ஞாயிறு, 10 மே, 2020

கர்நாடக இசை என்பதே ’களவாணிகளின் இசை’.. ஆபிரகாம் பண்டிதர் தான் (1859-1919) முடக்கப்பட்ட தமிழிசையை மீட்டெடுத்த மகான்

சாவித்திரி கண்ணன் : இதில் தான் அவாள்களின் குயுக்தியே
அடங்கியிருக்கிறது...!
’’கமலஹாசனுக்கு எதிரான கண்டண அறிக்கைக்கு உங்கள் கையொப்பத்தையும் இணைத்து கொள்ள விரும்புகிறோம்’’
என்ற வேண்டுகோளுடன் நேற்று ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது.
கமலஹாசன் தியாகய்யரை, ’’பிச்சை எடுத்து வாழ்ந்தவர்’’ என இழிவாகப் பேசிவிட்டாராம்.
’’தியாகய்யரைப் போல கலைச்சேவை செய்து,எதிர்பார்ப்புகளின்றி,தஞ்சை வீதிகளில் பிச்சை எடுத்து, அர்ப்பணிப்புடன் தன்னால் வாழமுடியாது’’ என்ற பொருளில் தியாகய்யரை பெருமைப் படுத்தி தான் கமல் மரியாதையுடன் பேசியுள்ளார் என காணொலியைப் பார்த்து உறுதிபடுத்திக் கொண்டேன்.
எனக்குப் புரிந்துவிட்டது..!

நேற்று வரை தியாகய்யர் என்றால் யாரென்றே தெரியாதிருந்த பாமரனுக்கும் இன்று கமலஹாசனை எதிர்ப்பதாக பேர் பண்ணி கொண்டு சேர்த்து விட்டார்களல்லவா? அனைத்து காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இன்று தியாகய்யரின் பெருமைகளை பேசவும்,எழுதவும் வைத்துவிட்டனரல்லவா?
எத்தனையோ அர்ப்பணிப்புள்ள கலை மேதைகள் வாழ்ந்திருந்தாலும் கமலுக்கு தியாகய்யரைத் தான் குறிப்பிடத் தோன்றுகிறது! இந்த விவகாரத்தில் தான் அநியாயமாக தாக்கப்படுவதாக தெரிந்தாலும் கமலும் அதற்காக வருத்தப்படமார் என்பதை அவர்களும் அறிவார்கள்!
ஆனால், என்ன தைரியத்தில் என்னிடம் கையெழுத்து கேட்க துணிந்தனர் அவர்கள்..? அவர்களின் கபட நாடகங்களை கடந்த பல்லாண்டுகளாக பார்த்து வருகின்றேனே..!

என்னுடைய இதழியல் பணிகளில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் கர்நாடக சங்கீதமென்றும்,தியாகராயர் கீர்த்தனைகள் என்றும் சபாக்கள் தோறும் அலப்பறை செய்வதை அயர்ச்சியுடன் பார்த்து வருகிறேன்.
என்னை பொறுத்தவரை கர்நாடக இசை என்பதே ’களவாணிகளின் இசை’ என்பேன். தியாகய்யர் என்பவர் தமிழிசையை திருடி பிழைத்தவர் என்பேன்!
இந்த தெளிவை எனக்கு தந்தவர்கள் ஆபிரகாம் பண்டிதர் தொடங்கி அனேக தமிழிசை மேதைகள்!
ஆபிரகாம் பண்டிதர் தான்( 1859-1919) முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த தமிழிசையை மீட்டெடுத்தவர்! அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய அபூர்வப் பிறவி! இசை மேதை,மூலிகை மருத்துவ மேதை,வரலாற்று அறிஞர்,கேமரா நிபுணர், பறவையியல் ஆய்வாளர் என சகலகலா வல்லவராகத் திகழ்ந்தவர் அவர்!
அவரது ’’கருணாமிர்த சாகரத் திரட்டு’’ என்ற கடலுக்கு நிகரான இசை களஞ்சியமான நூல் ஒன்றே அவரை இன்னும் பல நூற்றண்டுகள் சகா வரம் பெற்றவராக வாழவைக்கும்! சிலப்பதிகாரம் தொடங்கி பரிபாடல் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் உள்ள தமிழிசை பற்றிய அத்தனை அபூர்வ நுட்பமான செய்திகளையும் ஆவணப்படுத்தி பதிப்பித்தவர் அவரே!
ஆபிரகாம் பண்டிதர் தான் அகில இந்திய அளவிலான இசை மேதைகளையெல்லாம் அழைத்து தஞ்சையில் ஆறு மிகப் பெரிய இசை மாநாடுகளை நடத்தினார். மேற்கத்திய இசைக்கும் தமிழிசைக்குமான தொடர்புகளையும் அழகாக ஆய்வு செய்துள்ளார்.
தமிழிசையில் இருந்து எப்படி இந்துஸ்தானி இசை வளம்பெற்றது என்பதையும் அந்தந்த இசை மேதைகளை அழைத்தே நிறுவினார்! அவர் வாழ்ந்த காலத்தில் அவரை அறியாதவர்களே இசைத் துறையில் இல்லை எனலாம்!
ஆபிரகாம் பண்டிதர் இல்லையென்றால் தமிழிசை இயக்கம் என்ற ஒன்றே உருபெற்று இருக்காது.அவர் தூவிச் சென்ற விதைகள் தான் பிற்காலத்தில் தமிழிசைக்கான இயக்கமாக விருட்சம் கண்டது.தண்டபாணி தேசிகர் தொடங்கி தியாகராஜ பாகவதர்,கே.பி.சுந்தராம்பாள்,சீர்காழி கோவிந்தராஜன் போன்ற தமிழிசை மேதைகள் பலர் உருவாக அடித்தளமிட்டார்.
கர்நாடக இசை என்ற ஒன்று எப்படி தமிழிசையை காப்பியடித்து மேலெழுந்தது என்பதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு நிறுவியவர் அவரே! அவருக்குப் பிறகு நாகஸ்வர மேதை மதுரை பொன்னுசாமி தொடங்கி எஸ்.ராமநாதன் வரை ஏகப்பட்ட இசைமேதைகள்,ஆய்வாளர்கள் இதை தோலுரித்து காட்டிவிட்டனர்!
கர்நாடக இசை என்ற சொற்பிரயோகமே முன்நூறு ஆண்டுகாலமாகத் தான் புழக்கத்தில் உள்ளது. ஆனால்,தமிழிசை என்பதோ 2,700 வருடத்திற்கும் மேலாக புழக்கத்தில் உள்ளது.
தியாகய்யர் காலம் ( 1767-1847) என்பது மிகவும் பிற்காலத்தியது.
அவருக்கும் முற்பட்டவர்கள் தான் தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர்(1525-1600), அருணாச்சல கவிராயர்(1711-1779),மாரிமுத்தா பிள்ளை(1712-1787) ஆகியோர்!
முத்துதாண்டவரின் பண்களையும்,சுரங்களையும் கர்நாடக இசையின் ராகங்களாக மாற்றினார்கள். அருணாசல கவிராயரின் ராம நாடகத்தில் உள்ள கீர்த்தனைகள் தான் தியாகய்யரின் ராம கீர்த்தனைகளாக மடைமாற்றம் கண்டன!
தியாகய்யர் ஆந்திராவில் வாழ்ந்தவரல்ல, திருவாருரில் பிறந்து,திருவையாறில் வாழ்ந்தவர். தமிழையும்,தமிழிசையையும் நன்கு கற்ற அவர் ராமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்! தமிழ் நன்கு தெரிந்திருந்தும் தமிழில் அவர் ஒரு கீர்த்தனை கூட எழுதியதில்லை! மாறாக சஸ்கிருதத்திலும், தெலுங்கிலுமே பாடினார்.இரண்டு மொழியிலுமே அவருக்கு நல்ல புலமை இருந்ததாக சொல்ல முடியாது! அதனால்,கொச்சையான தெலுங்கில் தான் எழுதினார் என்கிறார்கள்! ஆனால், அவரது ராமபக்தி அவரது பாடலை கேட்பவர்களை உருக வைத்தது. பிற்காலத்தில் பலரும் தியாகய்யரின் பாடலுக்கு மெருகூட்டி அழகு சேர்த்தனர் என்பதே வரலாறு!
பாடினால் பரவசம் பெருகும்,கேட்டால் உள்ளம் உருகும் இந்த தமிழ்மண்ணின் இசையை பாடி வந்த பாணர்களும்,பறையர்களும்,கடம்பம் தயாரித்து வாசித்த கடம்பர்களும், நாதஸ்வரம் வாசித்த இசை வேளார்களும் காலப்போக்கில் காணமலடிக்கப்பட்ட கண்ணீர் வரலாற்றை என்னென்று சொல்வேன்…?
சதிர் பரதமாக மாறியதில் தேவரடியார்கள் உருத்தெரியாமல் போனது போல, தமிழிசை கர்நாடக இசையானதில் காணாமல் போன அல்லது அழித்தொழிக்கப்பட்ட ஆயிரமாயிரம் அற்புதமான இசைவாணர்களை எண்ணும் தோறும் உள்ளம் குமுறுகிறது!
தமிழிசையை தமிழ் நாட்டிலிருந்தே அப்புறப்படுத்தி கர்நாடக இசை மற்றும் தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே சபாக்களில் கோலோச்சும் நிலை உருவானதற்கு தியாகய்யரே முக்கிய காரணகர்த்தா!( இவருக்கு முன்பே சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர், வேங்கடபதி,புரந்தரதாசர் ஆகியோர் தமிழிசையை கர்நாடக இசைக்கு மடைமாற்றினர்) ஆயினும், தியாகய்யரை மையப்படுத்தி தான் தமிழகத்தில் உயிர்துடிப்புள்ள தமிழிசை ஓரம்கட்டப்பட்டது.
உயிர்ப்பற்ற,ரசங்களே இல்லாத கர்நாடக இசை பிராமணர்களின் திட்டமிட்ட கூட்டுணர்வாலும், ஒற்றுமையாலும் ஆதிக்கம் பெற்றது.
வருடம் தவறாமல் பிராமண கலைஞர்களின் முன்முயற்சியால் அனைத்து கர்நாடக இசை கலைஞர்களும் தியாகய்யர் சமாதிக்கு சென்று இசை ஆராதனை செய்கிறார்கள்! கர்நாடகத்தை சேர்ந்த புரந்தரதாசருக்கு கூட ஆண்டுதோறும் தமிழகத்தில் விமரிசையாக விழா எடுக்கப்படுகிறது!
அது போல முத்து தாண்டவருக்கோ, அருணாச்சல கவிராயருக்கோ, மாரிமுத்தா பிள்ளைக்கோ,ஆபிரகாம் பண்டிதருக்கோ,முத்தமிழையும் பிழிந்து சிலப்பதிகாரமாகத் தந்த இளங்கோவடிகளுக்கோ நாம் பெரும்விழாவாக – மக்கள் திருவிழாவன்றோ எடுத்திருக்க வேண்டும்?
தமிழர்களாகிய நம்மிடம் நன்றியுணர்வும், கூட்டுணர்வும் இல்லாததால் தான், சரக்கே இல்லாத பிராமணர்கள் சுலபத்தில் வெற்றி பெறமுடிகிறது. நம் இசைஞானி இளையராஜா போன்றவர்கள் தமிழிசை மூவரையும்,ஆபிரகாம் பண்டிதரையும் கொண்டாடி, நன்றி பாராட்ட வேண்டும். ஆனால்,செய்வதில்லையே!.
சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக