வியாழன், 2 ஏப்ரல், 2020

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம்!

திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கம் தற்காலிக நீக்கம்!மின்னம்பலம் : திமுகவிலிருந்து கே.பி.ராமலிங்கத்தை தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுக்க, அது அவசியமற்றது என எதிர் அறிக்கை வெளியிட்டார் திமுகவின் விவசாயப் பிரிவு செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம்.

அத்தோடு, கொரோனா நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டும் தெரிவித்திருந்தார். ஸ்டாலினை எதிர்த்து இவர் வெளியிட்ட அறிக்கை திமுக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திமுக விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்து கே.பி.ராமலிங்கத்தை நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் ஸ்டாலின்.
இதுதொடர்பாக மின்னம்பலத்தில் வெளியிட்ட செய்தியில், “திமுக துணை அமைப்பான விவசாய அணிக்கு செயலாளராக இருக்கும் கே.பி. ராமலிங்கத்துக்கு இதுபோன்று அறிக்கை வெளியிட்டால் தான் நடவடிக்கைக்கு உள்ளாவோம் என்று நன்கு தெரியும். அப்படி தெரிந்துதான்... கொரோனா நடவடிக்கைகளில் எடப்பாடியை மட்டுமல்ல பிரதமர் மோடியையும் பாராட்டிவிட்டு, ’காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி தலைவா்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்றது. அவசியமான கருத்துகள் இருந்தால் அரசியல் கட்சித் தலைவா்கள் இ-மெயிலில் முதல்வருக்கு அனுப்பவேண்டும். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும்தான். அரசியல் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது” என்று அறிக்கை வெளியிட்டார்.
இவர் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர். இவ்வளவு நடந்தும் கேபி.ராமலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்காமல் ஏன் பதவியில் இருந்து மட்டும் நீக்கினார் ஸ்டாலின் என்று கொங்கு திமுகவினர் கேட்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 2) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக விவசாய அணி மாநிலச் செயலாளர் கே.பி.ராமலிங்கம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக