புதன், 20 மே, 2020

இலங்கையில் பெருமழை.. நீரில் மூழ்கிய நகரங்கள் – 5 பேர் உயிரிழப்பு


இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.
பலாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நகர் பகுதிகளில் 5 அடி வரை வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், நகரை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 அடியை விடவும் அதிக உயரத்திற்கு நீர் உட்புகுந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

ரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
ரத்தினபுரி மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவி வருவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, ரத்தினபுரி நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளமையினால், தாழ் நிலப் பகுதிகளிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, நாவலபிட்டி பகுதியின் பல இடங்களில் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கடும் மழையுடனான வானிலை நிலவும் பகுதிகளில் அங்காங்கே சிறு அளவிலான வெள்ள பெருக்குகள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருநாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. ரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத்த, கலவானை மற்றும் கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.
ரத்தினபுரி மாவட்டத்தில் இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. இதன்படி, ரத்தினபுரி பகுதியில் குழந்தையொன்றும், பெல்மதுல்லை பகுதியில் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை பகுதியில் நேற்றைய தினம் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. அதேபோன்று, அநுராதபுரம் பகுதியில் கடும் காற்றுடனான வானிலையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக 196 குடும்பங்களைச் சேர்ந்த 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக