வெள்ளி, 8 மே, 2020

BBC : விசாகப்பட்டினம் வாயுக் கசிவு: ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு .. ..

விஜய் கஜம் - பிபிசி தெலுங்குக்காக< ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை இயக்குநர், எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, "இது ஒரு ரசாயன பேரழிவாகும். இதை எதிர்கொள்வதற்கு ரசாயனம், ரசாயன மேலாண்மை, மருத்துவம், மீட்புப்பணி உள்ளிட்ட பல்துறைகளை சேர்ந்தவர்களின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு துறைகளின் செயல்பாடு குறித்து இன்று காலை டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டறிந்த பிரதமர், தக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த வாயுக் கசிவினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள், இந்த சவாலான சூழ்நிலையில், விபத்து நடந்தேறிய பகுதியை சேர்ந்த மக்களும், மருத்துவ பணியாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்தனர்.
"இதுபோன்ற வாயுக் கசிவை சந்தித்திராத மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. விபத்து நடந்தேறிய பகுதியில், சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேச அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று மத்திய அரசின் பல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்தார் என்று ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், விசாகப்பட்டினம் வாயுக் கசிவு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம், குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த இடத்தில், இதுபோன்ற ஆலையை அமைப்பதற்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டது என்று கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.விபத்து நடந்த எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலையின் நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திரப்பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் வாயுக் கசிவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

; செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை கிடைத்ததும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வாயுக் கசிவினால் உயிரிழந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயன வாயுக் கசிவால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ரசாயன வாயுவை சுவாசித்த ஒரு சிறுமி உள்பட 11 பேர் பலியாகியுள்ளது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ரசாயன வாயுவை சுவாசித்த மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

;"ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அந்த ஆலை இன்று திறக்கப்பட்டது. காலை 3.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. நிறுவனம் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காததே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. வேறு ஒரு ரசாயனத்தை பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்க முயன்ற வருகிறோம். இதுவரை 90-95% கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது," என்று இன்று காலை 10 மணியளவில் ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினி தெரிவிக்கிறார்.
"1 - 1.5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிக பாதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனாலும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாயுவின் துர்நாற்றம் வீசியுள்ளது. எல்.ஜி. பாலிமர்ஸ் ஆலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையர் ஆர்.கே. மீனா பிபிசி தெலுங்கு சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று விசாகபட்டினம் செல்கிறார்.
ரசாயன வாயுவை சுவாசித்தவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரசாயன வாயு கசிவு உண்டான எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான, தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்.ஜி கெமிக்கல்ஸ் நிறுவனம், குடியிருப்புவாசிகள் மற்றும் தங்கள் ஆலை ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.
ரசாயன வாயுக் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோசமாக பாதிக்கப்பட்ட 15 முதியவர்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் சுமார் ஐம்பது அவசர ஊர்திகள் ஈடுபட்டுள்ளன. பலரும் மயக்க நிலையில் உள்ளனர்.

ஸ்டைரீன் எனும் ரசாயன வாயு

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டைரீன் (styrene) எனும் ரசாயன வாயு வெளியேறியதாக, விசாகப்பட்டினத்தில் பணியாற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ராஜேந்திர ரெட்டி என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

>மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, வருவாய்த் துறை உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
ஆர்.ஆர் வெங்கடபுரம் எனும் பகுதியில் அமைந்துள்ள எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா எனும் தெர்மாகோல் உற்பத்தி ஆலையில் இந்த ரசாயன வாயுக் கசிவு நிகழ்ந்துள்ளது.
அதை சுற்றியுள்ள நாயுடு கார்டன், பத்மநாபபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துகொண்டு வாகனங்களில் வெளியேறி வருகின்றனர்.

தென்கொரிய நிறுவனம்

1961ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் எனும் பெயரில் இந்த ஆலை நிறுவப்பட்டது. 1978இல் யூபி தொழில் குழுமத்தால் இந்த நிறுவனம் வாங்கப்பட்டது.

>அந்த தொழில் குழுமத்திடமிருந்து 1997இல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ஆலையை வாங்கி அதற்கு எல்.ஜி பாலிமர்ஸ் என்று பெயரை மாற்றியது.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்ததால் இந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அதிகாலை 3 மணிக்கு இந்த வாயு கசிவு நடந்தது என்பதால் உறக்கத்திலிருந்த பல மக்களுக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே உடனடியாக தெரியாமல் போனது.
வாயுவை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக