ஞாயிறு, 10 மே, 2020

சீமான் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது! ... வீடியோ


Hemavandhana - /tamil.oneindia.com :  சென்னை: "முதல்ல பெரியார் மீது வழக்கு போடட்டும்.. அப்பறம் என் மீது வழக்கு போடட்டும்.. என்கிட்ட குடியுரிமை சர்ட்டிபிகேட் இருக்கு.. ஆனால் தர மாட்டேன்" அன்று கோவையில் சீமான் பேசிய பேச்சுக்கு இன்று தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் அடியெடுத்து வைக்கும் வரை ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கி வந்தது சிஏஏ விவகாரம்தான்.. நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்து சிதறின.. அது தமிழகத்திலும் எதிரொலித்து பரவியது வண்ணாரப்பேட்டை உட்பட நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் போன்றவை முழுமையாக இறங்கி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தின. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் போராட்டங்களை தமிழகம் முழுதும் நடத்தியது... அவைகளில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.. இதில் சீமான் பேசிய பேச்சுக்கள் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டன.

மதுரை கூட்டத்தில் சீமான் பேசியபோது, 'நான் இந்திய குடிமகனா என்று சான்று கேட்கிறியே.. நீ இது தெரியாமலேயே 72 ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்திட்டியா? நான் குடிமகனா இல்லையான்னு ஏன் இப்போ குழப்பம் வருது? முதல்ல மோடி, அமித்ஷா, பாஜக அமைச்சர்கள் இவங்க மொத்த பேரும் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்கட்டும், அதுக்கு பிறகு மக்கள் சமர்ப்பிப்பது குறித்து நாம அப்பறம் பேசுவோம்" என்றார் சீமான்.
இதுபோலவே கடந்த பிப்ரவரி 22ம் தேதி கோவையில் கூட்டம் நடத்தப்பட்டது.. அப்போது சீமான் பேசியபோது, "இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொன்னார்... வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது போட்டு விட்டு அப்புறம் என் மீது போடட்டும். என்கிட்ட குடியுரிமை சான்றிதழ் இருக்கு.. ஆனா தர மாட்டேன்.. அப்படி கேட்டால், நான் இந்திய குடிமகனாக இருக்க விரும்பவில்லைன்னு சொல்ல முடிவெடுத்துட்டேன்.. இதையே ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டும்" என்றார்
இந்த நிலையில், போராட்டத்தை தூண்டும் விதமாக பேசியது, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியது, உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியது, என்பவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு சீமான் மீது கோவை குனியமுத்தூர் ஸ்டேஷனில் தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக