ஞாயிறு, 24 மே, 2020

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு தலைவர்கள் கண்டனம்


தினகரன் :சென்னை: ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி(தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மீது ஆர்.எஸ். பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத்துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். இவரது செயல்பாடுகளை முடக்கி, மன உளைச்சல் ஏற்படுத்துவதற்காக இத்தகைய அடக்குமுறையை அவர் மீது ஏவி விடப்பட்டு இருக்கிறது. வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஊழல் முகத்திரையைக் கிழிப்பதற்கும், அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், திமுகவின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, எதிர்க்கட்சியின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். பாசிச வெறிகொண்ட அதிமுக அரசு, இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது.


தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்:   திமுக முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும், மூத்த வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆதிவாசி மாணவனை செருப்பை கழற்ற வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காவல்துறையினரை அவமானப்படுத்தி கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்துள்ளது அரசியல் பழிவாங்கும் நோக்கமே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் : ஊழல் வழக்கை திசை திருப்பி, நீதிமன்றத்தை தவறாக வழி நடத்தும் உள்நோக்கத்துடன் அதிமுக அரசு ஆர்.எஸ் பாரதியை கைது செய்திருக்கிறது. திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்):  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம்கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்கு தலித்மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான
அடையாளங்களாகும்.

முருகவேல் ராஜன் (மக்கள் விடுதலை கட்சி தலைவர் ): கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு சானிடைசர் கொள்முதலில் ₹200 ேகாடிக்கு மேல் ஊழல் முறைகேடு செய்துள்ளது. இதில் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழலை ஆர்.எஸ்.பாரதி ஊடகங்கள் மூலமாக நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த இருந்த நிலையில் அதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட தமிழக அரசு அதில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தனது ஊழல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் இந்த கைது நடவடிக்கையை செய்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக