சனி, 18 ஏப்ரல், 2020

பெங்களுரில் இருந்து வெளிவரும் தின சுடர் பத்திரிகை நிறுவனர் ஐயா பா.சு.மணி

Susairaj Babu : தமிழகத்திற்கு அப்பால்....
கன்னட பத்திரிகை உலகின்
ஜாம்பவானாகிய பா.சு.மணி அவர்கள்.
பெங்களூரு நகரில் இருந்து வெளியாகும் ஒரே தமிழ் மாலை நாளிதழான தினச்சுடர் ( தற்பொழுது கிருஷ்ணகிரி பதிப்பும் வெளி வந்து கொண்டிருக்கிறது)பத்திரிகையின் நிருவனர் ஐயா பா.சு.மணி
தமிழர்கள் பெருவாரியாக பெங்களூரு,கோலார் தங்க வயல்,மைசூர்,பத்ராவதி,சாமராஜ்நகர் போன்ற மாவட்டங்களில் பரவி இருந்த்தினால் தமிழுக்கென்று மாலைப் பத்திரிகை வேண்டும் என்ற எண்ணத்தில், 1964ம் ஆண்டு தினச்சுடர் பத்திரிகையை பெங்களூருவில் தொடங்கியவர் பா.சு.மணி. மணி அவர்களின் சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம் பள்ளிவாசல் பட்டியில் பிறந்தவர். தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி. பா. ஆதித்தனாரின் உறவினர்.
கருநாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பிரிந்திருந்த தமிழர்களை தினச்சுடர் மூலம் ஒன்றினைத்த சாதனையாளர் ஐயா மணி அவர்கள்.
தினத்தந்தி, மாலை முரசு ஆகிய நாளிதழ்களில் செய்தி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு மாலை நாளிதழை தொடங்கும் யோசனையை கொடுத்தது. மேலும், முன்னாள் முதல்வர் காமராஜரும், மணி அவர்களின் இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்ததாக கூறப்படுவதுண்டு.

தினச்சுடர் நாளிதழுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து 1982ல் சஞ்சேவாணி என்ற பெயரில், கன்னட மாலை பத்திரிகை தொடங்கினார். அதுதான், கன்னடத்தில் வெளியான முதல் மாலை பத்திரிகை என்பது சிறப்பு. தற்போது மேலும் சில கன்னட மாலை பத்திரிகைகளை சிலர் தொடங்கியிருந்தாலும், இன்றுவரை, சஞ்சேவாணி பத்திரிகைதான், மாலை பத்திரிகை விற்பனையில், கர்நாடகாவிலேயே முதல் இடத்திலுள்ளது. தமிழ் மற்றும் கன்னட பத்திரிகை பலத்தை கொண்டு, கர்நாடகவாழ் தமிழர்களுக்கும் கன்னட மக்களுக்கும் நட்பு பாலமாக இருந்தார்.தமிழ் இலக்கத்தியத்தில் முதுகலை பட்டம், பிஎச்டி படித்திருந்த மணி, பல்வேறு சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார். ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் நீண்டநாள் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை, அவருடைய நண்பர்களான கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழகத்தின் முதல்வர் கலைஞர் துணையோடு திறக்க காரணமாக இருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் அவர்கள் கடத்திய பொழுது கர்நாடக மாநில தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருந்த பொழுது, ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து மீட்க கர்நாடகத்தின் பிரதிநிதி போல் கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் பாலமாக இருந்து திரு ராஜ்குமார் அவர்கள் விடுதலைக்கு ஒரு காரணமாக இருந்தார்.
அவர் பிறந்த அன்றைய நெல்லைச் சீமையை மறக்காமல், தான் பிறந்த ஊரில்( நாகலாபுரம்) ஒரு ஐ.டி.ஐ. பயிற்சிப் பள்ளியைத் தொடங்கிட உதவிட வேண்டுமென்று கோரிக்கை கலைஞரிடம் வைத்து, சொந்த ஊர் மாணவர்கள் தொழில் கல்வி கற்க காரணமாக இருந்தார்.
1999ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் கலைவாணர் அரங்கில் அய்யா பாசுமணி எழுதிய செய்தி பிறந்த கதை என்ற புத்தகத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் வெளியிட்டார். இப்புத்தகமானது பத்திரிக்கை துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி போல் அமைந்திருக்கிறது.
கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியில் ஐயா பா.சு.மணி அவர்களைப் பற்றி குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
"நாகலாபுரத்தில் முதியோர் இல்லம் நிறுவியவர் ஐயா பா.சு. மணி. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் மறைந்தார்.
@ப.சூசைராஜ்பாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக