ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

320 கி.மீ சைக்கிளில் வந்த முதியவரை அனுமதிக்க மறுத்த மே.வங்க கிராமம்

மின்னம்பலம் : 320 கி.மீ சைக்கிளில் வந்த முதியவரை அனுமதிக்க மறுத்த கிராமம்!ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த 70 வயது முதியவர், பிகாரிலிருந்து 320 கி.மீக்கு அப்பால் மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு மூன்று நாட்கள் சைக்கிள் மிதித்து சென்றுள்ளார். கொரோனா அச்சத்தால் கிராம மக்கள் அவரை அனுமதிக்கவில்லை.
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வராததையடுத்து, ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பிழைப்பு தேடி தினக்கூலிகளாக சென்றவர்கள் வருமானம் நின்று போனதால் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பலர் தங்களது ஒரே நம்பிக்கையான சொந்த ஊரில் உள்ள வீட்டை தேடி சென்று கொண்டிருக்கின்றனர்.

பிகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த சூர்யகந்தா என்ற 70 வயது முதியவர் உணவுக்குக்கூட பணமில்லாததால், சைக்கிள் மூலம் வீடு திரும்ப முடிவு செய்து, மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு புறப்பட்டார். மூன்று நாட்கள் 320 கி.மீ தொலைவு சைக்கிள் மிதித்து தனது சொந்த கிராமத்துக்குச் சென்ற அவரை ஊர் மக்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
பின்னர், மோத்தாபரி பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று பிகாரிலிருந்து வந்திருப்பதைத் தெரியப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுள்ளார். வெப்பநிலை பரிசோதனை செய்ததில், காய்ச்சல் இல்லாததால் அவரை 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையில் இருக்க அறிவுறுத்தினர். இதனால் அரசு தனிமை மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
-ராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக