சனி, 18 ஏப்ரல், 2020

நூலிழையில் தொங்கும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு!

சிறப்புச் செய்தி: நூலிழையில் தொங்கும் இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பு!மின்னம்பலம் - ;ரகுநாத் :
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பு நம்மிடம் இல்லாத நிலையில், போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளை உடனடியாக உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தயாரிப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மறுபுறம், ஊரடங்கால் வேலை மற்றும் வருமானத்தை இழந்தவர்களுக்கு மிகவும் சொற்பமான அளவிலேயே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது எனும் விமர்சனமும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன.

இதில் மிக முக்கியமான விவாதப்பொருளாக இருப்பது பசிப்பிணியும், உணவும்தான். மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு உடனடியாக அமைக்கப்பட்ட Stranded Workers Action Network எனும் தன்னார்வக் குழு, தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாத புலம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியது. அந்த குழு இந்த வாரம் வெளியிட்ட அறிக்கை, ஆய்வு செய்யப்பட்ட 11,000 த்திற்கும் மேலான உழைக்கும் மக்களின் அவலநிலையை விளக்கிக் கூறுகிறது:
50 விழுக்காடு தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு தேவையான உணவுதானியக் கையிருப்பு கூட இல்லை
78 விழுக்காடு தொழிலாளர்களிடம் ரூ. 300 க்கும் குறைவான பணம் மட்டுமே இருந்தது
98 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து எவ்வகைப் பண உதவியும் கிடைக்கவில்லை
96 விழுக்காடு தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து உணவு தானியம் கிடைக்கவில்லை
70 விழுக்காடு தொழிலாளர்களால் சமைக்கப்பட்ட உணவைப் பெறமுடியவில்லை
தங்கள் மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை மாநில அரசுகள் சேகரித்து வைக்குமாறு சொல்லும் சட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன என்கிறது அந்த அறிக்கை.
89 விழுக்காடு தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவே இல்லை என்பதைவிட துக்ககரமான செய்தி என்னவென்றால், அவர்கள் எந்த நிறுவனத்திற்காக வேலை செய்கின்றனர் என்றே அந்த தொழிலாளர்களுக்கு தெரியவில்லை. அவர்களை வேலைக்கு அமர்த்திய கான்ட்ராக்டர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டனர்!
‘தங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போக முடியாதவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதே, அவர்களுக்கு எதுக்கு பண உதவி?’ என்று சென்ற வாரம் நாட்டின் தலைமை நீதிபதி கேட்கும் ஒரு வருந்தத்தக்க நிகழ்வு நம் நாட்டில் நடந்தது. புலம்பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களில் நிர்கதியாய் நிற்கின்றனர். அதனால்தான் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்படவுடன், இதற்கு மேலும் பொறுத்திருக்க முடியாது என்று மும்பை, சூரத் போன்ற நகரங்களில் இரயில் நிலையங்களை நோக்கி அவர்கள் திரளாகச் சென்றனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பொது விநியோகத் திட்டத்திலிருந்து பயன்களைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வரையறுக்கப்பட்டனர். அதன் பட்டியல் புதுப்பிக்கப் படாததால், மானிய விலையில் உணவுதானியங்களைப் பெறத் தகுதியானவர்களாக இருந்தும், அந்த பலன்களைப் பெற முடியாமல் 10 கோடிக்கும் மேலான மக்கள் உள்ளனர் என்று ஜான் திரேஸ், ரீதிகா கேரா போன்ற பொருளியல் ஆய்வாளர்கள் ஒரு மதிப்பீட்டை முன்வைத்துள்ளனர்.
இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் 77 மில்லியன் டன் அளவுக்கு உணவுதானியம் உள்ளது. அதை உடனடியாக மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை நடுவண் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. ‘மானிய விலையில் அரசு விநியோகிக்கும் உணவு தானியங்களை ஏழை அல்லாதவர்களும் பெற்று விடுவார்களோ என்று கவலைப்படும் நேரம் இதுவல்ல. உலகளாவிய பெருந்தொற்றும், பொருளாதார முடக்கமும் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் இந்த நேரத்தில் உணவு யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’ என்று அமர்த்ய சென், அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம் ராஜன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளனர்.
உணவு கிடைக்காமல் போகும் பட்சத்தில் மக்கள் பொறுமையிழந்து லாக்டவுன் உத்தரவை மீறி உணவைத் தேடி அலையும் நிலையைத் தவிர்க்க, அரசு உடனடியாக ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அடித்தட்டு மக்களின் நலனைப் பற்றி அக்கறையுள்ள சமுதாயமாக நாம் இதுபோன்ற அசாதாரண சூழலில் செயல்படுவது அவசியம். மிகக்கடுமையான ஊரடங்கு போடப்பட்ட அதே வேளையில், மிகவும் சொற்பமான பொருளாதார நிவாரணம் அறிவிக்கப்பட்டது சரியான அணுகுமுறை அல்ல. கூடுதல் நிவாரணம் வழங்கத் தேவையான வளங்களைத் திரட்ட அரசு தயக்கத்தைக் காட்டக்கூடாது.
‘வரிசையில் நின்று தனக்கு ஒதுக்கப்பட்ட உணவு தானியத்தை வாங்கத் தயாராக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தற்காலிக ரேஷன் அட்டை வழங்க வேண்டும். இந்த நிவாரணத்தை நம்பி இருப்பவர்கள் விடுபட்டுப்போவதால் நாம் கொடுக்கப்போகும் விலை மிகப்பெரியதாக இருக்கும்’ என்று சென், பானர்ஜி மற்றும் ராஜன் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற நெருக்கடி நேரத்தில் ஆதார் அட்டையை காட்டினால்தான் உணவுதானியம் வழங்கப்படும்; கைரேகை அங்கீகரிக்கப்பட்டால்தான் அரசின் நிவாரணம் பெறமுடியும் போன்ற விதிகளைத் தற்காலிகமாக ஓரங்கட்டி வைக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் உணவுதானியம் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
Global Hunger Index எனும் குறியீட்டின் அடிப்படையில் 117 நாடுகளை உள்ளடக்கித் தயாரிக்கப்படும் உலக நாடுகளின் தரவரிசையில் இந்தியா சென்றாண்டு 102 வது இடத்தைப் பெற்றது. இந்தியாவில் பசிப்பிணியும், ஊட்டசத்து குறைபாடும் மிகவும் மோசமாக இருப்பதை இது ஊர்ஜிதப்படுத்துகிறது. இந்தியப் பொருளாதாரத்தின்மீது கொரோனா ஏற்படுத்தப்போகும் எதிர்மறைத் தாக்கங்களில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்றால் அதற்கு நடுவண், மாநில அரசுகள் முதலில் செய்ய வேண்டியது சாதாரண மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது. இதுபோன்ற நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அவலக்குரல்களைப் புறந்தள்ளுவது மன்னிக்கமுடியாத குற்றமாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக