புதன், 13 மே, 2020

கூடங்குளம் வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர் போராட்டம் வெற்றி!

மின்னம்பலம்:   டி.எஸ்.எஸ்.மணி கூடங்குளம் அணு உலைகளைக் கட்டுவதற்காகக் கட்டுமான நிறுவனமான எல் &; டி நிறுவனம் கொண்டுவந்திருந்த வட இந்திய ஒப்பந்தத் தொழிலாளிகள் 1,200 பேரை நேற்று (மே 12) மாலை அவர்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல ரயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூடங்குளம் அணு உலை வளாகத்திலிருந்து 31 பேருந்துகளில் அவர்கள் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் 16 பேருந்துகள் எல் & டி நிர்வாகத்துக்குச் சொந்தமானவை. மீதி 15 பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்தவை. நேற்று (மே 12) இரவு 10 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து பீகாரை நோக்கி அந்தத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ரயில் கிளம்பியது.இதற்கான ஏற்பாடு கூடங்குளத்தில் தடபுடலாகச் செய்யப்பட்டது.

7.000 பேர் வரை வட இந்திய தொழிலாளர்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிக்கு எல் & டி நிறுவனம் கொண்டுவந்திருந்தது. 2017ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக அவர்களை அணு உலை வளாகத்துக்கு உள்ளேயே கதிர்வீச்சு அபாயத்துக்குள் வைத்திருந்தது. அவர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் கொடுக்காமல் அணு உலையின் கதிர் வீச்சு, அந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பாதிக்கும் என்பதை பற்றியும் கவலைப்படாமல் 3 - 4 மற்றும் 5 - 6 ஆகிய அணு உலைகளைக் கட்டுவதற்காக என்ற பெயரில், ஆயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை வேலை வாங்கி வந்தது. கூடங்குளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மோதலில் காயமடைந்த காவலர்களுக்கு நிதியையும் அறிவிக்கும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அறிக்கையும் கொடுத்திருந்தார். அது போராடிவந்த தொழிலாளர்களுக்குச் சிறிது நம்பிக்கையைக் கொடுத்தது.
நேற்று கூடங்குளத்தில் காலை முதல் நடந்த ‘தடபுடல்’ என்பது சற்று வித்தியாசமாக இருந்தது. ஆயிரக்கணக்கான வட இந்தியத் தொழிலாளர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்பதால், என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் காவல் துறை ஒரு படையையே குவித்திருந்தது. ஐஜி, எஸ்பி, ஏஎஸ்பி, பிடிஓ, வட்டாட்சியர், மாவட்டத் துணை ஆட்சித் தலைவர், அதிரடிப் படையினர், வஜ்ரா வாகனம் ஆகியவற்றுடன் 500 காவலர்களைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தனர். எந்த அசம்பாவிதம் நடந்தாலும் வெளியே தெரியக் கூடாது என்று கூடங்குளம் ஊருக்குள் மின்சாரத்தை காலை 11 மணி முதல் 3 மணி வரை நிறுத்திவைத்திருந்தனர். அணு உலை வளாக வாசலில் ஊருக்கு அனுப்பப்படும் தொழிலாளர்களில் முதல் தவணையாக அனுப்பப்படும் 1,200 பீகார் மாநிலத்து தொழிலாளர்களை உடல் சோதித்து அனுப்ப இந்தி பேசத் தெரிந்த ஒரு மருத்துவர் குழாமை நிறுத்திவைத்து சோதித்து வெளியே கொண்டு வந்தனர். முதலில் 29 பேருந்துகள் மாலை 6 மணியிலிருந்து திருநெல்வேலி நோக்கி கிளம்பின. அதிலும், சில பிரச்சினைகள் உண்டாகி கடைசி இரண்டு பேருந்துகள் சற்று தாமதமாகக் கிளம்பின. மொத்தம் 31 பேருந்துகளிலும் தொழிலாளர்கள் கிளம்பினர். எல்லா பேருந்துகளும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு இரவு போய்ச் சேர வேண்டும். இரவு 10 மணிக்கு பீகார் நோக்கி ரயில் புறப்படுவது என்பதே திட்டம். அதன்படியே எல்லாம் முறையாக நடந்தன. ஆனால், அதற்குள், திருநெல்வேலி சந்திப்புக்கு, ஒரு அரை பாடி லாரி உட்பட இரண்டு வண்டிகளில் 80 தொழிலாளர்கள் மாலை 6 .30 மணிக்கே வந்து விட்டனர். அவர்களைக் கண்டு அலறிய மாவட்ட ஆட்சித் தலைவர் ரயில் நிலைய சந்திப்புக்கு வந்து அந்த முன்கூட்டியே வந்துவிட்ட தொழிலாளர்களையெல்லாம் ‘சந்திப்பு உணவகம் ஆர்யாஸ்’ இடத்தில் அமரவைத்து உணவு கொடுத்து, ‘உங்களுக்கு இரவு 10 மணிக்குத்தான் ரயில்’ என்று கூறி ஆற்றுப்படுத்தினார். இப்படி முன்கூட்டியே வெளியே வந்தவர்கள், அரசு கூறுவதை நம்பாமல் எடுத்த முயற்சியே அது. ஆனாலும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தயாரான அந்த வட இந்தியத் தொழிலாளர்கள் 3,414 பேரும் இணையம் மூலம் தங்களது விண்ணப்பத்தைத் தாங்களாகவே அனுப்பி, அனுமதி பெற்று வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல் & டி கொண்டுவந்திருந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில் மூன்று பிரிவினர் உண்டு. முதலாவது கட்டட வேலை செய்பவர்கள். இரண்டாவது வெல்டிங், கம்பி வளைப்பது, கம்பி கட்டுவது ஆகிய இயந்திர வேலை செய்பவர்கள். மூன்றாவது மின்சார வேலை செய்பவர்கள். இதில் முதல் பிரிவு வேலை செய்பவர்கள்தான், முழுமையாக இப்போது வெளியேறுகின்றனர். அதாவது, கட்டட வேலை என்ற கட்டுமானப் பணியாளர்கள் முழுமையாக வெளியேறுகின்றனர்.
இத்தகைய கட்டுமானப் பணியாளர்கள் எண்ணிக்கையில் பல 1,000 பேர் பணியாற்றிய காரணமே, விரைந்து விரவப்படும் சிமென்ட்டைப் பயன்படுத்தத்தான். அதாவது, சிமென்ட் கலவையை எம்-20, எம்-50 என்று இரு வகையாகக் கூறுவார்கள். எம்-20 சாதாரணமாக நாம் செய்யும் கட்டட வேலைகளுக்குப் பயன்படும். ஆனால், முக்கியமான மின் உற்பத்தி கட்டடங்கள், அணு உலைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அதிக அடர்த்தி உள்ள சிமென்ட்டான எம்-50 வகையைப் பயன்படுத்துவார்கள். அது, குளிர்ச்சியான கலவையிலிருந்து எடுத்து வரப்பட்டிருக்கும். அதை கொட்டிய உடனேயே விரவிவிட வேண்டும். இல்லையென்றால் கெட்டியாகி விடும். அதற்குப் பிறகு அது பயன்படாது.அதற்கு அதிகமான அளவு ஆட்கள் தேவை. விரைந்து வேலையை முடிக்க வேண்டும் என்பது அதில் உள்ள நிபந்தனை. அதனால்தான், ஆயிரக்கணக்கான பணியாளர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். நேற்று பீகார் தொழிலாளர்கள் 1,200 பேர் வரை சென்ற பிறகு, இன்று (மே 13) ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்களை அனுப்புவதாக உறுதி சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் 1,200 பேர் இருக்கிறார்கள். ஆகவே, கட்டுமானப் பணிக்கு இனி ஆட்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். இப்போதும் முதலில் கிளம்பாத இயந்திர பணி செய்வோர், மின் இணைப்புப் பணி செய்வோர் என்பவர்களும் இருக்கிறார்கள். முதல் பணியான கட்டடப் பணி செய்யும் தொழிலாளர்கள் இல்லாமல், மற்ற பணியாளர்கள் இருந்தும் பயனில்லை. ஆகவே, ஒட்டுமொத்தமாக அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்திவைப்பதே சிறந்தது. எப்படியோ போராடி தங்களது உரிமையான, சொந்த ஊருக்குச் செல்வது என்பதை தொழிலாளர்கள் சாதித்து விட்டார்கள்.
இந்த நேரத்தில், கூடங்குளம் ஊருக்குள் மும்பையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவும், அணு உலை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பயத்தைக் கிளப்பிவிட்டுள்ளது. இனி எப்படி, அண்டை மாவட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு அழைப்பார்கள்? ஆகவே, புத்திசாலித்தனமாக அணு உலைகளை நிறுத்துவதே நாட்டுக்கும் வட்டார மக்களுக்கும், நல்லது என்பதை 33 ஆண்டுகளாகப் போராடும் ‘அணு உலை எதிர்ப்பாளர்கள்’ கூறி வருகிறார்கள். மக்களது எதிர்ப்பு மட்டுமின்றி, இயற்கையின் நிர்பந்தமும் சேர்ந்து நல்லதொரு முடிவை, அணு உலைகள் வேண்டாம் என்ற முடிவை எடுப்பதே சாலச் சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக