்குகிறார்கள்!

நான் பேசியபோது பயணம் தொடங்கி எட்டு நாட்கள் ஆயிற்று என்றனர்.
’’எங்கே இருக்கிறீர்கள்?’’ என்றேன்.
’’மாதவரத்தில்’’ என்றனர்.
’’என்ன,இன்னுமா மெட்ராசை கடக்கவில்லை..’’ என்றேன்.
ஆமாங்க சார்,பொன்னேரி,ரெட்கில்ஸ்..இப்படி பல செக்போஸ்ட்டுகளில் தடுத்து மீண்டும்,மீண்டும் திருப்பி அனுப்பினார்கள்.அதனால், நாங்க வயல்வெளி பக்கமாக நடந்து மறுபடியும் மேலே ஏறுவோம்.அப்படியும் பிடிச்சுடுறாங்க..இப்படியே அலைகழித்து இப்ப மாதவரத்தில் ஒரு ஸ்கூலில் வைத்திருக்கிறார்கள்’’ என்றார்.
இப்போது வரை அவர்கள் எப்போது ஊருக்கு செல்வோம் என்பது தெரியாமலே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ரூ4,500 க்கு வாங்கிய சைக்கிளை ரூ ஆயிரத்திற்கு விற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி விசாரித்தால்,’’புலம்பெயர் தொழிலாளர்கள் தானாக செல்வதை அனுமதிக்க கூடாது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டளையாம்!
நாடெங்கும் நெடுஞ்சாலைகளில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் காவல்துறையால் சந்திக்கும் இன்னல்கள் ரத்த கண்ணீரை வரவழைக்கின்றன!
இங்கத்தை விடவும் உத்திரபிரதேசத்தில் கொடுமை! ஆதித்தியநாத் (அரக்கநாத்,அல்லது ஆதிக்கநாத்) கொந்தளிக்கிறார்.மீடியாக்காரன்கள் வேற புலம்பெயர் தொழிலாளர் நடப்பதை போட்டோ எடுத்து மானத்தை வாங்குறான்.அதனால, நடந்து போகிறவர்களை கடுமையாக தண்டிக்க சொல்லி உத்தவிட்டுள்ளார்.
’’அப்ப நீங்களே, நல்லபடியாக அவர்களை அவரவர் ஊர் செல்ல ஏற்பாடு பண்ணலாமே…’’ என்றால்,அதற்கு தான் அவர்களிடம் விடை இல்லை…!
உண்மையில் என்ன நடக்கிறது தெரியுமா?
புலம் பெயர் தொழிலாளர்களில் பத்தில் ஒருவர்க்கு கூட பயண வசதி செய்து தரவில்லை நமது அரசுகள்!
தமிழகத்தில் மிகக் குறைவாக மதிப்பிட்டாலே முப்பது லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.ஆனால்,அவர்களில் இது வரை ஒரு லட்சத்து சொச்சம் பேர் தான் அனுப்பபட்டுள்ளனர்.
விண்ணபித்த ஒன்பது லட்சத்து சொச்சம் பேரில் கழித்துக்கட்டி இரண்டு லட்சத்து சொச்சம் தான் அனுப்பமுடிவெடுத்துள்ளனர்.விண்ணப்பித்து புறக்கணிக்கப்பட்டவர்களும்,விண்ணபிக்கவே தெரியாதவர்களுக்கும் நடப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்க முடியும்?
குஜராத் பா.ஜ.க அரசானது பதிவு செய்த 7,512 பேருக்குத் தான் பொறுப்பேற்குமாம்.’’பதிவு செய்யாமல் காத்திருக்கும் இருபத்திரண்டரை லட்சம் பேருக்கு பொறுப்பேற்க மாட்டோம்’’ என சொல்லிவிட்டது.
கர்நாடக பா.ஜ.க அரசு ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஐந்து ரெயில்களை கடைசி நேரத்தில் கேன்சல் செய்தது. காரணம்,சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவந்த கன்ஸ்டிரக்சன் கம்பெனி தந்த அழுத்தம் தான்!
ஆக, நாடெங்கும் உள்ள பெருமுதலாளிகள் இந்த அரசுக்குத் தரும் அழுத்தங்களே புலம்பெயர் தொழிலாளிகள் விஷயத்தில் மத்தியஅரசும்,அதன் கூட்டாளிகளான மாநில அரசுகளும் வெளிப்படுத்தும் மனிதாபிமானமற்ற அணுகுமுறைக்கான காரணங்களில் பிரதானமாகும்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணகட்டணத்தில் 85% மத்திய அரசு ஏற்பதாக சொல்லியது பல இடங்களில் அமலாகவில்லை!
தமிழகத்தை பொறுத்தவரை மிகப் பெரும்பாலான ரயில்களுக்கு தமிழக அரசே முழுக்கட்டணத்தையும் கட்டியுள்ளது.ஆனால்,மற்ற பல மாநிலங்களில் தொழிலாளிகளிடமே கெடுபிடியாக வசூலிக்கப்பட்டுள்ளது.(அந்த வகையில் சுமார் 100 கோடி ரயில்வேக்கு வருமானம் கிடைத்துள்ளது.)
காசில்லாமல் நடக்க நேரிட்டவர்களில் பலர் ஆங்காங்கே காவல்துறையால் தாக்கப்பட்டு வருகின்றனர். ஆந்திராவில் காவல்துறை தரும் டார்ச்சர் தாங்காமல் கிணற்றில் விழுந்து சில புலம்பெயர் தொழிலாளிகள் இறந்துள்ளனர்.
’அராஜகத்தாலும்,அடக்குமுறைகளாலும் புலம்பெயர் தொழிலாளர்களை முடிந்த வரை தக்கவைக்கலாம்’ என பெருமுதலாளிகளின் எடுபிடிகளான அரசுகள் நினைக்கின்றன!
நிர்கதியாய் நிற்பவர்களுக்கு உதவத் தான் மனமில்லையென்றாலும், அவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்கும் ஒரு அரசு உலகிலேயே இந்திய அரசாகத் தான் இருக்கும்.
சொந்த நாட்டின் மக்கள்,அதுவும் நாட்டுக்கே அச்சாணியாய்த் திகழும் உழைப்பாளிவர்க்கத்தின் மீது கண்மூடித்தனமான வன்முறையை ஏவுவதும், தாங்கள் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் அவர்கள் கால்பதிக்க மறுக்கப்பட்டு, அலைகழிப்படுவதுவும் இந்தியா இது வரை பார்த்திராத கொடூரமாகும்.
குடிசையோ,கூழோ,கந்தலோ,கோவணமோ…எதுவானாலும் ஏற்றுக் கொள்ளும் துணிவோடு வறுமையை கட்டியணைக்க புறப்பட்டு அவர்கள் போகிறார்கள் என்றால்,அந்த அளவுக்கு இந்த இரண்டு மாதகாலகட்டத்தில் அவர்கள் கைவிடப்பட்ட நிலையில் பசி,பட்டினி,வறுமை,துரோகம் எல்லாவற்றையும் பார்த்திட்டதன் வெளிப்பாடு தான்!
யோக்கியமான அரசென்றால் என்ன செய்திருக்க வேண்டும்?
முதலாவதாக,அவர்கள் புலம்பெயர்வதற்கான காரணங்களுக்கு பொறுப்பேற்று,அவர்கள் பிறந்த இடத்திலேயே அவர்கள் உழைப்பிற்கான மதிப்பை பெற்று தந்திருக்க வேண்டும்.
அதையும் செய்யவில்லை,புலம்பெயர்ந்த இடங்களில், ’’உழைப்பு அதிகம்,ஊதியம் குறைவு’’ என அவர்கள் சுரண்டப்பட்டதையும் தடுக்கவில்லை.
ஊரடங்கு அறிவிக்கும் முன்பு இந்த எட்டு கோடி தொழிலாளர்கள் நிலை என்னாகும் என்று ஒரு துளியும் யோசிக்கவில்லை,தற்போது 60 நாட்கள் கடந்தும் யோசிக்கவில்லை! இவர்களை பொறுத்த வரை உயிரோடு இருக்கும் இயந்திரங்களாகத் தான் இந்த புலம்பெயர் தொழிலாளர்களை பார்க்கிறார்கள்.
அதிலும் விலை உயர்ந்த இயந்திரங்கள் என்றால்,கண்ணும் கருத்துமாக ’மெயிண்டைன்’ பண்ணியிருப்பார்கள். ஏனெனில்,அவற்றுக்கு உயிர் இல்லை,இவர்களோ, உயிர் உள்ள இயந்திரங்கள்! ஆகவே,தன்னைத் தானே உயிர்வாழ்தலுக்காக இவர் பேணிக் கொள்வர். உயிரோடு இருக்கும் வரை லாபம், இல்லாவிட்டால், இல்லை ஒன்றும் நஷ்டம்! இது தான் இந்த இதயமற்றவர்களின் கணக்கு!
’’இந்த அரசு யாருக்கானது?’’ என்பது,இது ஊரடங்கு அறிவிக்கும் ஒரு வாரம் முன்பே,ஐ.ஐ.டியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களை பத்திரமாக அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்ததில் இருந்தே புரியவில்லையா? ஆனால்,இந்த ஐ.ஐடியில் படித்தவர்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு உடனடியாக ஓடிக் கொண்டிருப்பவர்கள் தான்!
அதிகமான அரசு பணத்தில் படுத்து அயல் நாட்டிற்கு தன் அறிவாற்றலை கொடுப்பவனுக்குத் தரும் மரியாதை, இந்த மண்ணுக்கே காலமெல்லாம் உழைத்து ஓடாய் தேய்பவனுக்கு இல்லையே!
அவனுக்கோ படிக்க செலவிட்ட சொந்த நாட்டின் மீதே அக்கரையில்லை. இவனுக்கோ,வாழ்வதற்கே,வழியில்லாத நிலையிலும் கூட சொந்த மண்ணின் மீதான ஈர்ப்பும்,பாசமும் ஒரு சிறிதும் குறைவதில்லை!
இதை குற்றமெனக் கருதி இவனை தடுப்பதும், தண்டிப்பதும் மிகப் பெரும் அநீதியல்லவா?
உங்கள் அராஜகத்தால் இவர்களை சிறிது காலம் வேண்டுமானால் அடக்கிவைக்கலாம், அலைகழிப்புகளால், முடக்க நினைக்கலாம், உங்கள் சட்டத்தால் இவர்களை சடலமாகக் கூட சாய்க்கலாம்!
ஆனால்,சொந்த மண்ணின் மீதான ஒருவரது இயல்பான ஈர்ப்பை ஒரு போதும் அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது.
தன் சொந்த நாட்டு மக்கள் மீது இத்தகைய கொடூர அணுகுமுறையுள்ள ஒரு அரசு வரலாற்றில் முன்னெப்போதும் இருந்ததில்லை.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக