ஞாயிறு, 24 மே, 2020

சர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்!

சர்வதேச விமான பயணிகளுக்கான விதிமுறைகள்!மின்னம்பலம் : இந்தியாவில் சர்வதேச விமான பயணிகளுக்கான புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று (மே 24) வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னதாக சர்வதேச விமான சேவைகளும் தொடங்க இருப்பதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். அதோடு வெளிநாட்டில் இருக்கும் இந்திய அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் நாடு திரும்பும் வகையில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்தது.
இதனிடையில் சர்வதேச விமான பயணிகளுக்கான வழிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், போர்டிங்குக்கு முன்னதாக பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இதில் 7 நாட்கள் வீடுகளிலும் அதன்பிறகு 7 நாட்கள் சொந்த செலவில் கட்டணம் செலுத்தி ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
மருத்துவ உதவி, சிகிச்சை, பிரசவம், உறவினர்கள் மரணம் உள்ளிட்ட அவசர தேவைக்கு வரும் நபர்கள் மட்டும் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் மொபைலில் வைத்திருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது உள்ளிட்ட விவரங்கள் பயணச்சீட்டில் இடம் பெற்றிருக்கும்
வெப்ப பரிசோதனைக்கு பிறகு அறிகுறி அற்ற பயணிகள் மட்டுமே விமானம் மற்றும் கப்பலில் ஏற அனுமதிக்கப்படுவர்.
எல்லைகள் வழியாக வரும் பயணிகளும் மேலே உள்ள நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் அறிகுறி அற்றவர்கள் மட்டுமே எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.
விமானத்தில் அல்லது கப்பலில் உள்ள நபரால் சுய அறிவிப்பு படிவம் நிரப்பப்படும். அதன் நகல் விமான நிலையம், துறைமுகங்களில் உள்ள சுகாதாரம் மற்றும் குடிவரவு அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.
விமான நிலையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் .
விமான நிலையங்கள் துறைமுகங்களில் இந்த வைரஸ் தொற்று பற்றிய அறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக