திங்கள், 25 மே, 2020

பாஜகவில் டாக்டர் கிருபாநிதிக்கு என்ன நடந்தது? அவர் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்?

ராஜா ஜி : முன்னாள் பாஜக தலைவர் டாக்டர் கிருபாநிதி, இல.கணேசனால் நடத்தப்பட்ட வரலாறும்... அவர் திமுகவில் இணைந்த வரலாறும்...
கிருபாநிதி அவர்கள் 2000 ஆண்டு முதல் 2003 வரை பாஜக தலைவராக நீடித்தார்.
இல.கணேசன் தன்னை ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாகவும், அடித்ததாகவும் பாஜகவில் தீண்டாமை நிலவுவதாகவும் வெளிப்படையாக அறிவித்து அதிர வைத்தார்.
இந்தூரில் நடந்த பாஜகவின் தேசிய அளவிலான கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது தனக்கு நடந்த கொடுமை குறித்து 2003 ஏப்ரலில் அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் முக்கியமானது.
“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல.கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.
அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார். நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலைமையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

இல.கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?
டாக்டர் கிருபாநிதி: என் பதவிக்காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல.கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.
நீங்கள் தமிழகத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?
டாக்டர் கிருபாநிதி: ஆமாம் . தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்தரலை. ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.
இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல.கணேசன்தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.
உங்கள் கட்சியில் சாதிய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?
டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை”
- இது டாக்டர் கிருபாநிதியின் பேட்டி. (தகவல் உதவி: 2009இல் வெளியான விடுதலை இதழில் இருந்து)
ஒருகட்டத்தில் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
பாஜக அலுவலகத்திலேயே நடந்த
கூத்து!
கிருபாநிதியின் விலகலின்போதும் பெரும் கூத்து நடந்தது. 2011 பிப்ரவரியில், கிருபாநிதி திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள், இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினர்.
ஆனால், பொன்னார் இதை
மறுத்தார்.
“பாஜகவின் கொள்கையில் மிகுந்த பற்றுள்ள கிருபாநிதி எந்தக் கட்சியிலும் சேரவில்லை. பாஜகவில்தான் நீடிக்கிறார். அவரே வந்துவிடுவார்” என்றார். அந்த சமயத்தில் கிருபாநிதியும் வந்துவிட்டார்.
சிரித்தபடியே, "பார்த்தீர்களா அவரே வந்துவிட்டார்" என பெருமையாக நிருபர்களிடம் கூறினார் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஆனால், கிருபாநிதியோ, “ஆமாம். நான் திமுகவில் சேர்ந்துவிட்டேன். சில விளக்கங்களைக் கூறவே இங்கு வந்தேன்” என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டார்.
வேறுவழியின்றி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியை வேகமாக முடித்துக் கொண்டு, கிளம்பிவிட்டார்.
(டாக்டர் கிருபாநிதி கடந்த 2017இல் காலமானார்).
https://tamil.asiavillenews.com/…/do-you-remember-former-bj…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக