வியாழன், 9 ஏப்ரல், 2020

மனோ கணேசன் : நிவாரணம் பெறுவோர் பட்டியலில் தோட்ட தொழிலாளர்களுக்கு இடமில்லை.

Mano Ganesan - மனோ : நிவாரணம் பெறுவோர் பட்டியலில் இம்முறையும்
தோட்ட தொழிலாளர்களுக்கு இடமில்லை. இனி இதற்கு யார் பதில் கூறுவது?;
கடந்த 2ம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அத்தியாவசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச உரையாற்றியபோது, நிவாரணங்கள் பெறுவோர் பட்டியலை விளக்கமாக வாசித்தார்.
அதன் பிறகு (சிங்கள மொழியில்) பேசிய நான், என் உரையின் ஒரு கட்டத்தில், “இங்கு எனக்கு முன் உரையாற்றிய திரு. பசில் ராஜபக்ச அவர்கள் தனது நிவாரணங்கள் பெறுவோர் பட்டியலில், விவசாயிகளை பற்றி, மீனவர்களை பற்றி சொன்னார். ஆனால், தோட்ட தொழிலாளர்களை பற்றி குறிப்பிட மறந்து விட்டார்” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தி, “ஒருவேளை அவர் சொன்னதை நான் சரியாக கவனிக்க மறந்து விட்டேன் என்றால், திரு. பசில் ராஜபக்ச, என் பிழையை திருத்தலாம்” என மிகவும் நாகரீகமாக சொன்னேன்.

அப்போது குறுக்கிட்ட, பசில் ராஜபக்ச, ”இல்லை, திரு. மனோ கணேசன் அவர்களே! நான் எனது உரையில், தேயிலை, இறப்பர், தென்னை பற்றி குறிப்பிட்டேன்.” என்றார்.
அவர் இதை கூறி முடிக்க முன் இடதுசாரி நெருப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் குறுக்கிட்டு, “மனோ கணேசன் அவர்களே! திரு பசில் அவர்கள் தனது உரையில் தேயிலை, இறப்பர் பற்றி பேசினாரே” என்றார்.
இப்போது நான், “திரு, பசில் அவர்களே! உங்கள் உரையில், தேயிலை, இறப்பர், தென்னை தொழில்துறைகளை பற்றி சொன்னீர்கள். அது நல்லதே. அது எனக்கு தெரியும். ஆனால், நான் இங்கே அந்த தொழில்துறைகளில் வேலை செய்யும் தொழிலாள மக்களை பற்றிதான் கேள்வி கேட்கிறேன்.” என்று சொன்னேன்.
இதற்கு செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச பதில் கூறவில்லை. இடதுசாரி நெருப்பு நண்பர் வாசுதேவ நானயக்காரவும் பதில் கூறவில்லை.
ஒரு எதிரணி தலைவர் என்ற முறையில் நான் செய்யக்கூடியது இதுவாகும். இதை நான் தீவிரமாக செய்கிறேன். இனியும் செய்வேன்.
நான் எழுப்பிய கேள்வியிலிருந்து, அடுத்த கட்டத்துக்கு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினர்தான் செல்ல வேண்டும். இதற்கான பதிலை, அரசாங்கத்திலிருந்து அவர்கள்தான் பெற வேண்டும்.
இன்று நடந்திருப்பது என்ன?
அன்று செயலணி தலைவர் பசில் ராஜபக்ச வாசித்த அதே பட்டியலைத்தான் நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்சவும், தனது உரையிலும் கூறியுள்ளார்.
அன்று கட்சி தலைவர் கூட்டத்தில் பசில் ஆற்றிய உரையிலும் தோட்ட தொழிலாளருக்கு இடமில்லை. நேற்று பிரதமர் மகிந்த ஆற்றிய உரையிலும் தோட்ட தொழிலாளர்களுக்கு இடமில்லை. இனி இதற்கு யார் பதில் கூறுவது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக