சனி, 9 மே, 2020

மகாராஷ்டிரா .அசந்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரெயில் .. நடந்தது என்ன..?


நக்கீரன் : தங்களது சொந்த மாநிலத்திற்கு நடைப்பயணமாகச் சென்ற 16 புலம்பெயர் தொழிலாளர்கள் மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், உடல் அசதியால் தண்டவாளத்தில் அயர்ந்து தூங்கிய போது, அவ்வழியே வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதில் 16 பெரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.  ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்துவரும் புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப்பயணமாகவே பல நூறு கிலோமீட்டர்கள் நடந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ரயில் இருப்புப்பாதை வழியாக நடந்து சென்றுள்ளனர். இன்று அதிகாலை அவர்கள் அவுரங்காபாத்-ஜல்னா ரயில் பாதையில் நடந்துவந்தபோது உடல் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர்.


அப்போது காலை 5.30 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்திருப்பதைக் கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றும் முடியாததால் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிச் சென்றது. இந்தச் சம்பவத்தில் 14 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதமுள்ள இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரச் சம்பவம் குறித்து ஜல்சான் போலீஸ் அதிகாரி சந்தோஷ் கேத்மாலா கூறுகையில், “ஜல்கானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். லாக்டவுன் காரணமாகத் தொழிற்சாலை மூடப்பட்டதால், சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்றனர். சுமார் 35 கிலோமீட்டர் தூரம் நடந்து கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாகத் தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியபோது அவர்கள் மீது ரயில் ஏறி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக