ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!மின்னம்பலம் : நூறு பெண்களை மிரட்டி பணம் பறித்த இன்ஜினீயரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு பெண்களை ஏமாற்றி சில இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் அதுபோலவே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் ஆன்லைன் மூலமாகக் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்குக் கடந்த 24ஆம் தேதி இரவு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் காசி என்பவர் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியிருப்பதாகவும், லட்சக்கணக்கில் பணமும் பறித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, நடந்த விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

> நாகர்கோவில் கணேசபுரத்தில் வசிக்கும் காசி (எ) சுஜி இன்ஜினீயரிங் படித்துவிட்டு, தந்தையின் கோழிக்கறிக் கடை வியாபாரத்தைக் கவனித்து வந்துள்ளார். சமூக வலைதளங்கள் மூலமாக நல்ல வசதியான பெண்களிடம் நட்பாகி அவர்களிடமிருந்து பணத்தை ஏமாற்றுவதுதான் இவரின் வேலை.
சமூக வலைதளங்களில் பெண்களிடம் நட்பாகப் பேசும் காசி, தன்னை பயிற்சி விமானி, வழக்கறிஞர், தொழிலதிபர் என அறிமுகப்படுத்திக்கொள்கிறார். தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்களையும் அந்தப் பெண்களுக்கு அனுப்புவார். இதன்மூலம் நெருக்கத்தை வளர்த்துக்கொண்டு பெண்களை நேரில் பேச அழைப்பார். அவ்வாறு பேசும்போது அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுப்பார். சந்திக்க முடியாத பெண்களுடன் வீடியோ கால் பேசி அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்துவைத்துக் கொள்வார்.
ஆபாசப் படங்கள் எடுத்த பின்பு அந்தப் பெண்ணிடம் பணம் கேட்பார். கொடுக்க மறுக்கும் பெண்களிடம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டுவார். சில பெண்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்ணையும் காசி சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
சென்னை மருத்துவ மாணவி அளித்த புகாரை அடுத்துதான் அதிர்ச்சியளிக்கும் வகையிலான இந்தத் தகவல்கள் வெளி உலகத்துக்குத் தெரியவந்துள்ளன. காசியைக் கைது செய்த போலீஸார், அவரது வீட்டிலிருந்து மொபைல்போன்கள், ஹார்டு டிஸ்க்குகள், சிடி உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
காசியிடம் 7 லட்சம் ரூபாய் வரை இழந்திருப்பதாகத் தனது புகாரில் தெரிவித்துள்ள மருத்துவ மாணவி, “1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக செல்போனையும், தங்க நகைகளையும் பரிசளித்திருக்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார்.
அச்சம் காரணமாக பெரும்பாலான பெண்கள் காசிக்கு எதிராக புகார் அளிக்க முன்வரவில்லை என்று கன்னியாகுமரி எஸ்.பி ஸ்ரீநாத் கூறுகிறார். “நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுவரை காசி பணம் பறித்துள்ளான். அவர்களில் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மருத்துவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“காசி தன்னை ஒரு பயிற்சி விமானி என்று அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். பெண்களை ஏமாற்றுவதற்காக தங்க நகைகள் அணிந்து கொண்டு, விலையுயர்ந்த பைக்குகளுடன் இருப்பது போல தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்” என்றும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.
காசியிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எழில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக