சனி, 11 ஏப்ரல், 2020

நாடளாவிய ஊரடங்கு நீட்டிப்பு.. விரைவில் அறிவிக்கப்படும்

  nakkeeran : உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசின் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் நிலையில், அதன்பின் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் காப்பாற்ற, ஊரடங்கு மற்றும் சமூக விலகல் மிகவும் முக்கியம் என்று நான் மக்களிடம் உரையாற்றும்போது சொன்னேன். பெரும்பாலான மக்கள் இதைப் புரிந்துகொண்டு வீட்டிலேயே தங்கினர். இனிவரும் காலங்களில் மக்கள் தங்களது பணிகளைக் கவனித்தலோடு, அரசு வழிகாட்டுதலின்படி, நடப்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். இந்தியாவின் வளமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு இது முக்கியமானதாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்

இந்த கூட்டத்தில் அடுத்த 15 நாட்கள் இந்தியாவில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படப்போகின்றன என்பது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் சரியான முடிவை எடுத்துள்ளார். இன்று, பல வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் நிலை சிறந்ததாகவே உள்ளது. ஏனெனில் நாம் ஆரம்பத்திலேயே ஊரடங்கை அமல்படுத்திவிட்டோம். ஆனால் இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டால், இதனால் ஏற்பட்ட எல்லா நன்மைகளும் வீணாகிவிடும். எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக