ஞாயிறு, 17 மே, 2020

பிரியங்கா அதிரடி- இடம்பெயர் தொழிலாளர்களுக்கான 500 பேருந்துகள்.. உ.பி. அரசு அனுமதிக்காக காத்திருப்பு

500 பேருந்துகள் காத்திருப்பு தொழிலாளர்களுடன் ராகுல் சந்திப்பு tamil.oneindia.com :லக்னோ: இடம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 500 பேருந்துகளை ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த பேருந்துகளை உத்தரப்பிரதேச பாஜக அரசு இன்னமும் மாநிலத்துக்குள் அனுப்பவில்லை. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் அனுபவித்து வரும் துயரங்கள் கொடூரமானவை.
இதனால் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே பயணிக்கவும் துணிந்துவிட்டனர். பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு குழந்தைகளுடன் பயணிக்கும் இந்த இடம்பெயர் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி மாண்டு போவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று இடம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.


பின்னர் சொந்த ஊர் செல்ல விரும்பும் தொழிலாளர்களை கார்களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் காங்கிரஸின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் இடம்பெயர் தொழிலாளர்களுக்காக தாம் 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்வதாகவும் இதற்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.



500 பேருந்துகள் காத்திருப்பு

இதனிடையே ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று 500க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இடம்பெயர் தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பேருந்துகள் உத்தரப்பிரதேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் நுழைவதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னமும் அனுமதி தரவில்லை
உத்தரப்பிரதேசத்தின் மேற்கு பகுதி பொதுச்செயலாளராகவும் பிரியங்கா பொறுப்பு வகித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் துடைத்து எறியப்பட்ட காங்கிரஸை மீட்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் பிரியங்கா மேற்கொண்டு வருகிறார். இடம்பெயர் தொழிலாளர் பிரச்சனையையும் இதேபோல் அரசியல் நடவடிக்கைகளுக்காக பிரியங்கா பயன்படுத்துகிறார் என்பது பாஜகவினரின் குற்றச்சாட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக