ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடல் , ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி, மற்ற நாடுகளில் என்ன நிலை?


BBC :கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமலில் உள்ள இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி மூடல் நடவடிக்கை வரும் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இருநாடுகளுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து வழக்கம்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இரு நாடுகளின் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இந்த முடிவு மிகவும் முக்கியமானது” என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடக்க நிலையின் காரணமாக கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்கும் முடிவை அந்த நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 நோய்த்தொற்றால் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ள ஸ்பெயினில் கடந்த மாதம் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து, ஒரு மாதகாலத்துக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே அடைபட்டிருக்கும் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை அந்த நாடு முழுவதும் எழுந்தது.
இதையடுத்து, வரும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 12 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு வெளியே செல்ல கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிப்பது தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டு வருவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சேஸ் அறிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் என்ன நிலை?
இத்தாலியின் லொம்பார்டி பிராந்தியத்தில் இரண்டாம் உலகப்போரின்போது மிலன் நகரத்தில் வீசப்பட்ட குண்டுகளை விட அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நேற்று மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் மேலும் 482 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த உயிரிழப்புகள் 23,227ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் லொம்பார்டி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள்.
மற்ற ஐரோப்பிய நாடுகளை போன்று பிரிட்டனையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் “ஒரு சில வாரங்களில் தீர்த்துவிட கூடிய ஒன்றல்ல” என்று அந்த நாட்டின் தேசிய சுகாதார அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் இதுவரை 15,464 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக