செவ்வாய், 19 மே, 2020

பொருளாதாரத் தொகுப்பு 1.86 லட்சம் கோடிதான்: சிதம்பரம்

பொருளாதாரத் தொகுப்பு 1.86 லட்சம் கோடிதான்: சிதம்பரம்மின்னம்பலம் :
பொருளாதாரத் தொகுப்பு 20.97 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலானது அல்ல என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ் 20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து நாட்களாக வெளியிட்டு வந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயம், தொழில் துறை, மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
ஐந்து பகுதிகளாக அறிவிக்கப்பட்ட நிதிகளின் மொத்த மதிப்பு 11,02,650 கோடி ரூபாய் என்றும், பிரதம மந்திரியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கு 1,92,800 கோடி ரூபாய், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளின் மூலம் 8,01,603 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.
பிரதமரின் பொருளாதாரத் தொகுப்பில் மொத்தமாக 20.97 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இவ்வளவு தொகை ஒதுக்கப்படவில்லை என்றும், குறைவான தொகையை ஒதுக்கி ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கான செலவுகளையும் சேர்த்துக் காட்டுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்த நிலையில் பொருளாதாரத் தொகுப்பு தொடர்பாகக் காணொலி மூலம் நேற்று (மே 18) ஊடகங்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், “பிரதமரின் பொருளாதார ஊக்கத் திட்டம் என்பது 0.8 சதவிகிதம் முதல் 1.5 சதவிகிதம் மட்டுமே எனப் பொருளாதார ஆய்வாளர்களும், ரேட்டிங் நிறுவனங்களும், வங்கிகளும் மதிப்பிடுகின்றன.
பொருளாதார ஊக்கத் திட்டம் 20 லட்சம் கோடி மதிப்பிலானது அல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.91 சதவிகிதமான 1,86,650 கோடி ரூபாயைத்தான் பொருளாதாரத் தொகுப்பாகப் பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்திருக்கிறார்கள். மீதமுள்ள அறிவிப்புகள் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை, நீண்ட கால திட்டங்களாகும்” என்று குற்றம்சாட்டினார்.
பொருளாதார ஊக்கத் திட்டத்தின் அறிவிப்புகள் ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிடும் அவர், இந்தத் தொகை பொருளாதாரச் சிக்கலில் இருந்து ஏழைகளையும், புலம்பெயர் தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் மீட்கப் போதுமானதாக இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதமான ரூ.10 லட்சம் கோடிக்கும் குறையாத திருத்தப்பட்ட தொகுப்பை அறிவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினார்.
மத்திய அரசு வேண்டுமென்றே நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டிய சிதம்பரம், “பொருளாதாரத் தொகுப்பு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டத்தை நடத்த வேண்டும். நிதிப் பற்றாக்குறை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் இதுவல்ல. கூடுதலாக 10 லட்சம் கோடி செலவு செய்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக