செவ்வாய், 19 மே, 2020

தயாநிதிமாறனை கைது செய்ய தீவிரமாகும் பாஜக

தயாநிதிமாறனை கைது செய்ய தீவிரமாகும் பாஜகதமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை கடந்த மே 13ஆம் தேதி ஒருங்கிணைவோம் வா திட்ட மனுக்கள் கொடுப்பது தொடர்பாக சந்தித்த திமுக எம்பிக்கள் வெளியே வந்து, ‘தலைமைச் செயலாளர் எங்களை அவமதித்துவிட்டார்’ என்று புகார் கூறினார்கள். அதிலும் குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை தொகுதி எம்பியுமான தயாநிதிமாறன், ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தினார்” என்று சொன்னது பெரும் சர்ச்சையானது. இதற்கு மே 14 ஆம் தேதி தயாநிதிமாறன் தனது ட்விட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்தார்.
அதற்குப் பிறகும் தயாநிதிமாறனுக்கு எதிராக நடவடிக்கை கோரி புரட்சி பாரதம் உள்ளிட்ட பட்டியலின மக்களுக்காக போராடும் கட்சிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்நிலையில் இந்தப் பிரச்சினையில் தயாநிதிமாறனுக்கு எதிராக பாஜக தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் மீது புகார் கூறியதோடு நாடாளுமன்ற சபாநாயகர் வரை அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவருவதற்குக் கடிதம் எழுதிய மாறனையும், டி.ஆர்.பாலுவையும் அதிமுகவினரை விட கடுமையாக எதிர்க்கிறது பாஜக.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களில் மட்டும் 25 காவல்நிலையங்களில் தயாநிதிமாறனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும்படி பாஜகவின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாருக்கு போலீசார் சி.எஸ்.ஆர். காப்பியும் கொடுத்துள்ளனர் போலீஸார். மேலும், பல்வேறு காவல்நிலையங்களில் பதியப்படும் வழக்குகளை ஒரே வழக்காக மாற்றுவதற்காக அதை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப் போவதாக போலீஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இதுபோல தயாநிதிமாறனுக்கு எதிராக பாஜகவினர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்து வரும் நிலையில், தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி திரிபாதி ஆகியோரை பாஜக தலைவர்கள் மே 18 ஆம் தேதி நேரில் மனு அளித்துள்ளனர்.
“கடந்த 15-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தங்களை அவமதித்து விட்டதாகக் கூறி, நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா? என்று பட்டியலின சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் . எனவே, தயாநிதி மாறன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், மாநில எஸ்சி பிரிவு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் தமிழக காவல் துறை தலைவர், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

தற்போதைய பாஜக தலைவர் எல். முருகன் ஏற்கனவே எஸ்சி.எஸ்டி ஆணைய துணைத் தலைவராக இருந்தவர். அவரது உத்தரவின் பேரில்தான் மாநிலம் முழுதும் தயாநிதிமாறன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பாஜக தலைவர்கள் டிஜிபியை சந்தித்துள்ளனர். இதன் மூலம் தயாநிதிமாறனைக் கைது செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக