புதன், 29 ஏப்ரல், 2020

தமிழக தெலுங்கர்களின் அரசியல் தலைவராக ராம மோகன ராவ் .. கும்மிடு பூண்டிக்கு குறியாம்

 கும்மிடிப்பூண்டியை குறிவைக்கும் ராம மோகன ராவ்மின்னம்பலம் : முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுதும் பயணித்து தெலுங்கு பேசும் மக்களை ஒன்றிணைத்து வந்தார். இதன் அடிப்படையில் மதுரையில் திருமலைநாயக்கர் பிறந்தநாளை ஒட்டி பிரம்மாண்டமான பேரணி நடத்தினார். பின் ஆர்.எம்.ஆர். பாசறை என்று ஆரம்பித்து தமிழகம் முழுக்க இருக்கும் தெலுங்கு பேசும் அமைப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். ரஜினியுடன் கூட ராம மோகன் ராவ் தொடர்பில் இருக்கிறார் என்று தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி தன் வீட்டிலேயே இருக்கும் ராம மோகன ராவ் ஆர்.எம்.ஆர். பாசறை மூலமாக தமிழகம் எங்கு மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது பாசறையினர் பல பகுதிகளில் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் என கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஆர்.எம்.ஆர். பாசறை சார்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த கொரோனா வைரசால் வேலைவாய்ப்பை இழந்து பாதிப்புக்கு ஆளாகியுள்ள பத்தாயிரம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கியிருக்கிறார்கள். அதுவும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஆர்.எம்.ஆர். பாசறையினரின் பணி மற்ற பகுதிகளை விட சற்று தீவிரமாகவே உள்ளது.

இதுபற்றி ஆர்.எம். ஆர். பாசறை நிர்வாகிகளிடம் பேசியபோது, “வரும் சட்டமன்றத் தேர்தலில் ராம மோகன ராவ் போட்டியிட வேண்டும் என்று பல நிர்வாகிகளும் அவரிடம் வற்புறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னைக்கு அருகே இருக்கும் கும்மிடிப்பூண்டி தொகுதி ராம மோகன ராவுக்கு பாதுகாப்பான தொகுதி என்று நிர்வாகிகளே கருதி அங்கே சில மாதங்களாகவே பணிகளை ஆழமாக மேற்கொண்டு வந்தனர். இடையில் கொரோனா ஊரடங்கு வந்த நிலையில், அங்கே ஏற்கனவே செய்து வந்த நலத்திட்ட உதவிகளை இப்போது கொரோனா நிவாரணப் பணிகளாக மாற்றியுள்ளனர். நாயுடு சமூகத்துக்கு பாத்தியமான பெரியபாளையம் பவானியம்மன் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்திய நிலையில், அதை தனது செல்வாக்கின் மூலம் திரும்பப் பெற வைத்து மீண்டும் அந்த சமுதாயத்தினரிடமே ஒப்படைத்தவர் ராம மோகன ராவ். இதன் மூலம் இப்பகுதியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் ராம மோகன ராவ் நிற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன” என்கிறார்கள்
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக