ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடன் பணிக்கு செல்ல அனுமதி!

வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுப்பாடுகளுடன் பணிக்கு செல்ல அனுமதி! மின்னம்பலம் : நாளை (ஏப்ரல் 20) ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வெளிமாநில தொழிலாளர்கள், புலம் பெயர்வைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் சில கட்டுப்பாடுகளையும், வழிகாட்டுதல்கள் குறித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊரை விட்டுப் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் வேலை, உணவின்றி பட்டினியால் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டு இன்னல்களுக்கு மத்தியில் சொந்த ஊருக்கு வந்தடைந்தவர்களும் உண்டு

கடந்த வாரம் இந்தியாவின் பொருளாதார நகரமான மும்பையில் வெளிமாநில தொழிலாளர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிச் செல்ல அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தடியடியில் முடிந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், மாநில/யூனியன் பிரதேசங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் வெளி மாநில தொழிலாளர்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் உள்ள அதிகாரிகளிடம் பதிவு செய்து கொள்ளலாம். அப்படிப் பதிவு செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு உகந்த வேலைகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அந்த தொழிலாளர்கள் பணி செய்த இடம் அவர் தங்கியிருக்கும் மாநிலத்துக்குள்ளேயே இருந்தால், அவரை உடல் பரிசோதனை செய்து, கொரோனா அறிகுறி இல்லாத நிலையில், திரும்பி பணிக்கு அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.
எனினும் ஒரு மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்துக்குச் செல்ல அனுமதியில்லை, தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்துச் செல்லும்போது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், பேருந்துகள் தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பயணத்தின் போது உணவு, தண்ணீர் உள்ளிட்ட தேவைகளை உள்ளூர் அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக