வியாழன், 2 ஏப்ரல், 2020

சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்!


சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன்!

மின்னம்பலம் : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு இன்று (ஏப்ரல் 2) 47 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை இதுவரை இல்லாத அளவுக்கு சமூக தளங்களில் மதிமுகவினர் வாழ்த்துப் பதிவுகள் மூலம் கொண்டாடி வருகிறார்கள். மதிமுகவின் இரண்டாம் தலைமுறையே... கழகக் கண்மணிகளின் எதிர்பார்ப்பே என்றெல்லாம் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் துரை வையாபுரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக மதிமுகவினரின் இல்லத் திருமணங்களாகட்டும், துக்க நிகழ்வுகளாகட்டும் அவற்றில் வைகோவின் சார்பாக பங்கெடுத்து வரும் துரை வையாபுரியோடு பல மாவட்டச் செயலாளர்களும் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். மதிமுகவின் கட்சி நிகழ்வுகளுக்கோ, தலைமை அலுவலகமான தாயகத்துக்கோ வராத துரை, தாயகத்தின் நிர்வாகப் பணிகளை தன் இல்லத்தில் இருந்தே கண்காணிப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி கட்சியின் பெரும்பாலான மாசெக்கள் துரை வையாபுரியைத் தொடர்புகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களில் சிலர், ‘நீங்க வெளிப்படையா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கணும். வரும் சட்டமன்றத் தேர்தல்ல நீங்க போட்டியிடணும்’ என்று உரிமையாக அவரிடம் வேண்டுகோள் வைக்க சிரித்து வைத்திருக்கிறார் துரை.
2019 செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் மதிமுக கொடிகளையும்,பதாகைகளையும் நிறுவியிருந்தனர். இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது, அவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் வைகோவின் மகன் துரை வையாபுரி.
முதலில் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், இளைஞரணி துணை அமைப்பாளர் கராத்தே பாபு ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்ற துரை வையாபுரி, அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாநில மாணவரணி துணை செயலாளர் அம்பத்தூர் முகவை சங்கர் இல்லத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சிச் செயலாளர் சீனுவின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்தார். அவர்களின் குடும்பத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார். துரை வைகோவோடு புகைப்படம் எடுத்து மதிமுகவினர் உற்சாகமாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று துரையின் பிறந்தநாளை மதிமுக அறிவிக்கப்படாத விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது
வைகோவுக்கு நெருக்கமான ஒரு மாவட்டச் செயலாளரிடம் பேசினோம். “வைகோ ராஜ்யசபா உறுப்பினர் ஆகிவிட்டார். அது தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் துரை வையாபுரியின் வருகையை மதிமுகவில் பலரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள். இன்று சமூக தளங்களில் துரைக்கு வாழ்த்து சொல்லி மாசெக்கள் பதிவிட்டதை எல்லாம் வைகோ கூர்ந்து கவனித்து வருகிறார். கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுக்காமல் போயிருந்தால் இன்று துரைக்கு பிறந்தநாள் விழா எடுக்கவும் சிலர் திட்டமிட்டிருந்தார்கள். தன் மகனின் அரசியல் வருகை பற்றி வைகோ இதுவரை கட்சி அளவில் வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால் திருமண நிகழ்வுகளுக்கு தனக்கு பதிலாக அனுப்பி வைப்பதே ஒரு மெசேஜ்தானே. ராஜராஜ சோழனுக்குக் கட்டுப்படுவது போல, ராஜேந்திர சோழனுக்கும் மதிமுக என்ற இந்த சோழ தேசம் கட்டுப்படும்” என்கிறார் வைகோ பாணியிலேயே.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக