ஞாயிறு, 24 மே, 2020

டான் அசோக் : தவறான சொற்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடாது !

Don Ashok. : Politically correct ஆக பேசுவது என ஒன்று இருக்கிறது. இனவெறி, பாலின வேறுபாடு, சாதிவேறுபாடு போன்ற எதுவும் இல்லாமல், அதாவது ஒரு சமூகத்தில் யாரையும் புண்படுத்தாமல் பேசுதல் எனப் பொருள். நிற்க.
நம்மூரில் பொட்டை என திட்டும் பழக்கம் பள்ளியிலேயெ துவங்கிவிடுகிறது. அதன் அடுத்த பரிணாமம்தான் "இதை செய்யலேனா சேலை கட்டிக்கிறேன்," "சரியான ஆம்பளையாக இருந்தால் இதை நிரூபி," என்றெல்லாம் பெரியவர்கள் பேசுவது. இது சாதிச்சொற்களுக்கும் பொருந்தும். ஒருவரைத் திட்டுவதற்கும் காமடி பண்ணுவதற்கும் நாம் ரொம்ப சாதாரணமாக உபயோக்கும் பல வார்த்தைகள் சாதிப் பெயர்கள்தான்.
ஆர்குட் காலத்தில் வடிவேலுவின் தாக்கத்தில் நான் அடிக்கடி நாதாரி என்ற வார்த்தையை உபயோகிப்பேன். பின்னர் அது சாதிப்பெயர் எனத் தெரிந்தது. வெட்டியான், அம்பட்டன் என்பது தொழில்கள் என்றும் அதை யார் செய்தாலும் அவரை அப்படித்தான் அழைப்பார்கள் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அவையும் சாதிப்பெயர்களே என பின்னர் தெரிந்தது. அதேபோல் சண்டாளப் பயலே என திட்டுவார்கள், பண்டாரம் மாதிரி அலையாத என்பார்கள். எல்லாமே சாதிப்பெயர்கள் எனத் தெரிந்தபோது அடப்பாவிகளா என்றிருந்தது.

பின்னாட்களில், பாலியல் தொழிலுக்குக் கூட ஒரு சாதியை ஒதுக்கிய பெருமைமிகு சமூகம் நம் இந்திய-பார்ப்பனீயச் சமூகம் என நம் வரலாற்றைத் தெரிந்துகொண்டபோது கலாச்சாரம், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை எனப் பெருமை பேசுகிறவன் மீதெல்லாம் காறித்துப்பத்தான் தோன்றியது.
கொஞ்சநாள் முன்பு "சண்டாளி" என ஒரு பாடல் செம ஹிட் ஆகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. அதுவும் சாதிப்பெயர்தான். 'பக்கி' என்பதும் சாதிப்பெயர் என்பது இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எனக்குத் தெரியும். ஒருகாலத்தில் நம் நாட்டில் மனிதர்களைவிட சாதிகள் நிறைய இருந்ததோ என எண்ணும் அளவுக்கு அவ்வளவு சாதிப்பெயர்கள். அதைவிட அசிங்கம், ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர்கள் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக திட்டுவதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகளாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டிருப்பதுதான். அட அவ்வளவு ஏன்? இங்கு சோறு எனச் சொல்வதிலும் சாதம் எனச் சொல்வதிலும் கூட சாதிய அடையாளம் அடங்கி இருக்கிறது.
தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசியல் ரீதியாகச் சரியாக பேச வேண்டும் என்பதில் அண்ணாவும் கலைஞரும் மிக மிக கவனமாக இருந்தார்கள். தன் சாதியைக் குறிக்கும் விதமாக தன்னை "அப்பன் பெயர் தெரியாத ***###" என போர்டு வைத்த எதிரிகளைக் கூட அண்ணா மோசமாகப் பேசியதில்லை. அந்த போர்டுக்கு ஒரு லைட்டு மாட்டுங்கள், மக்கள் நன்றாக அதைப் படிக்கட்டும் என்றார். அவரிடம் பாடம் பயின்ற கலைஞரோ அரசு குறிப்புகளில் ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியலின சாதிகள் எல்லாம் 'ன்' விகுதியிலும் மற்ற சாதிகள் 'ர்' விகுதியிலும் குறிப்பிட்டிருப்பதை மாற்றி எல்லாவற்றையும் 'ர்' விகுதி ஆக்கினார். பொதுச்சமூகத்தில் அறியவேபடாத சாதிகளுக்கு கூட தேடித் தேடி இட ஒதுக்கீடுகளை வழங்கினார். (ஆனால், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சாதிகளைச் சேர்ந்தவர்களில் சிலர் இன்றும் கலைஞரைச் சாதி சொல்லியும் குலத்தொழில் சொல்லியும் மட்டம்தட்ட நினைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களிலேயே கூட ஒருவருக்கொருவர் ஏற்றதாழ்வு பார்க்கவைக்கும் சூழ்ச்சி நிறைந்த சாதிய அடுக்குக் கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள இதெல்லாம் வழிகள்) அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் போன்ற வார்த்தைகளை கலைஞர் வழக்கத்தில் கொண்டு வந்தார்.
வலதுசாரிகள் பொதுவாக politically correct ஆக பேச மாட்டார்கள். ஏனெனில் ஆண் உயர்ந்தவன், இந்த இனம் உயர்ந்தது, இது தாழ்ந்தது, இந்த மதம் பெரியது என அவர்களின் அடிப்படைக் கொள்கையே அப்படிப்பட்டது. அதனால்தான் ட்ரம்ப் முதல் RSS பாஜக அடிமட்ட தொண்டன்வரை politically correctஆக பேசும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள், இருக்கவும் மாட்டார்கள்.
ஆனால் சமூகநீதியை, அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை அறியாமல் தவறான வார்த்தைகளை உச்சரிக்கும்போது அது பளிச்சென தெரியும். பெரும் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் காலம்காலமாக பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் படிக்கக் கூடாது, முன்னேறக் கூடாது என ஓயாமல் உழைக்கும், நுழைவுத்தேர்வுகளைக் கொண்டுவரும், அனிதாக்களின் தற்கொலைகளைக் கிண்டல்செய்யும் பார்ப்பனிய இந்துத்துவக் கூட்டம் கூட நமக்கு எதிராக பெரிய நியாயவானைப் போல கம்பு சுழற்றும்.
ஆக, சில சாதியச் சொற்களை நாத்தவறி கூட பேசிவிடக்கூடாது என்பதில் மற்ற எல்லோரையும் விட நாம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும். கவனமாக இருக்க வேண்டும் எனச் சொல்வதே கூட தவறுதான். உணர்ச்சிவயம், கோபம் என எந்த மனநிலையில் பேசினாலும் 'ஒரு flow'வில் கூட நமக்கெல்லாம் அந்தச் சொல்லாடல்கள் வராத ஒரு மனநிலை நமக்கு ஏற்பட வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறைக்காவது இந்தச் சொற்கள் கடத்தப்படாமல் இருக்கும். அதைத்தான் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் விரும்புவார்கள்.
டான் அசோக்
மே 24, 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக